Published : 01 Sep 2016 09:57 AM
Last Updated : 01 Sep 2016 09:57 AM

வாலில் விளக்குள்ள பூச்சி!

மின்மினிப் பூச்சிகளின் உடலில் உருவாகும் ஒளி இயற்கையின் சுவாரஸ்ய ரகசியம்



சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சென்னைப் பட்டணத்தின் புறநகர்ப் பகுதி ஒன்றில் மனை வாங்கி, வீடு கட்டிக் குடியேறியபோது, சுற்றிலும் நிறையக் காலி மனைகள் இருந்தன. அவற்றில் பலவிதமான தாவரங்களும் புதர்களும் மண்டியிருந்தன. கோடைக் காலங்களில் இருள் சூழும்போது, அவற்றில் வைரத் துளிகளைப் போல மின்மினிகள் ஒளி வீசும். டார்ச் விளக்கின் உதவியுடன் அவற்றைப் பார்த்தால் அவையெல்லாம் புழுக்களாகியிருப்பது தெரியும். அவையெல்லாம் பெண் பூச்சிகள். இறக்கைகள் பெற்றுப் பறப்பவை ஆண் பூச்சிகள். இனப் பெருக்கத்துக்குரிய பருவத்தில் உள்ள பெண் பூச்சிகள், அதை ஆண் பூச்சிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காகத் தாவரங்களின் கிளை உச்சியில் ஏறி ஒளியைப் பரப்புகின்றன.

எல்லா முன்னிரவுகளிலும் மின்மினிகள் தென்படுவதில்லை. வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவை சில குறிப்பிட்ட வரம்புகளுக்குள் இருக்கும்போது மட்டுமே அவை வெளிவருகின்றன. உலகிலுள்ள எல்லா வெப்ப நாடுகளிலும், மித வெப்ப நாடுகளிலும் அத்தகைய சூழல்கள் உள்ளபோது அவை பெருகி வளர்கின்றன. மேற்கிந்தியத் தீவுகளில் குகுயோ என்ற இனத்து மின்மினிகள் பெரிதாகவும் அதிக ஒளி வீசுவதாகவும் இருக்கும். அங்குள்ள பழங்குடி மக்கள் இருட்டில் நடமாடும்போது தம் கால் விரல்களில் மின்மினிகளை ஒட்டிக்கொள்வர். பிரேசில் நாட்டின் பழங்குடிப் பெண்கள் மின்மினிகளைத் தமது கூந்தலில் சூடிக்கொள்வார்கள். ஜப்பானில் மின்மினிகளுக்காக ஒரு திருவிழாவே கொண்டாடப்படுகிறது. பெண்கள் கூண்டுகளில் லட்சக்கணக்கான மின்மினிகளை வளர்த்து, கியோட்டா நகருக்கு அருகிலுள்ள ஏரிக்கு எடுத்துச் சென்று பறக்கவிடுவார்கள். அதைப் பார்த்து ரசித்து ஆரவாரிக்கப் பெரும் கூட்டமே திரளும்.

காதல் ஒளி

மின்மினியின் ஒளி இயற்கையின் பெரும் அற்புதங்களில் ஒன்று. வெப்பம் இல்லாத அந்த ஒளியை உருவாக்க இன்றுவரை மனிதர்களால் இயலவில்லை. விளக்குகளின் ஆற்றலில் பெரும்பகுதி வெப்பமாக வீணாக்கப்படுகிறது. ஆனால், மின்மினியின் ஒளி வீசும் வால் பகுதி, இரவு நேர வெப்பநிலையைவிடக் குறைவாக உள்ளது.

மின்மினிகள் வண்டினத்தைச் சேர்ந்தவை. அவற்றின் முதுகில் கெட்டியான ஓடுபோன்ற பொய்ச் சிறகுகள் இருக்கும். பூச்சி பறக்கும்போது அவற்றின் அடியிலுள்ள மென்மையான மெய்ச் சிறகுகள் வெளிப்படும். பகல் நேரத்தில் அவை ஏதோ சாதாரணமான பூச்சிகளைப் போலவே தோற்றமளிக்கும். கருப்பு நிறம், சாம்பல் நிறம், பழுப்பு நிறம் எனப் பல வகை நிறங்களுடன் அவை காணக் கிடைக்கின்றன. சில தட்டையாக நீண்டிருக்கும்.

ஆண் பூச்சிகள் ஒளிச் சைகை செய்தவாறு மெல்லப் பறக்கும். சராசரியாக 5.8 விநாடிகளுக்கு ஒருமுறை ஒளிச் சைகை தோன்றும். வெப்பநிலை அதிகமாயிருக்கும்போது குறைவான நேர இடைவெளியிலும், வெப்பநிலை குறையக் குறைய அதிகமான நேர இடைவெளியிலும் ஒளிச் சைகைகள் வெளிப்படும். புல் தரையில் மறைவிடங்களிலிருந்து பெண் பூச்சிகள் பதிலுக்கு ஒளிச் சைகைகளை வெளியிடும். ஆச்சரியமூட்டும் விஷயம் எதுவென்றால், ஆண் பூச்சி, பிற ஆண் பூச்சிகளின் சைகைகளிலிருந்து பெண் பூச்சியின் சைகைகளைப் பிரித்தறியும் திறன் பெற்றிருக்கிறது. இரண்டு வகை ஒளிச் சைகைகளும் ஒரே நிறத்தில்தான் இருக்கும். எனினும், ஆண் பூச்சிக்குப் பெண் பூச்சியின் சைகையைத் தனித்து அடையாளம் காண முடிகிறது.

பெண் பூச்சி வெளியிடும் ஒளி மிகவும் பொலிவு குறைவானது. ஆண் பூச்சியின் ஒளிச் சைகையைக் கண்ட பின் சரியாக 2.1 விநாடிகள் கழித்துப் பெண் பூச்சி பதிலுக்குச் சைகை செய்கிறது. ஆணும் அதைக் கண்டு, பதிலுக்குப் பதில் சைகை செய்தவாறு பெண் பூச்சியை நோக்கிப் பறந்தோடி வரும். ஆய்வர்கள் ஆண் பூச்சியைப் பிடிப்பதற்கு, பெண் பூச்சியைப் போலவே ஆண் பூச்சியின் ஒளி வீசலுக்குச் சரியாக 2.1 விநாடி கழித்து சிறிய டார்ச் விளக்கின் ஒளியை அணைத்து அணைத்து வீசுவார்கள்.

ஒளியின் மூலம்

அரிதாக வீட்டுச் சுவர்களில் மின்மினிகள் வந்து அமர்வது உண்டு. அப்போது, அதை மெல்ல நெருங்கிப் பார்த்தால், அதன் வயிற்றின் கடைசிக் கண்டங்களில் மங்கலாக ஒளி வீசும் உறுப்புகளைக் காணலாம். அந்த ஒளி தொடர்ச்சியானதாயிருக்கும். அவ்வப்போது திடீர் திடீரென்று பொலிவு கூடும். பின்னர் குறையும். ஒரு விநாடிக்கும் குறைவான தாள கதியுடன் பொலிவு கூடுவதும் குறைவதுமாயிருக்கும். பூச்சிக்கு ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்படுமானால், அதன் ஒளி ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே சீராக வெளிப்படத் தொடங்கும்.

மின்மினியின் ஒளி வீசும் உறுப்புகளில் திசுக்கள் இரண்டு அடுக்குகளாக அமைந்திருக்கும். அந்த உறுப்புகளின் மேல்பரப்புக்கு அருகில் குருணைகளைப் போன்ற பொருட்களின் ஒரு படலம் உள்ளது. அதனடியில் படிக செல்களாலான ஒரு படலம் ஒரு பிரதிபலிப்பானாகச் செயல்படுகிறது. குருணைகளில் ஒளி உற்பத்தியாகிறது. அவற்றினூடாகக் காற்று செல்லும் குழல்களும் நரம்புகளும் கொண்ட ஒரு வலையமைப்பு பரவியிருக்கிறது. தணல் கரியை ஊதினால் அதன் பிரகாசம் அதிகரிப்பதைப் போல, மின்மினி தன் உடலை உப்பச் செய்து காற்றை உள்ளிழுக்கும்போது, காற்றுக் குழல்கள் திறந்துகொண்டு, குருணைகளின் மேல் காற்றின் ஆக்சிஜன் பட்டு அவற்றின் பொலிவு கூடுகிறது.

விவசாயிகளின் நண்பன்

ஆய்வர்கள் மின்மினியின் உடலிலிருந்து அந்தக் குருணைகளைப் பிரித்தெடுத்துச் சுத்தமான ஆக்சிஜன் நிரம்பிய ஜாடிக்குள் வைத்துப் பார்த்தார்கள். அவை சிறிதுநேரம் இடைவிடாத ஒளி வீசியபின் அணைந்துபோயின. அந்தக் குருணைகளில் உள்ள ஏதோ ஒரு பொருள் ஆக்சிஜன் பட்டதும் ஒளிவீசிவிட்டு உருமாறித் தீர்ந்துபோயிருக்க வேண்டும் என்று ஆய்வர்கள் ஊகித்தனர். அதைப் பிரித்தெடுத்து ஆய்வுசெய்து, அதற்கு ‘லூசிபெரின்’ என்று பெயரிட்டனர். குருணைகளில் இருக்கும் லூசிபெரேஸ் என்ற நொதி, கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு, லூசிபெரினையும் ஆக்சிஜனையும் இணைத்து ஒளி வீசச்செய்கிறது. அந்த இணைப்பைத் தற்காலிகமானதாகவே வைத்திருப்பதன் மூலம், லூசிபெரேஸ் இடைவிடாது இணைப்பதும் பிரிப்பதுமாக மின்மினியின் ஒளி வற்றாமல் தொடருமாறு செய்கிறது.

மின்மினியின் ஒளி எதற்குப் பயன்படுகிறது என்பதில் விஞ்ஞானிகளுக்குள் கருத்தொற்றுமை இல்லை. தன் இணையைச் சைகை காட்டி அழைப்பது மட்டுமே அதன் பயன் அல்ல. சில வகை மின்மினிகள் தமது கூட்டுப்புழுப் பருவம் வரை மட்டுமே ஒளி உறுப்புகளுடன் இருந்து, வளர்ச்சி பெற்றதும் அவற்றை இழந்துவிடுகின்றன. அவை இனப்பெருக்கக் காலத்தில் ஒளி வீசுவதில்லை. வேறு சில இன மின்மினிகள் இடும் முட்டைகள்கூட ஒளி வீசுகின்றன. சில இனத்து மின்மினிகள் பகல் நேரத்தில் மட்டுமே இணை சேரும் வழக்கம் உள்ளவையாக உள்ளன. பூச்சியின் வால்முனையில் மட்டுமே ஒளி வீசுவதால், அது தனக்கு முன்னுள்ள வெளியை வெளிச்சமிட்டுப் பார்ப்பதாகவும் தெரியவில்லை. தன் எதிரிகளை மிரட்டவும் அது ஒளியைப் பயன்படுத்துவதில்லை. பார்க்கப்போனால், இருட்டில் அவற்றைப் பிடித்துத் தின்பதற்கே அதன் எதிரிகளுக்கு அந்த ஒளி உதவுகிறது.

வெப்ப மண்டலச் சதுப்பு நிலங்களில் தவளைகள் வயிறுமுட்ட மின்மினிகளைப் பிடித்து விழுங்கிய பிறகு, தவளைகளின் உள் உறுப்புகள் ‘எக்ஸ்-ரே’படத்தில் உள்ளதைப் போலத் தெரியும். சரி, இவற்றால் மனிதர்களுக்கு நேரடிப் பயன் என்ன? மின்மினிகள் நத்தைகளை அழிப்பதால் அவை விவசாயிகளின் நண்பர்களாக மதிக்கப்படுகின்றன. அவை நத்தையின் மேல் அமர்ந்து தமது உமிழ்நீரால் நத்தையின் சதைப் பகுதியைக் கரைத்து உறிஞ்சிக் குடித்துவிடும்.

- கே.என்.ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x