அம்பலத்து ஆனைகளின் வலி- 2

அம்பலத்து ஆனைகளின் வலி- 2
Updated on
4 min read

பளபளக்கும் முகபடாம், அம்பாரி, சாமரம், குடை என்று கேரள திருவிழாக்களில் அமர்க்களமாக அணிவகுத்து நிற்கும் யானைகளின் கால்கள், வெகு காலமாக சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதால் புண் ஏற்பட்டு சீழ் பிடித்து பரிதாபமாக இருக்கும் நிலையைப் பார்த்தோம். போதுமான உணவு கிடைக்காமல், போதிய ஓய்வு கிடைக்காமல் வளர்ப்பு யானைகள் படும் அவதியும் சோகமும் சொல்லி மாள்வதில்லை.

பணிப்பளு அதிகம்

இடைவிடாமல் நடப்பது, நிற்பது, பாரங்களைச் சுமப்பது, நடப்பதற்கு வசதியாக இல்லாத பாதைகளில் செல்லவேண்டியிருப்பது, வெயில், மழைகளில் நிறுத்தப்படுவது என்று யானைகளுக்கு பணிப்பளு அதிகம். இதனால் அவை களைப்படைந்தாலும் ஓய்வு தரப்படுவதில்லை. உண்பதற்குக் கொடுக்கப்படும் தீனியும் போதுமானதாக இருப்பதில்லை. அதுமட்டுமின்றி, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆகாரங்கள் அதற்குத் தரப்படுவதில்லை. பெரும்பாலும் பனை ஓலை போன்ற குச்சி நிறைந்த உணவே தரப்படுகிறது. இதனால் மலம் இறுகி அஜீரணக் கோளாறும் சேர்ந்துகொள்கிறது. இதில் வேடிக்கை பார்க்கவரும் பையன்களின் விஷமங்கள் வேறு யானைகளைக் கோபமடையச் செய்கின்றன. உடல் வேதனை, மனவேதனை காரணமாகவே, சாதுவாக இருக்கும் யானை திடீரென்று கோபம் கொண்டு பிளிறி அங்குமிங்கும் ஓடி, கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்குகிறது. வாகனங்களைத் தள்ளிவிடுகிறது. பாகன்களை தும்பிக்கையால் இழுத்து, சுழற்றி, கால்களால் நசுக்கி தூர வீசுகிறது.

யானைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் சாதாரணமானதல்ல. ஓலைகளில் உள்ள கூர்மையான குச்சிகள் வயிற்றில் ஜீரண மண்டலச் செயல்பாட்டையே பாதிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று ‘ஆனையை அறியான்’ என்ற புத்தகத்தை எழுதிய டி.பி. சேதுமாதவன் எச்சரிக்கிறார். திருச்சூரின் மன்னுத்தி என்ற இடத்தில் இருக்கும் கேரள கால்நடை, பிராணிகள் அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறைத் தலைவராக இவர் உள்ளார். காடுகளில் வசிக்கும் யானைகள் தன்னிச்சையாக காட்டில் சுமார் 18 மணி நேரம் திரியும். தனக்குப் பிடித்த தழைகளையும், இலைகளையும், தென்னை ஓலை போன்றவற்றையும் வயிறாரச் சாப்பிடும். காட்டில் உள்ள குளங்களிலும் ஆற்றிலும் களைப்பு தீர நீராடும். தன் வயதொத்த யானைகளுடன் குலாவி மகிழும். காலுக்கு இதமான இடங்களில் ஓடி விளையாடும். இவையெல்லாம் கோயில்களிலும் வீடுகளிலும் கட்டிப்போடப்படும் யானைகளுக்கு மறுக்கப்படுகின்றன.

சமீபத்தில் கொச்சியில் காய்கறிக் கடைக்குள் புகுந்த யானை அங்கிருந்த கேரட், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை வயிறாரச் சாப்பிட்டதுடன் அங்கே தொங்கிய வாழைப்பழங்களையும் தின்று, தாகத்தைத் தீர்த்துக்கொள்ள தர்பூசணிப் பழங்களையும் சுவைத்தது. எந்த அளவுக்கு அந்த யானை பட்டினி போடப்பட்டிருந்தது என்பதை அது உணர்த்தியது. கடந்த டிசம்பர் மாதம் கோலாப்பூரில் கோயில் யானையொன்று கொடுமைப்படுத்தப்படுவதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து, அந்த யானையைக் காட்டில் கொண்டுபோய்விட உத்தரவிடப்பட்டு அது அமலும் செய்யப்பட்டது.

யானைகளின் நண்பன்

யானைகளுக்காகப் பரிந்து பேசவும் தொடர்ந்து போராடவும் வி.கே.வெங்கடாசலம் இருக்கிறார். திருச்சூரில் உள்ள பாரம்பரிய பிராணிகள் காப்புப் படையின் செயலாளர் இவர். யானைகளைக் கொடுமைப்படுத்தாதீர்கள் என்று இவர் குரல்கொடுத்தபோது இவரை அடிக்க வந்தவர்கள் சிலர். ஏளனம் செய்தோர் பலர். மிரட்டி எச்சரித்தவர்கள் அனேகம். ஆலய நிர்வாகிகள் மட்டுமல்ல, காவல்துறையினர்கூட இவரை அச்சுறுத்தியுள்ளனர். அப்படியும் 15 ஆண்டுகளாக இடைவிடாமல் போராடி வருகிறார். தவறு செய்யும் உரிமையாளர்கள், பாகன்கள் குறித்து புகார் செய்வார். அவர்கள் மீது வழக்குகள் பதியச் செய்வார். இவருடைய முயற்சியின் பலனாக, கேரள உயர் நீதிமன்றம் இப்படிப்பட்ட பிராணிகளை முறையாக நடத்துவதை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கும் வனத்துறைக்கும் உத்தரவிட்டது. கோயில் திருவிழாக்களின்போது யானைகள் பராமரிப்பைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தனிக் குழுவை நியமிக்க இவருடைய முயற்சியே காரணமானது.

மாணவர்களின் பரிவு

வெங்கடாசலம் கணக்குப் பதிவியல் பாட நிபுணர். ஏராளமான மாணவர்கள் இவரிடம் பயில்கின்றனர். இவருடைய மாணவர்கள் கேரளம் முழுக்க இப்போது வேலை செய்கின்றனர். இவருடைய யானைப் பாசம் அவர்களையும் தொற்றிக்கொண்டுவிட, யானைகளுக்கு எது நேர்ந்தாலும் உடனே இவருக்குத் தகவல் வந்துவிடுகிறது. திருச்சூரில் இருந்தபடியே எல்லா நகர யானைகளையும் இவர் பாதுகாக்கிறார்.

2007 முதல் 2013 வரை 2,896 முறை கேரள யானைகள் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டுள்ளன. 425 யானைகள் இறந்துள்ளன. 183 பாகன்களை யானைகளும் கொன்றுள்ளன.

பிராணிகள் நலனுக்காக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள சட்டபூர்வ வாரியமும் யானைகளின் குடியிருப்பு, உணவு, சுகாதாரப் பராமரிப்பு போன்றவை சாதாரண தரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறது. யானைகள் வைத்துக்கொள்வதைக் கோயில் நிர்வாகங்கள் கைவிட வேண்டும் என்று இது கோருகிறது. அப்படி வைத்துக்கொள்ள விரும்பினால் அவற்றை நல்ல நிலையில் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தேவஸ்வத்துக்கு கண்டனம்

குருவாயூரில் தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான புனத்தூர் கொட்டாய் என்ற இடத்தில் 60 யானைகள் 18.5 ஏக்கரில் பராமரிக்கப்படுகின்றன. உலகிலேயே ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் யானைகள் பராமரிக்கப்படுவது இங்குதான் என்கின்றனர். இங்கும் யானைகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்று கேரள பிராணிகள் நல வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இங்கு பல யானைகளுக்குக் கால்களிலும் பாதங்களிலும் காயங்கள், புண்கள் இருப்பதற்கு அது கண்டனம் தெரிவித்துள்ளது. வாரியம் கண்டித்த பிறகு, மார்ச் 5-ம் தேதி கேரள முதல்வர் தலைமையில் கூட்டம் நடந்தது. யானைகளை முறையாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் அப்போது வலியுறுத்தப்பட்டது.

கேரளத்தில் உள்ள யானைகள் குறித்த தரவுகளை மாநில வனத்துறை திரட்டுகிறது. யானையின் புகைப்படம், வயது, பெயர், எடை, உயரம் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. யானை வைத்திருப்பவர்களுக்கு உரிமைச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

மைக்ரோ சிப்கள்

கேரளத்தில் உண்மையில் எத்தனை யானைகள் வீடுகளிலும் கோயில்களிலும் வளர்க்கப்படுகின்றன என்று தெரியாது என்கிறார் கூடுதல் முதன்மை தலைமை வனக்காப்பாளர் ஓ.பி.கலேர். ‘முரட்டு யானைகள்’ பட்டியல் தயாரிக்கப்பட்டு அவற்றின் காது மடல்களில் ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்படுகின்றன என்று கூறும் கலேர், 705 யானைகளுக்கு இப்படி சிப் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அரிசி அளவே உள்ள இந்த மைக்ரோ சிப் மூலம் யானையின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் யானையைப் பற்றிய தகவல்களையும் பெற்றுவிடலாம்.

கேரளத்தின் யானைகள் பராமரிப்பு, வளர்ப்பு விதிகளின்படி யானைகளை உதைப்பது, அடிப்பது, குத்துவது, யானை மீது சவாரி செய்வது, சங்கிலியால் நீண்டநேரம் கட்டி வைப்பது, நடமாட முடியாமல் செய்வது, நீண்ட தொலைவு நடத்திச் செல்வது, நிற்க வைப்பது, போதிய உணவு தராமல் பட்டினி போடுவது, காயங்களுக்கும் நோய்க்கும் சிகிச்சை அளிக்காமல் துன்புறுத்துவது அனைத்துமே குற்றங்களாகும். ஆனால் நடவடிக்கைகள்தான் இல்லை. கேட்டால், ‘ஊழியர் பற்றாக்குறை’ என்று பதில் வருகிறது.

இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் ‘யூ டியூப்' மூலம் யானைகள் படும் சித்ரவதைகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். அதிகம் வேலை வாங்கப்பட்டதால் களைத்துப்போன யானையை அதன் பாகன்கள் மரத்தில் கட்டிவைத்து சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்கியதை ‘யூ டியூபில்' பார்த்து பதறாத நெஞ்சங்களே இல்லை. கொல்லத்தில் நடைபெறும் கோயில் திருவிழா

வுக்கு தொலைதூரத்திலிருந்து நடத்தியே கூட்டிவரப்பட்ட யானை சாலையிலேயே சுருண்டு விழுந்து இறந்ததை இன்னொரு ‘யூ டியூப்' காட்சி காட்டியது.

2004-ல் பிரிஸ்டலில் நடைபெற்ற ‘வைல்ட் ஸ்கிரீன்’ திரைப்பட விழாவில், 63 நிமிடங்கள் ஓடும் தனது ‘18-வது யானை, 3 ஒற்றை வார்த்தைகள்’ ஆவணப் படத்துக்காக ‘பாண்டா’ விருது பெற்ற பி.பாலனும் யானைகளுக்கு மனிதர்கள் செய்யும் கொடுமைகளைக் கண்டு பொங்குகிறார். பிஹாரில் யானைப் பாகன்கள் கோடரி போன்ற அங்குசத்தால் யானைகளைத் துன்புறுத்துகின்றனர் என்கிறார். பிஹாரில் சோனித்பூர் என்ற நடத்தில் நடைபெறும் கஜமேளா உலகப் புகழ்வாய்ந்தது. ஆனால் யானைக்காரர்கள் இதயமே இல்லாதவர்கள் என்று சாடுகிறார்.

பணிக்குழு அறிக்கை

மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை 2010 பிப்ரவரியில் நியமித்த யானைகள் பணிக்குழு அளித்த பரிந்துரையை ஏற்று, தேசிய பாரம்பரிய பிராணியாக யானையை மத்திய அரசு அறிவித்தது. அந்த பணிக்குழுவுக்கு டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் மகேஷ் ரங்கராஜன் தலைமை தாங்கினார். யானைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்க, யானைகளைத் தனியார் வளர்க்க தடை விதிக்க வேண்டும். பிஹாரில் நடைபெறும் சோனித்பூர் கஜமேளாவை நிறுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரை செய்தது. காட்டு யானைகளாக இருந்தாலும் வீட்டில் வளர்க்கப்படும் யானைகளாக இருந்தாலும் இந்திய வனவிலங்கு சட்டப்படி பாதுகாக்கப்பட்டவையாகும். புலிகளைக் காக்க தேசிய அளவில் தேசிய புலிகள் காப்பு ஆணையம் இருப்பதைப்போல யானைகளுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரை செய்தது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.

யானைகள் பாதுகாப்புக்காக சொல்லப்பட்ட பரிந்துரைகளால் யானைகளின் பரிதாப நிலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டதுதான் ஒரே பலன் என்று அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த சுபர்ணா கங்குலி தெரிவிக்கிறார். அதே சமயம் யானைகளைத் துன்புறுத்துவது அதிகரித்து விட்டது என்றும் வருத்தப்படுகிறார்.

யானையை விடமாட்டோம் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கலம்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஹரிதாஸ், பரமேஸ்வரன். தங்கள் வீட்டு வளாகத்தில் 14 யானைகளைப் பராமரிக்கின்றனர். 1978-ல் முதல்முறையாக உத்தரப்பிரதேசத்தில் இருந்து யானையை விலைக்கு வாங்கினார்களாம். அதுமுதல் அவர்களது வீட்டில்யானைகள் இருக்கின்றன. ‘‘ஒரு நாளுக்கு ஒரு யானைக்கு தீனி வைக்க ரூ.3,500 செலவாகிறது. பண்டிகைக் காலங்களில் ஒரு யானை மூலம் ரூ.35 ஆயிரம் கிடைக்கிறது. இப்போது யானையை வாடகைக்கு எடுப்பது குறைந்து வருகிறது. அதிகாரிகள் சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்துவதால் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு யானைகளை எளிதாகக் கூட்டிச்செல்ல முடிவதில்லை. என்ன கஷ்டம் வந்தாலும் சரி, யானைகளை நாங்கள் விற்கமாட்டோம்’’ என்கின்றனர்.

இவர்களுடைய கஷ்டம் இருக்கட்டும்.. யானைகளின் கஷ்டங்கள் தீருவது எப்போது?

கட்டுரையாளர்: ஜி. ஷாஹித் (கொச்சியில் மாத்ருபூமி நாளிதழின் சட்டம், சுற்றுச்சூழல் செய்தித் துறைத் தலைவர், படங்கள்: என்.ஏ. நசீர் (உதகையைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்படக்காரர்)

©: பிரன்ட் லைன், The Pain of Being A Temple Elephant (மார்ச் 08 – 21, 2014 இதழ்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in