Last Updated : 05 Nov, 2013 10:00 AM

 

Published : 05 Nov 2013 10:00 AM
Last Updated : 05 Nov 2013 10:00 AM

சென்னை லௌகிக சங்கம்

பூமி உருண்டையானது எனும் கோப்பர் நிக்கஸ் கருத்தை எடுத்துப் பேசியதால், புரூனோ (1548-1600) ஐரோப்பாவில், கிறித்தவப் பாதிரியார்களால் உயிரோடு வைத்துக் கொளுத்தப்பட்டார். இது அன்றைய உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை எதிர்த்துக் கிறித்தவ மடாலய எதிர்ப்பு இயக்கங்கள் உருவாயின. இவ்வியக்கம், சுய சிந்தனையாளர்கள் இயக்கம் என்று பின்னர் வடிவம் பெற்றது. மத, கடவுள் நம்பிக்கைகளை எதிர்த்து எழுதவும் பேசவும் முற்பட்டனர். ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இவ்வகையான இயக்கங்கள் வீரியமாகச் செயல்பட்டன. இவர்கள் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று அழைத்துக்கொண்டனர்.

வால்டேர், தாமஸ் பெயின், இங்கர்சால் சிந்தனைகளை இவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். 17-ம் நூற்றாண்டின் இடைக்காலங்களில், பிரிட்டனில் லண்டன் சமயச் சார்பற்ற இயக்கம் பெரும் செல்வாக்குடன் செயல்பட்டது. இதன் தலைவராக சார்லஸ் பிராட்லா (1833-1891) செயல்பட்டார். இவருக்குத் துணையாகத் தமது இளமைக் காலத்தில் அன்னிபெசன்ட் இருந்தார். சமயச் சார்பற்ற இயக்கத்தின் முதன்மையான செயல்பாட்டாளராகவும் அன்னிபெசன்ட் இருந்தார். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுதும் செயல்பட்ட அமைப்பு தேசிய சமயச் சார்பற்ற அமைப்பு என்று அழைக்கப்பட்டது. பல்வேறு இதழ்களை நடத்தினர். சிறுசிறு வெளியீடுகளை நூற்றுக் கணக்கில் வெளியிட்டனர். லண்டன் நாடாளுமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்ட பிராட்லா, தமது பதவியேற்பைக் கடவுளின் பெயரால் நிகழ்த்த முடியாது என மறுத்தார். அதனால், அவரை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க மறுத்தனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நாடாளுமன்றத்துக்குள் போகும் வாய்ப்பை நான்கு ஆண்டுகாலப் போராட்டத்தின் மூலம் அவர் சாத்தியமாக்கினார்.

லண்டனின் நேரடிக் கிளை

லண்டனில் செயல்பட்ட இந்த அமைப்பின் நேரடிக் கிளையாகச் சென்னையில் செயல்பட்ட அமைப்புதான் சென்னை லௌகிக சங்கம். இந்த அமைப்புகுறித்த விவரங்கள் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் நடத்திய இதழ்கள் இப்போது கிடைத்துள்ளன. அவற்றில் ‘தத்துவ விவேசினி’, ‘தி திங்கர்’ எனும் இரண்டு வார இதழ்களில் உள்ள செய்திகளை ஆறு தொகுதிகளாக 3,500 பக்கங்களாக ஆக்கியுள்ளேன்.

இவ்விதழ்கள் சென்னை லௌகிக சங்கத்தினரால் 1882-1888-ம் ஆண்டுகளில் நடத்தப்பெற்றவை. 1878 -79-ம் ஆண்டுகளில் ‘தத்துவ விசாரிணி’(Philosophic Enquirer) இவ்வமைப்பினரால் இரண்டு இதழ்கள் நடத்தப்பெற்றன. 1882 வரை ‘தத்துவ விசாரிணி’ இதழ் வெளிவந்திருப்பதை அறிய முடிகிறது. ஆனால், இவ்விரு இதழ்களும் இப்போது கிடைக்கவில்லை. 1882-1888 காலங்களில் இவர்களால் நடத்தப்பெற்ற இதழ்கள் கிடைத்துள்ளன. இவ்விதழ்கள் மூலம், இவ்வியக்கம் தொடர்பான விரிவான விவரங்கள் முதன் முதல் தமிழ்ச் சூழலில் பதிவாகிறது.

இந்து சுயக்கியானிகள் சங்கம்

இவ்வமைப்பினர் தொடக்கத்தில் தங்களை ‘இந்து சுயக்கியானிகள் சங்கம்’ (Hindu Free thought Union) என்று அழைத்துக்கொண்டனர். இந்து எனும் சொல் ஐரோப்பியர் அல்லாத இந்தியர்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இந்து எனும் சமயப் பொருளில் பயன்படுத்தவில்லை. சுயக்கியானி எனும் சொல் சுயசிந்தனையாளர்கள் எனும் பொருள்கொண்டது. இந்தப் பெயரை 1886ல் சென்னை லௌகிக சங்கம் (Madras Secular Society) என்று மாற்றிக்கொண்டனர். இவர்கள் தங்களை லண்டனில் செயல்படும் தேசிய சமயச் சார்பற்ற அமைப்பின் நேரடிக் கிளையாகக் கொண்டிருந்தனர். தேசிய சமயச் சார்பற்ற அமைப்பின் லண்டன் கிளை, எவ்விதம் லண்டன் சமயச் சார்பற்ற அமைப்பு என்ற பெயரில் செயல்பட்டதோ, அதைப் போன்று சென்னையிலும் சமயச் சார்பற்ற அமைப்பாகச் செயல்பட்டனர். லண்டன் அமைப்பு வெளியிடும் அனைத்து வெளியீடுகளையும் இவர்கள் வரவழைத்து இந்தியா முழுவதும் கொண்டுசென்றனர். கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், ஆதமாபாத், கொழும்பு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்.

இவர்கள் தங்கள் பெயரை அறிவித்துக் கொண்டு செயல்படும் நேரடி உறுப்பினர்கள், பெயரை அறிவிக்காமல் முன்னெழுத்துக்கள் மற்றும் புனைபெயர்களில் செயல்படும் உறுப்பினர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இவர்களால் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட கட்டுரைகள், இவர்கள் நடத்திய இதழ்களில் வெளிவந்தன. குறுநூல்களை வெளியிடுவதற்கு என ஓர் அமைப்பை உருவாக்கியிருந்தனர். அது ‘சென்னை சுயசிந்தனையாளர்கள் குறுநூல் வெளியீட்டு அமைப்பு’ என்று அழைக்கப்பட்டது. ‘சிறுபத்திரிகா பிரகடந சங்கம்’ என்று அதை அழைத்தனர்.

மூடநம்பிக்கை ஒழிப்பில்...

மக்கள்தொகைப் பெருக்கத்தால்தான் வறுமை உருவாகிறது என கருத்துப் பிரச்சாரம் செய்வதற்கு ‘மால்தூசியன் லீக்’ என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டனர். சென்னை நகரத்தில் செயல்பட்ட பாலியல் தொழிலாளர்களைத் திருத்த முயற்சி மேற்கொண்டனர். வறுமையால்தான் பாலியல் தொழில் நடைபெறுகிறது என்றும் எழுதினர். கடவுள் நம்பிக்கை, பேய்-பிசாசு நம்பிக்கை, பல்வேறு சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். மூடநம்பிக்கைகள் என்றனர். மூடநம்பிக்கை ஒழிப்பை முதன்மையான செயல்பாடுகளில் ஒன்றாகக் கருதினர். ஒரு கட்டுரையின் தலைப்பு ‘பெரிய பாளையத்தம்மன் கோயிலுக்குப் போவானேன்; பேதி வாந்தி வந்து சாவானேன்?’ என்று இருக்கிறது. மூடநம்பிக்கை, சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை ஆகியவற்றுக்கு மறுப்பையும் பெண் அடிமைத்தனத்துக்கு எதிர் மன நிலையையும் தங்களது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளனர்.

இவர்கள் எந்தச் சமயத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கிறித்தவம், குறிப்பாக பைபிள் கருத்துகளை விமர்சனம் செய்து தொடர்ந்து எழுதினர். சென்னை கிறித்தவக் கல்லூரி இதழ், இவர்களை மறுத்து அப்போது கட்டுரைகளை வெளியிட்டது. சென்னை லௌகிக சங்கத்தினரின் கருத்துகளை மறுத்து, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘உதயதாரகை’ பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரைகளை யாழ்ப்பாணத்தின் ச.சபாரத்தின முதலியார் ‘ஈச்சுவர நிச்சயம்’, ‘பிரபஞ்ச விசாரம்’ எனும் இரு நூல்களாக வெளியிட்டார். சென்னையில் செயல்பட்ட சோமசுந்தர நாயகர் இவர்களை எதிர்த்து எழுதினார்.

தமிழ் அறிவியல் எழுத்துக்களின் முன்னோடி

புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து தங்கள் பத்திரிகைகளில் எழுதிய இவர்கள் தனிமங்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் விரிவான கட்டுரைகளை வெளியிட்டு உள்ளனர். அறிவியல் செய்திகளை இதழில் எழுதுவதற்கு இவர்கள் உருவாக்கிக் கொண்ட தமிழ்க் கலைச்சொற்கள் அற்புத மானவை. டார்வின் பரிணாமக் கோட்பாடு குறித்துத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள்தான். டார்வின் கோட்பாடு கடவுள் மறுப்புக்கு அடிப்படையாக அமைகிறது என விளக்கினர். ஐரோப்பியரால் உருவான புத்தொளி மரபின் அனைத்துக் கூறுகளையும் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்த இவர்கள் எத்தனித்தனர். இவ்வகையான அணுகுமுறை காலனிய இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. சென்னை நகரத்தின் இவ்வமைப்புதான் காலனியப் புத்தொளி மரபின் நேர்வாரிசாக அமைகிறது.

- வீ.அரசு, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் - தொடர்புக்கு arasuveerasami@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x