இஸ்லாமிய வெறுப்பு எனும் தொழில்
அமெரிக்காவின் மக்கள்தொகையில் இஸ்லாமியர்கள் 1%. அதாவது 33 லட்சம் பேர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு வகையான பாகுபாட்டுக்கு ஆளாகின்றனர். ஐந்தில் ஒருவர் தினமும் பாகுபாட்டைச் சந்திக்கிறார்.
கடந்த ஆண்டில் மட்டும் ஃபுளோரிடா மாகாணத்தில் இஸ்லாமியருக்கு எதிரான குற்றங்கள் 500% அதிகரித்துள்ளன. அங்குள்ள பல மசூதிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமியக் குழுக்களுக்கு எதிரான வெடிகுண்டு மிரட்டல்களும் அதிகரித்துள்ளன. ஃபுளோரிடா அரசாங்கம் பாடப் புத்தகங்களில் இஸ்லாம் பற்றிய வரலாறே வராமல் தடுக்க முயல்கிறது.
இஸ்லாமிய வெறுப்பு அமெரிக்க மக்களிடையே பரவுவதை அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் அமெரிக்க - இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சிலும் இணைந்து ஆய்வுசெய்துள்ளன.
இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புகிற குழுக்கள் பல ரகம் என்கிறது அந்த ஆய்வு. பெண்ணிய அமைப்புகள், கிறிஸ்துவ அமைப்புகள், யூத அமைப்புகள், சில செய்தி நிறுவனங்கள் என அவை வகைவகையாக உள்ளன. இத்தகைய 74 குழுக்களின் பட்டியலையும் அவர்கள் தயாரித்துள்ளனர். நிதியளிப்பது, கருத்துகளைப் பரப்புவது என்று இருவிதமாக அவர்கள் செயல்படுகின்றனர். “இது முழுமையான ஒரு தொழிலைப் போல இயங்குகிறது. 2008 முதல் 2013 வரை யான ஐந்தாண்டுகளில் மட்டும் 200 மில்லியன் டாலர்களுக்கு மேலான பணம் விளையாடியுள்ளது’’ என்கிறார் கவுன்சில் செய்தித் தொடர்பாளரான வில்பிரெடோ அம்ர் ருய்ஸ்.
இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பரப்பப்படும் இந்த வெறுப்பால்தான் குற்றங்கள் அதிகரித்திருப்பதையும் இஸ்லாமிய விரோத சட்டங்கள் உருவாவதையும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவில் 2013 முதலாக இஸ்லாமியர் தொடர்பாக 81 மசோதாக்களும் சட்டத் திருத்தங்களும் வந்துள்ளன. பெரும்பாலானவற்றை அமெரிக்காவின் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ளது.
இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் நடத்துகிற தாக்குதல்களின் மூலம் பரவுவதைவிட, அதிகமான வெறுப்பு அரசியல்வாதிகளின் வெறுப்புணர்வால் பரவுகிறது.
இஸ்லாமின் ஷரியா சட்டத்துக்கோ அல்லது அந்நியச் சட்டங்களுக்கு எதிராகவோ சட்டங்களைக் கொண்டுவர வேண் டும் என்று 32 அமெரிக்க மாகாணங்கள் விவாதித்துள்ளன. அவற்றுக்கான மசோதாக்களையும் தயார் செய்துள்ளன.
அமெரிக்காவின் 2008, 2012 தேர்தல்களிலேயே இத்தகைய வெறுப்பு வெளிப்பட்டுள்ளது. தற்போதைய தேர்தலிலும் அது எதிரொலிக்கிறது என்கிறது அந்த ஆய்வு.
தொகுப்பு: த.நீதிராஜன்
