Last Updated : 18 Sep, 2013 10:52 AM

 

Published : 18 Sep 2013 10:52 AM
Last Updated : 18 Sep 2013 10:52 AM

GLOBE ஜாமூன் - தண்ணீர் டானிக்!

எம்பெருமான் நமக்கு எப்போதாவது மழை தருகிறார். காவிரித்தாய் கைவிரித்தாலும் காவியத்தாய் பத்து ரூபாய்க்கு பாட்டிலில் அடைத்தாவது குடிக்க நீர் கொடுப்பேன் என்கிறார். மெட்ரோ வாட்டர் இருக்கிறது. மினரல் வாட்டர் இருக்கிறது. கிணறுகள் இல்லாது போனாலும் போர் போட்டுக் குடைந்தால் பீறிட்டுப் பொங்கும் தண்ணீர்ச் செல்வத்துக்குப் பெரும்பஞ்சம் இங்கில்லை. தண்ணீர்ப் பஞ்ச காலங்களில் கூட எப்படியோ சமாளித்துக் கடந்துவந்து விடுகிறோம். கொஞ்சம் நன்றி வேண்டும். நீரின்றி அமையாது உலகு.

ஆனால் இயற்கை சொல்லிச் சொல்லிப் பழிவாங்கும் பிராந்தியங்கள் உலகில் நிறையவே இருக்கின்றன. தண்ணீருக்காக தினசரி பல கிலோ மீட்டர்கள் நடப்பதை வேண்டுதலாக அல்லாமல், விதியாக எண்ணி வாழப் பழகிய பெருங்கூட்டம் ஒன்றுண்டு. ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் இது காலம் காலமாக இருப்பது. கென்யா, எத்தியோப்பியா, சூடான், துனிஷியாவெல்லாம் ஊரறிந்த பெயர்கள். வெனிசூலா, கியூபாவில் எல்லாம்கூட தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுவதாக யுனெஸ்கோ சொல்கிறது. அடுத்த பெரும் யுத்தங்களை எண்ணெய் தீர்மானிக்குமென்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தண்ணீரால்தான் தகராறே வரப்போகிறது.

இவ்வாறான பஞ்சப் பிராந்தியங்களில், இன்று தண்ணீர் குடித்தேன் என்று ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கொள்ளும் அவலத்தைக் கற்பனையில்கூட நம்மால் முழுதாகப் புரிந்துகொள்ள இயலாது. தம்மால் முடிந்ததை அரசாங்கங்களும் பொதுநல அமைப்புகளும் இங்கெல்லாம் செய்துகொண்டுதான் இருக்கின்றன. என்ன செய்தாலும் நாளுக்கு நாலு ஸ்பூன் டானிக் மாதிரி அளந்து குடி என்பதெல்லாம் யாருக்குக் கட்டுப்படியாகும்?

இங்கே பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வகையறாக்களைக் கொடுத்துக் குஷிப் படுத்துவதுபோல எப்போதாவது கிரக சஞ்சாரம் சரியாக அமைந்து கொஞ்சம் தாராளமாகத் தண்ணீர் கிடைத்தால் மேற்படி தேசத்து ராசாக்கள் அதைத்தான் பகுத்துக் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொள்வார்கள். உற்பத்தி செய்து விதியை மாற்றலாம் என்றால் செய்திருக்க மாட்டார்களா? தண்ணீருக்கு மாற்றாகக் கண்ணீரைத்தான் கைகாட்ட வேண்டிய நிலைமை.

கிடக்கட்டும் சோக புராணம். நேற்றைக்கு கென்யாவில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. தண்ணீர் ததிங்கிணத்தோமில் தலையாய தேசம்தான். என்னென்னவோ செய்து பார்த்தும் பல்லாண்டு காலமாக தேசத்தின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வழி தேடி விழி பிதுங்கி நின்ற நாடுதான். வெடித்த மண் பாளங்களைத் தவிர வேறெதுவும் பார்த்திராத மக்களுக்கு அந்தச் செய்தி நம்பமுடியாத பேரதிசயமாகப் போய்விட்டது.

கென்யாவின் வடமேற்கு எல்லைப்புறப் பகுதியில் (டர்க்கானா என்ற ஆதி இனக்குழுவினர் சுமார் ஒரு கோடி பேர் வாழும் பிராந்தியம்.) போன வருஷம் எண்ணெய் கிடைக்கிறதா என்று குடைந்து பார்த்து ஒரு பெரிய எண்ணெய்க் கிணற்றைக் கண்டுபிடித்தார்கள். எண்ணெய் இருக்கிறது என்று சொல்லிவிட்டால் முதலீட்டாளர்கள் சும்மா இருப்பார்களா? உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு, உடனடி அந்தஸ்துயர்வு, அடிப்படை வாழ்க்கைத் தரத்தை அப்படியே தூக்கி செண்ட்ரலைஸ்டு ஏசி செய்யப்பட்ட செகண்ட் ஃப்ளோரில் வைக்கிறேனா இல்லையா பார் என்று வரிந்துகட்டிக்கொண்டு வந்தார்கள். நாளது தேதியில் எண்ணெய் எடுப்பு முஸ்தீபுகள் தீவிரமாகவே நடந்துகொண்டிருக்கின்றன.

இப்போது எம்பெருமான் அங்கே இன்னொரு கிணறு தோண்டச் சொல்லியிருக்கிறான். இந்தக் கிணற்றில் எண்ணெய் கிடையாது. ஆனால் கென்ய மக்களுக்கு எது எண்ணெயைக் காட்டிலும் உன்னதமோ அது இருக்கும் கிணறு. தண்ணீரய்யா, தண்ணீர்! பிராந்தியத்தில் சுமார் இருநூறு பில்லியன் க்யூபிக் மீட்டர் (அப்படின்னா?) தண்ணீர் ஸ்டாக் இருக்கிறது என்று யுனெஸ்கோ சொல்லிவிட்டது.

நேற்று திருவோணம். அங்கே தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் இரண்டு வாரத்தில் தமிழ் சினிமா சண்டைக் காட்சிகளில் ஹீரோவானவர் குழாயைப் பிடுங்கி எதிரிகளைப் பந்தாடும்போது பீய்ச்சியடிப்பதுபோல அடிக்கத் தொடங்கிவிடும்.

கென்யாவில் தண்ணீர் என்பது அரசு சொத்து. தனியார் ஒன்றும் செய்ய முடியாது அங்கே. அரசு பார்த்து காண்ட்ராக்ட் கொடுத்தால் தோண்டலாம். எடு என்றால் எடுக்கலாம். விடு என்றால் விட்டுவிட்டுப் போகவேண்டியதுதான். ஆனாலும் போன வருஷம் எண்ணெய் இருப்பு தெரிந்தபோது முந்திக்கொள்ளப் பார்த்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கையைவிட இன்று தண்ணீர் இருப்பு தெரிந்தபின் படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகமே.

ஊழல் இருக்கத்தான் செய்யும். கமிஷன் வாழத்தான் செய்யும். நெல்லுக்குப் போகிற வழியில் புல்லுக்காட்டுக்கு வாய்க்கால் வெட்டத்தான் செய்வார்கள். ஆனாலும் சராசரி மக்களின் தாகம் சகாய முறையில் தணிவிக்கப்படுவதும் நடக்கவே செய்யும்.

கென்யாவில் தண்ணீர், கிடைத்தால் செய்தி. நமக்குக் கிடைக்காவிட்டால் செய்தி. தீர்ந்தது விஷயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x