

எழுவாயை ஒரு வாக்கியத்தில் எங்கே அமைப்பது என்பது பற்றிக் கடந்த வாரம் பேசினோம். ‘இறந்துபோன சங்கரனின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்னும் வாக்கியத்தில் இறந்தது யார் என்னும் குழப்பத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதற்குப் பலரும் பதிலளித்திருக்கிறார்கள்.
1. இறந்துபோன சங்கரன், தனது தாயாரோடு திருவல்லிக் கேணியில் வசித்துவந்தார்.
2. சங்கரனின் இறந்துபோன தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்.
ஆகிய இரு வாக்கியங்களை பாலசுப்பிரமணியன் தேவராஜ் என்னும் வாசகர் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு வாக்கியங்களிலும் யார் இறந்தது என்பது தெளிவாக இருக்கிறது. முதல் வாக்கியத்தில் ‘தனது தாயாரோடு’ என்ற சொற்கள் மூல வாக்கியத்தில் இல்லாத ஒரு தகவலைச் சொல்கின்றன. மூல வாக்கியத்தில் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்ததாகத் தெளிவாகவே சொல்கிறது. சங்கரன் தங்கியிருந்த இடம்பற்றிய தகவல் அதில் இல்லை. இந்தத் தகவலைச் சேர்க்காமலேயே இறந்தது யார் என்பதை ஒரே வாக்கியத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.
“சங்கரன் இறந்துவிட்டதாகத் தெரிவிக்க வேண்டுமாயின், ‘இறந்துபோன சங்கரன், தனது தாயாருடன் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று கூறலாம். சங்கரனின் தாயார் இறந்துவிட்டதைத் தெரிவிக்க, ‘இறந்துபோன தனது தாயாருடன் சங்கரன் அவரது இறுதிக்காலம்வரை திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று கூறலாம் என வீ.சக்திவேல் (தே.கல்லுப் பட்டி) எழுதியிருக்கிறார். இந்த வாக்கியங்களிலும் ‘தனது தாயாருடன்’ என்றும் ‘தனது தாயாருடன் அவரது இறுதிக் காலம்வரை’என்றும் புதிய தகவல்கள் சேருகின்றன.
“சங்கரனின் இறந்துபோன தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார் என்று மாற்றலாம். தொல்காப்பியமும் புலிகொல் யானை என்ற தொடரைச் சுட்டும். இது புலியால் கொல்லப்பட்ட யானையா அல்லது புலியைக் கொன்ற யானையா என்ற மயக்கத்தைத் தருகிறது. இதற்குத் தடுமாறு தொழிற்பெயர் என்று பெயர்” என முனைவர் அ.ஜெயக்குமார் சொல்வது இந்தச் சிக்கலை ஒருவாறு தீர்த்துவைக்கிறது. இறந்துபோனது சங்கரன் என்றால், இந்த வாக்கியம் எப்படி அமையும் என்னும் கேள்வி இன்னமும் எஞ்சியிருக்கிறது. ‘இறந்துபோன சங்கரன் என்பவரின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கலாம்.
தங்கள் மேலான கருத்துக்களின் மூலம் இந்த விவாதத்தைச் செழுமைப்படுத்திய அனைவருக்கும் நன்றி. நாம் வாக்கியங்களை அமைக்கும் விதம் குறித்த பரிசீலனையை நமக்குள் ஏற்படுத்துவதுதான் இதுபோன்ற சவால்களின் நோக்கம். ஒரே வாக்கியத்தில்தான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. சொல்லவரும் பொருள் / தகவல் குழப்பமின்றி, பிழையின்றிச் சொல்லப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். எழுவாயை அமைக்கும் இடத்தை இந்தக் கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை செய்தாலே பெரும்பாலான வாக்கியங்கள் தெளிவாகிவிடும்.
ஒரு வாக்கியத்தை அமைக்கும்போது, அதன் எழுவாய் (Subject) என்ன செய்கிறது அல்லது என்ன ஆகிறது என்பது பற்றிய குழப்பம் நேரக் கூடாது. எனவே, எழுவாய்க்கான வினை அல்லது விளைவு அல்லது தகவலைக் கூடியவரை அந்த எழுவாய்க்குப் பக்கத்திலேயே அமைத்துவிடலாம்.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in