Published : 01 Nov 2013 09:30 AM
Last Updated : 01 Nov 2013 09:30 AM

இசையின் 865 நிறங்கள்

தற்செயலாகத்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவருடைய பெயர் ஸ்டீஃபான் ஹினிக்கன். கனடாவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் குடிபெயர்ந்த ஐரிஸ்காரர். இசை வாத்தியங்களைச் சேகரிப்பவர். தபால் தலை சேகரிப்பவர்கள், காசுக் குற்றிகள் சேகரிப்பவர்கள் என்று பார்த்திருக்கிறேன். இசை வாத்தியங்கள் சேகரிப்பவரை எங்கே காண முடிகிறது? அவர் வாழ்நாள் முழுக்கச் சேகரித்த வாத்தியங்கள் அவருடைய வீட்டுக்குச் சென்றபோது பார்வையிடக் கிடைத்தன.

ஆறடி உயரமான மனிதர். மெலிந்த ஆனால் வலுவான தேகக்கட்டு. வயது 50 - 55 இருக்கலாம். ஒன்பது வயதுப் பையனைப் போல முகத்தில் சிவப்புச் சிரிப்புடன் குதூகலமாக வரவேற்றார். அந்த அறை முழுக்க ஒருவித ஒழுங்குமில்லாமல் வாத்தியங்கள் கிடந்தன. சில உயரத்தில் மரப்பலகைகளில் அடுக்கப்பட்டுக் காணப்பட்டன. சில தரையில். எத்தனை வாத்தியங்கள் உள்ளன என்ற கேள்விக்கு “865 வாத்தியங்கள்” எனச் சட்டென்று சொன்னார். அந்தப் பதில் திடுக்கிட வைத்தது. எண்ணிக்கையில் அல்ல; அத்தனை துல்லியமாக அவர் கணக்கு வைத்திருக்கிறார் என்பதை நினைத்தபோது. ஏதாவது புது வாத்தியம்பற்றி கேள்விப்பட்டால் அதை அந்த நாட்டிலிருந்து உடனுக்குடன் தருவித்துவிடுவார். ஒரு வாத்தியத்தை நான் தொட்டதும், அது எந்த நாட்டைச் சேர்ந்தது, அதன் சரித்திரம் என்ன, எப்போது அதை வாங்கினார் என்று சொல்லியபடியே வாசிக்கத் தொடங்கி விடுவார். சில தோல் வாத்தியங்கள். சில தந்தி வாத்தியங்கள். சில காற்று வாத்தியங்கள். அத்தனை வாத்தியங்களையும் மிக எளிதாகவும் லாவகமாகவும் வாசித்தார். தவில், உடுக்கை, பறை, தப்பு, மத்தளம் போன்ற தமிழ் வாத்தி யங்களும் அவர் சேகரத்தில் இருந்தன. கோயில்களில் காணப் படும் சங்கை எடுத்துத் தம் பிடித்து ஊதிக்காட்டிவிட்டு, அதே ஒன்பது வயதுப் பையன்போலப் பாராட்டுக்காகக் காத்திருந்தார்.

அவர் சென்னை யிலே பிரபலமான லக்ஷ்மண் ஸ்ருதி இசை வாத்தி யக் கூடத்துக்கு ஒருமுறை போனதுண்டு. அவர் சென்ற சமயம், ஒரு யப்பானியச் சுற்றுலாக்காரர், சாரங்கி வாத்தியத்தைச் சுட்டிக்காட்டி அது என்னவென்று விசாரித்திருக்கிறார். கடைக்காரருக்கு அதன் பெயர் உடனே நினைவுக்கு வரவில்லை. ஸ்டீஃபான் அந்த வாத்தியம் சாரங்கி என்று சொன்னது மட்டுமல்லாமல், கடகடவென்று அதன் சரித்திரத்தை விவரித்து, உடனேயே சுருதி கூட்டி வாசித்தும் காட்டியிருக்கிறார். யப்பானியப் பயணிக்கு இசைக்கருவி பிடித்துவிட்டது. யோசிக்காமல் காசு கொடுத்து வாத்தியத்தை வாங்கிப்போனார். தமிழ்நாட்டுக் கடையில், ஒரு வடநாட்டு வாத்தியத்தை, கனடாவிலிருந்து போன ஐரிஸ்காரர், யப்பானியச் சுற்றுலாக்காரருக்கு விற்றுச் சாதனை படைத்தார். இசைக் கூடத்துக்குச் சொந்தக்காரர்களான இரு சகோதர்களும் ஸ்டீஃபானைப் பாராட்டி அவருக்குச் சந்தன மாலை அணிவித்துக் கௌரவித்திருக்கிறார்கள்.

சிறு வயதிலிருந்து இயற்கையாகவே ஸ்டீஃபானுக்கு வாத்தியங்கள் வாசிக்கக் கூடிய திறமை இருந்தது. 10 வயது தாண்டும் முன்னரே தானாக, 10 வெவ்வேறு வாத்தியங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார். அந்தச் சிறு வயதி லேயே அவருடைய அண்ணன், தம்பிகளுக்கு வாத்தியங்கள் இசைப்பதுபற்றிச் சொல்லித் தந்தார். ஒருநாள் அவருடைய பள்ளிக்கூடத்தில் இசை படிப்பிக்கும் ஆசிரியர்கூட அவரிடம் சில வாத்திய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டபோதுதான் தன்னிடம் ஓர் அபூர்வமான தனித்திறமை இருப்பதை ஸ்டீஃபான் உணர்ந்தார்.

ஓர் இசைக் கருவி அபூர்வமானதாக இருந்தது. தோல் வாத்தியமும் தந்தியுமாக ஒன்றுசேர்ந்த கயிட்ஸ் என்னும் ஸ்பெயின் நாட்டு இசைக்கருவி. தந்தியை மீட்டிக்கொண்டே மேளத்தையும் தட்டலாம். அந்த மேளம் வித்தியாசமானதாக, ஒரு மிருகம் உறிஞ்சிக் குடிக்கும் ஒலியை எழுப்பியது. அவுஸ்திரேலிய ஆதிகுடி வாத்தியமான டிட்ஜெரிடு கூட அவரிடம் இருந்தது. இந்த வாத்தியத்தை மனிதன் உருவாக்குவதில்லை. இயற்கையாகவே உண்டாவது. ஐந்தாறு அடி நீளம் இருக்கும். தடித்த யுகலிப்டஸ் மரத்தின் பகுதியைக் கரையான் நடுவே துளைத்துப் போய் மறுபுறம் வந்துவிடுவதால் உண்டாகும் நீண்ட துளையுடன் அமைந்த வாத்தியம். இதிலே ஒரேயொரு ஸ்வரம்தான் வாசிக்க முடியும். “சரி, போதும்” என்று நான் சொல்லும்வரை அந்தப் பாரமான வாத்தியத்தை லயித்து வாசித்தபோது, அப்படியே அவுஸ்திரேலிய ஆதிகுடியாகிவிட்டார்.

‘‘மனிதகுலத்துக்கு இத்தனை இசைக்கருவிகள் தேவையா?’’

“நீங்கள் எப்படி இப்படிக் கேட்க முடியும்? தேடல்தானே மனிதனின் வேலை. இசை என்பது பெரிய ஆற்று வெள்ளம்போல, அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களிடம் இருக்கும் பாத்திரத்தில் இசையை அள்ளுகிறீர்கள். பாத்திரம் இல்லாதவர்கள் கையால் ஏந்துவார்கள். அவரவர் தேவையைப் பொறுத்தது. இசை வடிவத்தை வெளிப்படுத்துவதற்கு நீங்கள் ஏற்ற கருவியைத் தேர்ந்துகொள்கிறீர்கள். இசையின் பரிபூரண வடிவத்தை மனிதனால் கொண்டுவரவே முடியாது. ஏதாவது மீதம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், அவனுடைய முயற்சி நிற்காது. இனிமேலும் தொடர்ந்துகொண்டே போகும்.”

‘‘இந்த 865 வாத்தியங்களில் நீங்கள் கற்றுத்தேறத் திணறிய வாத்தியம் எது?’’

ஸ்டீஃபான் வேகமாகப் பேசக்கூடியவர். சட்டென்று பேசுவதை நிறுத்திவிட்டு யோசித்தார். “நாதஸ்வரம்தான். அது கொடுக்கக் கூடிய இசையின் முழு உருவத்தையும் என்னால் கைப்பற்றவே முடியவில்லை.”

“அது ஏன்? புல்லாங்குழல் மூங்கிலில் செய்தது. ஆறு துளைகள் கொண்டது. நாதஸ்வரம் ஆச்சா மரத்தில் செய்தது. அதிலும் ஆறு துளைகள். புல்லாங்குழல் இலகுவாக வாசிக்கக் கூடியதாக இருக்கும்போது, வாசிக்கக் கடினமான இசைக்கருவி ஒன்று எப்படிப் பிறந்தது?”

“மனிதன் லேசில் திருப்தி அடைந்துவிடுவ தில்லை. அவனுடைய இசை ஞானம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இருப்பது ஏழு ஸ்வரங்கள்தான் என்றாலும், அவற்றின் விஸ்தாரம் மனிதக் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவனுடைய கற்பனையில் உதிக்கும் அபூர்வ இசையை வெளிக்கொணர அவனுக்குப் புதுப்புது வாத்தியங்கள் தேவைப்பட்டன. அப்படிப் பிறந்ததுதான் நாதஸ்வரம். நாதஸ்வரத்தில் இசைக்கக் கூடிய நுணுக்கங்களையும் நகாசுகளையும் அலங்காரங்களையும் இன்னொரு வாத்தியத்தில் இலகுவாக வெளிப்படுத்த முடியாது. இசை வாத்தியம் என்றாலே, ஒரு சமரசம்தான் (ட்ரேட் ஆஃப்). ஒன்றைப் பெறுவதற்கு ஒன்றை இழக்க வேண்டும்.”

‘‘ஆனால், நீங்கள் இதைப் பயில்வது கடினம் என்று கூறியிருக்கிறீர்களே. இத்தனை வாத்தி யங்களில் தேர்ச்சித் திறன் பெற்ற நீங்கள், நாதஸ்வரத்தைக் கற்றுத்தேற முடியாததற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே?’’

“எனக்குத் தெரிந்து இசைக் கருவிகளில் உமிழ்நீரும் பங்குபெறும் ஒரு வாத்தியம் நாதஸ்வரம் மட்டும்தான். அதிலே மூன்று அல்லது நாலு சீவாளிகள் தொங்கும். சீவாளியைச் சூப்பி உமிழ்நீரால் நிறைத்துவிட்டுத்தான் நாதஸ்வரத்தில் செருகி வாசிப்பார்கள். காதுக்கு இனிமையான, ஒருவிதமான நாதம் அப்போது பிறக்கும். அதேசமயம் உமிழ்நீர் அதிகமாகிவிட்டால் இசையின் தரம் குறைந்துவிடும். உடனே வாசிப்பவர் சீவாளியை மாற்றிவிடுவார். அந்த நுட்பங்களைத் தேர்ச்சிகொள்வது அத்தனை சுலபம் இல்லை.”

‘‘இசை வாத்தியங்கள் பற்றி ஆலோசனைகள் கேட்டு வேறு நாடுகள் உங்களை அழைத்திருக்கின்றனவா?’’

“20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணித்தி ருக்கிறேன். சமீபத்தில்கூட சூடான் நாட்டுக்குப் போனேன். அங்கே ஓர் இசைக்கருவி இருக்கிறது. நாலு பேர் கயிறுகளை இழுத்துப்பிடித்தபடி நிற்க, ஒருவர் அதிலே இசை வாசிப்பார். ஆதிவாசியின் வாத்தியம். வாத்தியத்திலே சில திருத்தங்கள் செய்து, அதை மேன்மைப்படுத்தும் முறையையும் கற்றுத்தந்தேன். இதிலே ஆபத்து இருக்கிறது. ஒரு வாத்தியத்தை முற்றிலும் அறிந்த பின்னர்தான் அதை மேன்மைப்படுத்தலாம். ஆதிவாசிகளுடைய வாத்தியம்தானே என்று அலட்சியமாக அணுகக் கூடாது. இந்தியாவின் சித்தார் இசை மேதை ரவிஷங்கர் முதல் தடவையாக லண்டனில் கச்சேரி செய்தபோது, அவர் சுருதி கூட்டியதையும் இசையின் ஒரு பகுதி என்று எண்ணிச் சிலாகித்து விமர்சனம் எழுதியது உங்களுக்குத் தெரியும். அப்படியான தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

விடைபெறும்போது, “உங்களிடம் உறுமி மேளம் உள்ளதா?” என்று வினவினேன்.

“இல்லையே… அது எப்படியிருக்கும்? எங்கே கிடைக்கும்” என்றார் ஆர்வமாக.

நான், “தமிழ்நாட்டில் கிடைக்குமே” என்றேன். அவர் முகத்துச் சிரிப்பு மறைந்து ஏக்கம் தொடங்கியது. 865 வாத்தியங்கள் சேகரித்தவருக்கு மேலும் ஒன்று சேர்ப்பது அத்தனை கடினமா?

அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது அவரிடம் 866 இசைக்கருவிகள் இருக்கும். அதில் ஒன்று உறுமும்.

- அ. முத்துலிங்கம், எழுத்தாளர், தொடர்புக்கு: amuttu@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x