Published : 22 Nov 2013 12:00 AM
Last Updated : 22 Nov 2013 12:00 AM

வெளியே வந்த பூனைக்குட்டி

அம்பத்தி நாலு சதவீதப் பணவீக்கம் என்பது அத்தனை லேசுப்பட்ட விவகாரமல்ல. வெனிசூலாவின் சமீபத்திய கந்தரகோலப் பொரு ளாதாரச் சீரழிவுக்கான காரணம் இன்னும் ரெண்டு மூணு நாளில் தெரிந்துவிடும் என்று நாலு நாளைக்கு முன்னால் இங்கே எழுதியிருந்தேன். இதெல்லாம் அமெரிக்காவின் திட்டமிட்ட சதி; சாவேஸுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நிக்கோலஸ் மதுரோவை ஒரு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்டாகக் கருதி ராகிங் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றுதான் உலகம் பேசியது.

உண்மை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் தொடங்கியிருக்கிறது.

நேற்றைக்கு வெனிசூலாவின் நாடாளுமன்றத்து உறுப்பினர் பெருந்தகைகள் ஒன்றுகூடி அதிபருக்கு வானளாவிய அதிகாரங்களை அளித்து வாழ்த்துச் சொன்னார்கள். அப்பனே முருகா, ஞானபண்டிதா! தேசத்தை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறோம். நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; எத்தனை சட்டங்கள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்; யாரும் விவாதிக்க வேண்டாம், வோட்டெடுப்பு நடத்த வேண்டாம், அனுமதி அளிக்கவோ மறுக்கவோ வேண்டாம். எல்லாம் உன் இஷ்டம்; எல்லாம் உன் சௌகரியம். என்னவாவது செய்து தேசத்தைக் காப்பாற்று என்று சொல்லி விட்டார்கள்.

ஒரு சொல்லில் சொல்லுவதென்றால் இதன் பெயர் சர்வாதிகாரம்.

இந்த சோஷலிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுக ளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். கம்யூனிச தேசத்து அதிபர்கள் இப்படியெல்லாம் யாரும் கூடி கிரீடம் சூட்ட வேண்டுமென்று எதிர்பார்க்காமல் அவர்களே எடுத்து வைத்துக்கொண்டுவிடுவார்கள். சோஷலிஸ்டு அதிபர்கள் எலக்ஷன் வைத்து எப்படியாவது ஜெயித்துக்கொண்டு வந்து உட்கார்ந்து, எல்லாரும் சேர்ந்து கிரீடத்தைத் தூக்கி வைக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.

ஹ்யூகோ சாவேஸுக்குப் பிறகு வெனிசூலா வின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே நிக்கோலஸ் மதுரோவுக்கு பெரிய வாக்கு வித்தியாசங்கள் சித்திக்கவில்லை. எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட ஒண்ணரை சதவீத வாக்குகள்தான் அதிகம் வாங்கினார். இத்தனைக்கும் சாவேஸ் விடைபெறும் முன், 'எனக்குப் பிறகு மதுரோவுக்கே வோட்டுப் போடுங்கள்' என்று சொல்லிவிட்டுத்தான் போனார். இருந்தாலும் காலே அரைக்கால் மனத்துடன் தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது இவ்வாறு இருக்க, எதிர்வரும் டிசம்ப ரில் வெனிசூலாவில் நடைபெறவிருக்கும் முனிசிபல் தேர்தல்களில் மதுரோவின் சோஷலிஸ்ட் கட்சி டெபாசிட் பெறுவது கூடக் கஷ்டம் என்று உளவுத்துறை கண்டறிந்து சொன்னதன் விளைவாகவே இந்தப் பொருளாதாரப் பகடையாட்டம் அங்கே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

அதிபர் மதுரோவுக்கு இந்தத் தேர்தல்கள் ஒன்று, அபார வெற்றியைத் தரவேண்டும். இல்லாவிட்டால் தேர்தலே நடக்கக் கூடாது. வெற்றிக்கு வாய்ப்பில்லை என்றால் வேறு வழி? தேர்தல் நடக்காதிருக்க அவசர கால நிலவரம் போன்ற சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்காகவே இந்தச் செயற்கையான பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, பதினெட்டு சதப் பணவீக்கத்தை ஐம்பத்தி நாலு சதவீதமாக ஊதிப் பெருக்கிக் காட்டி களேபரம் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் வல்லுநர் சிகாமணிகள்.

வெனிசூலா முழுதும் இப்போது ராணுவம் ரோந்து போய்க்கொண்டிருக்கிறது. விலை வாசியைக் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என்று வியாபாரிகள் அத்தனை பேரையும் துப்பாக்கி முனையில் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். மதுரோவின் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஓர் அன்னிய முதலீட்டா ளர் வெனிசூலாவை விட்டுத் தெரித்து ஓடிக்கொண்டி ருக்கிறார் என்று நேற்று பேசியிருக்கிறார், ஹென்ரிக் கேப்ரில்ஸ் என்னும் வெனிசூலா அரசியல்வாதி ஒருத்தர்.

இவர்தான் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற எலக்ஷனில் மதுரோவுக்கு எதிராகப் போட்டியிட்டு நூலிழையில் தோற்றவர்.

எப்படியாவது நிக்கோலஸ் மதுரோவின் தந்திரத்தை முறியடித்து டிசம்பரில் முனிசிபல் தேர்தலை நடத்த வைத்துவிடுவது; அதில் சோஷலிஸ்ட் கட்சியைப் படுதோல்வி காணச் செய்து அதிபரைப் பதவி விலகச் செய்வது என்பது இந்த உத்தமோத்தமரின் செயல்திட்டம்.

ஆனால் அதெல்லாம் நடக்காது போலிருக்கி றது. மதுரோ இப்போது சர்வ வல்லமை பொருந்திய அதிபராகிவிட்டார். அவரைக் கேள்வி கேட்க முடியாது. எதிர்த்துப் பேச முடியாது. போராட்டம், கதவடைப்பு, ஊர்வலம் அது இதுவென்று எதுவும் பண்ணிவிடமுடியாது. நடப்பதென்னவோ ஜனநாயகம்தான். கொள்கை என்னவோ சோஷலிசம்தான். ஆனால் இனி ஆள்வதும் ஆளப்போவதும் சர்வாதிகாரம் மட்டுமே.

வெனிசூலா மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x