

பெண்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் எனும் பிரச்சாரம் முடுக்கிவிடப் பட்டிருக்கிறது. ‘வுமன்எஸ்ஜி’ எனும் இணையதளத்தில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருக்கிறது!
ஐநா சபைக்கு 70 வயதாகிவிட்டது. ஆனால், பெண்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலும் ஐநாவின் பொதுச் செயலாளர் பதவியில் ஒரு பெண்கூட இருந்ததில்லை. இப்போது அந்தக் குறை நீங்கும் எனும் நம்பிக்கை பிறந்திருக்கிறது.
ஐநா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன், பொதுச் சபையால் ஐநா பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவதே வழக்கம். பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் நாடுகளின் தலைவர்கள் கலந்து பேசித் தேர்ந்தெடுக்கிற பதவிதான் என்றாலும், அதிகம் எதிர்ப்பு வராத மாதிரி பார்த்துக்கொள்வார்கள். ஏதாவது ஒரு நாட்டில் அமைச்சர், பிரதமர் போன்ற பதவி வகித்தவர்களோ, ஐநா சபையின் துணை அமைப்புகளில் பெரிய பொறுப்புக்களில் இருந்தவர்களோதான் தேர்வுசெய்யப்படுகிறார்கள். வெவ்வேறு நாடுகளுக்கு வாய்ப்பு தருவது, நிரந்தர உறுப்பினராக உள்ள நாடுகளைத் தவிர்ப்பது போன்ற விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்நிலையில், அந்தப் பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கீ மூனும் அதை வலியுறுத்தியிருக்கிறார்.
ஐநா பொதுச் செயலாளராகும் வாய்ப்புள்ளவர்களின் உத்தேசப் பட்டியலும் இந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது. ஜெர்மனி ஏஞ்சலா மெர்கல், நியூசிலாந்து முன்னாள் துணைப் பிரதமர் ஹெலன் கிளர்க், மால்டோவாவின் முன்னாள் துணைப் பிரதமர் நாதெல்லா கெர்மேன், யுனெஸ்கோ பொது இயக்குநர் ஐரினா பொகோவா(பல்கேரியா), அர்ஜெண்டினா வெளியுறவுத் துறை அமைச்சர் சூசன்னா மல்கோரா, குரோசியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வெஸ்னா புசிக், சிலி அதிபர் மிசேல், பல்கேரிய துணைத் பிரதமர் கிறிஸ்டாலினா உள்ளிட்டோர் இப்பட்டியலில் இருக்கிறார்கள். ஆண்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய, போர்ச்சுகீசிய முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இதுவரை நார்வே, ஸ்வீடன், மியான்மர், ஆஸ்திரியா, பெரு, எகிப்து, கானா, தென்கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐநா பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளார்கள். எனவே, இம்முறை ஆஸ்திரேலியா அல்லது கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் எனும் பிரச்சாரம் முழு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் ‘வுமன்எஸ்ஜி’ எனும் இணையதளத்தில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருக்கிறது. நல்லது நடக்கட்டும்!