பாஜகவின் குறியீட்டு மூலதனக் கொள்ளை!

பாஜகவின் குறியீட்டு மூலதனக் கொள்ளை!
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் தேர்தலில் தலித் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியிருப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளைத் தற்காப்பு நிலைக்கு பாஜக தள்ளியிருக்கிறது.

தலித் என்பது சாதிய வகைமை என்றுதான் நாம் கருதிக்கொண்டிருக்கிறோம். அதற்கும் மேல் அதுவொரு குறியீட்டு மூலதனமும் (Symbolic Capital) ஆகும். குறியீட்டு மூலதனத்துக்கு அம்பேத்கர், காந்தி, பெரியார் முதலான ஆளுமை களையும்; தமிழ், தலித் போன்ற சமூகக் குழுக்களையும் உதாரணங்களாகச் சொல்லலாம். அத்தகைய குறியீட்டு மூலதனத்தை அளப்பரிய இழப்புகளும், போராட்டங்களுமே உருவாக்குகின்றன.

அதிகாரத்தில் இருப்பவர்கள் பொருளாதார மூலதனத்தைக் கட்டுப்படுத்துவதோடு நின்றுவிடுவ தில்லை, குறியீட்டு மூலதனத்தையும் அபகரிக்க முனைகிறார்கள். தமக்கேற்ற மரபான குறியீடுகளை உயர்த்திப் பிடிப்பதோடு, தமக்கு எதிரான கலகக் குணம் வாய்ந்த குறியீடுகளைத் தன்வயப்படுத்தி அவற்றை மதிப்பழிப்புச் செய்கிறார்கள்.

படேலுக்கு அமைக்கப்படும் பிரம்மாண்டமான சிலை மரபான குறியீட்டை உயர்த்திப் பிடிப்பதற்கும், டெல்லியில் அம்பேத்கருக்கு அமைக்கப்படும் தேசிய நினைவிடம் கலகக் குறியீட்டைத் தன்வயப்படுத்துவதற்கும் பாஜக எடுக்கும் முயற்சிகளுக்கு உதாரணங்கள். தலித் என்ற குறியீட்டு மூலதனத்தை அபகரிப்பதற்கு பாஜக இரண்டு விதமான உத்திகளைக் கையாள்கிறது. ஒன்று, அம்பேத்கர் என்ற ஆளுமையை அபகரிக்க முயற்சித்தல். இரண்டு, பலவீனமான பிம்பங்களைக் குறியீடுகளாக உயர்த்திப் பிடித்தல். இரண்டாவது உத்தியின் வெளிப்பாடுதான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ராம்நாத் கோவிந்த்.

தலித் குறியீட்டு மூலதனத்தை அபகரிக்க முயற்சித்துக்கொண்டே இன்னொரு புறம், தலித் மக்களுக்கான திட்டங்களை ஒழித்துக் கட்டிக்கொண்டிருக்கிறது பாஜக. மூன்றாண்டு கால ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் துணைத் திட்டத்தின் (SCSP) அடிப்படையில் தலித் மக்களின் நலத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய தொகையில் சுமார் ரூ. 2 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்காமல் வஞ்சித்தது, ‘ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ என அழைக்கப்படும் தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ரூ.882 கோடியிலிருந்து வெறும் 50 கோடியாகக் குறைத்தது என அதைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

தலித் மக்களை சமூக, பொருளாதாரத் தளங் களில் அடிமை நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கும் வகுப்புவாத வன்முறையை ‘தலித் குடியரசுத் தலைவர்’ என்ற நெகிழ் திரை கொண்டு மறைக்கப் பார்க்கிறது பாஜக. நிச்சயம் அதன் நோக்கம் நிறைவேறாது.

ரவிகுமார், எழுத்தாளர், விசிக பொதுச் செயலாளர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in