

பிரச்சினையின் வேர் என்ன என்பதைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் நேரே தீர்வைப் பற்றிப் பேசுபவர்களை என்னவென்று சொல்வது? பிரச்சினையின் வேர்பற்றி விவாதித்தால்தான் சரியான தீர்வு உருவாக்கப்பட முடியும்.
பிரச்சினையின் வேர் என்ன?
பிரச்சினையின் வேர் மிக எளிமையானது. கர்நாட கத்தில் பள்ளி முதல் உயர்கல்வி வரை கன்னட மொழியை ஒரு மொழிப்பாடமாகப் படிக்காமல் யாரும் கல்வி முடிக்க முடியாது. தமிழகத்திலோ ‘ப்ரீகேஜி’ முதல் ‘பி.ஹெச்.டி.’ வரை தமிழை மொழிப்பாடமாக எந்தக் கட்டத்திலும் எடுக்காமல் கல்வியை முடித்துவிடலாம். இதற்குக் காரணம், தமிழக அரசியல்வாதிகளும் கல்வி வியாபாரிகளும் கூட்டாகச் செய்துவந்திருக்கும் வணிகச் சதிதான். இதுதான் பிரச்சினையின் வேர் என்று தெரிந்த பிறகு, அதைச் சரி செய்யத்தானே தீர்வு சொல்ல வேண்டி யிருக்கும். அதற்குக் கட்டுரையாளர் தயாராக இல்லை. எனவே, வேரையே சொல்லாமல், விபரீதமான தீர்வு சொல்கிறார்.
சமூக விரோதச் சிந்தனை
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்தால், அதற்கான தீர்வுகளை எப்படி யோசிக்க வேண்டும்? இனி, அவை நடக்காமல் இருக்க வழிகள் என்ன என்று அறிந்து செயல்படுத்த வேண்டும். அதற்குப் பதில், ‘எங்களால் பாலியல் வன்முறைகளைத் தடுக்க முடியாது. எனவே, பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள், அதைச் சுகமான அனுபவமாகக் கருதி ஏற்றுக்கொண்டுவிட வேண்டும்’ என்று சொன்னால், அது தீர்வா? அது மாற்று சிந்தனையா? எப்படிப்பட்ட சமூக விரோதச் சிந்தனை!
- ஞாநி, மூத்த பத்திரிகையாளர்
gnanisankaran@gmail.com