

மதரீதியில் உணர்வுகளைத் தூண்டும்போது வாக்காளர்கள் உணர்ச்சிவசப்பட்டு வாக்களிக்கின்றனர்
மீரட் நகருக்கு 20 கி.மீ. தொலைவில் சர்தானா என்ற அழகிய சிறுநகரில் ‘நாட்டிலேயே மிக அழகிய தேவாலயம்’ என்று வர்ணிக்கத்தக்க அருள்நிறை அன்னையின் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. முஸ்லிமாகப் பிறந்த பேகம் சாம்ரு என்ற நாட்டிய நங்கை, இந்த தேவாலயத்தை 1822-ல் கட்டினார். அனைவரும் அஞ்சும்படியான படைத் தலைவியாக உருவெடுத்த அவர், இச்சிறு பிராந்தியத்தைச் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
கத்தோலிக்கர்கள், பிராட்டஸ்டண்டுகள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று அனைவரையும் அவர் சமமாகப் பாவித்தார். கல்வியைப் பரப்புவதில் சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒருகாலத்தில் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்த சர்தானா, இப்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வுகளுக்கு இரையாகிவிட்டது. கடைசியாக, 2004 ஜூனில் சர்தானாவில் வகுப்புக் கலவரம் நடந்தது. அதற்குப் பக்கத்தில் உள்ள முசாஃபர் நகரில் 2013-ல் கலவரம் வெடித்தது. முசாஃபர் நகரில் 60-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், அவர்களில் முஸ்லிம்களே அதிகம்.
உத்தரப் பிரதேசத்தின் மேல் தோப் பிரதேசத்தின் ஒரு பகுதிதான் சர்தானா. பாக்பத், புலந்த்ஷகர், கவுதம்புத்த நகர், காஜியாபாத், ஹாபூர், மீரட், முசாஃபர் நகர், சகாரன்பூர், ஷாம்லி ஆகிய மாவட்டங்கள் மேல் தோப் பகுதியில் உள்ளன. தோப் என்றால் இரு ஆறுகள் என்று பொருள். இந்தப் பகுதி யமுனை, கங்கை என்ற இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி. வேளாண்மை செழித்துள்ள பிரதேசம். மாயாவதியும் இப்பகுதியைச் சேர்ந்தவர்தான்.
மேல் தோப் பகுதியின் அரசியல்
உத்தரப் பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 44 இப்பகுதியில் அமைந்துள்ளன. 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் 17, சமாஜ்வாதி 10, பாஜக 9, காங்கிரஸ் 5, ராஷ்ட்ரீய லோகதளம் 3 தொகுதிகளில் வென்றன. அஜீத் சிங் தலைமையிலான ஆர்.எல்.டி., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்துப் போட்டியிட்டது. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் பிற பகுதிகளைப் போலவே தோப் பகுதியும் மோடி அலையில் சிக்கியது. எல்லா மக்களவைத் தொகுதியிலும் பாஜக வென்றது.
மொத்தமுள்ள 44 சட்டப்பேரவைத் தொகுதியில் 42-ல் வென்றது. எஞ்சிய 2-ல் காங்கிரஸுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. மதரீதியில் வாக்காளர்கள் திரண்டது பாஜகவுக்குச் சாதகமானது. மேல் தோப் பகுதியில் பாஜக சராசரியாக 51% வாக்குகளைப் பெற்றது. மாநிலத்தில் சராசரியாகப் பெற்றது 43%. முசாஃபர்நகர் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் சஞ்சீவ்குமார் பல்யான் 56% வாக்குகளைப் பெற்றார். அதற்கு முன்னால் 2012-ல் நடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரேயொரு தொகுதிதான் கிடைத்தது.
உணர்ச்சிகர ஆதரவு
மதரீதியில் உணர்வுகளைத் தூண்டும்போது, வாக்காளர்கள் உணர்ச்சிவசப்பட்டு வாக்கு அளிக்கின்றனர். வதந்திகளும் வாய்ச் சொற்களும் உண்மையென்றே நம்பப்படுகின்றன. 2013-ல் நடந்ததைப் போன்ற வகுப்புக் கலவரத்தைத் தூண்ட அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை என்பதையே இச்சூழல் உணர்த்துகிறது.
‘அடையாளம் சார்ந்த அரசியல்’ பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது என்று பிரிட்டன், அமெரிக்காவில் நடந்த வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்நாடுகளில் காட்டப்படும் அடையாளமும், இங்கே தேடப்படும் அடையாளமும் வெவ்வேறானவை. வளர்ச்சி பற்றிப் பேசும் அரசியல்வாதியை, இதுவரை என்ன சாதனைகளைச் செய்திருக்கிறீர்கள் என்று கேட்கலாம். அடையாள அரசியலிலோ வதந்தியும், மதம் சார்ந்த அணிதிரள்களும்தான் தொடர்ச்சியாக இடம்பெற முடியும்.
விசுவாச வாக்காளர்கள்
2014-ல் இருந்த ஆதரவு பாஜகவுக்கு இப்போது இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்துக்கு அருகில் சில ஜாதவ் சமூக மக்களைச் சந்தித்தோம். 2014-ல் பாஜகவை ஆதரித்த அவர்கள், அகிலேஷைப் பாராட்டிப் பேசினர். ஆனால், இம்முறை பகுஜன் சமாஜ் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்றனர். பாஜக கடைப்பிடிக்க முயற்சிக்கும் அனைத்துச் சாதிக் கூட்டணி வெறும் நாடகம் என்று கண்டித்தனர். உத்தரப் பிரதேசத்தில் எப்போதுமே சாதி சார்ந்து வாக்களிப்பதுதான் வழக்கம், இந்த முறையும் அப்படித்தான் என்றனர். கடந்த முறையைவிட இம்முறை பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிப்பதில் மக்களிடையே குறைந்த உற்சாகம்தான் காணப்படுகிறது என்றும் தெரிவித்தனர். விசுவாச வாக்காளர்களுக்கும் வியூக வாக்காளர்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது என்று அரசியல் அறிஞர்கள் இதைப் பற்றிக் கூறுகின்றனர்.
விசுவாச வாக்காளர் என்பவர், அரசியல் கட்சியோடு உணர்ச்சிகரமாக பிணைக்கப் பட்டவர். அந்தக் கட்சிக்கு ஆளும் தகுதி, வாய்ப்பு இல்லாவிட்டாலும்கூட அவர் அதற்கு வாக்களிப்பார். மதம் அல்லது சாதி போன்ற காரணங்களுக்காக அவர் விசுவாச வாக்காளராக இருப்பார். இது போன்ற காரணங்களுக்காக வாக்களிப்பவரை ‘விசுவாச’ என்று அழைப்பதுகூட நகை முரண்தான்.
வியூக வாக்காளர்கள்
வியூக வாக்காளர் என்போர், தங்களுடைய வாக்குகளை வீணாக்க விரும்பாதவர்கள். நிச்சயமாகத் தோற்கக்கூடும் என்ற கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். முதல் இரண்டு இடங்களைப் பெறக்கூடிய கட்சிகள் எவை என்று பார்த்து, அதில் ஒன்றுக்கு வாக்களிப்பவர்கள். கடந்த காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அட்டவணை சாதியினரையும் மேல் சாதியினரையும் இணைத்து கட்சிக்குள் அதிக வேட்பாளர்களைத் தேர்வுசெய்தபோது, மேல்சாதி வாக்காளர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காமல், பகுஜன் சமாஜ் கட்சிக்கே வாக்களித்தனர்.
வியூக வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களைப் பொறுத்த வரை முதல் இரண்டு இடங்களில் வரக்கூடும் என்று அனுமானிக்கும் கட்சிகளில் ஒன்றைத் தேர்வுசெய்கின்றனர். பல்வேறு கட்சிகள், பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் இருக்கும்போது விவரமுள்ள வாக்காளர்கள் முதல் இரு இடங்களில் வரக் கூடியவர்களை முதலில் அடையாளம் கண்டு, அவர்களில் தங்களுடைய மதம், சாதி அல்லது வேறு நலனுக்கு உகந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்கிறார்கள். மேல் தோப் பிரதேசத்திலும் அப்படித்தான் வாக்களிக்கிறார்கள்.
இப்பகுதியில் மத அடிப்படையில் வாக்காளர்கள் அணி திரள்வதால் சிக்கலான நிலைமை காணப்படுகிறது. அதே சமயம், இங்குள்ளவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முன்னதாகவே தீர்மானித்துவிடுகிறார்கள். மிகச் சிலர்தான் தீர்மானிக்காமல் இருக்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க எல்லா அரசியல் கட்சிகளும் தொண்டர்கள் மூலம் தங்களுடைய ஆதரவாளர்களைத் திரட்டும்போது தெளிவு ஏற்பட்டுவிடும். தங்களுடைய வாக்கு வங்கியைக் குறிவைத்துக் காய்களை நகர்த்தும் கட்சி வெற்றி பெற்றுவிடும் என்பது நன்றாகப் புரிகிறது.
- நீலாஞ்சன் சர்க்கார், பானு ஜோஷி, ஆசிஷ் ரஞ்சன் ஆகியோர்
டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தைச் சேர்ந்தவர்கள்.
© ‘தி இந்து’ ஆங்கிலம் | சுருக்கமாகத் தமிழில்: சாரி