

அதிபர் தில்மா ரூசெஃபைப் பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்டிருக்கும் முடிவு, ஜனநாயகத்துக்கும் பிரேசில் மக்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. இவ்விஷயத்தில் வேறு வகையான முடிவு வந்திருந்தால், அது பிரேசிலில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தை மேலும் சிக்கலாக்கியிருக்கும். தில்மா ரூசெஃபின் எதிர்ப்பாளர்கள், விமர்சகர்களிடம் கடும் எதிர்ப்பையும் உருவாக்கியிருக்கும்.
ஆளுங்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சியின் ஊழல்கள், அக்கட்சி ஆட்சியைப் பிடித்த விதம், அக்கட்சித் தலைவர் லூயி இனா சியோ லூலா மற்றும் தில்மா ரூசெஃப் இரு வரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத் தியது ஆகியவற்றின் விளைவுகள் அரசியல் பதிவேடுகளிலிருந்து மறையும் முன்னர், செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
அதிபர் பதவியிலிருந்து தில்மா ரூசெஃபை நாடாளுமன்றம் நீக்கியிருப்பது சரியான நடவடிக்கைதான் என்றாலும், எட்டு ஆண்டுகளுக்கு அவர் அதிபர் பதவி உட்பட, எந்தப் பொதுப் பதவிக்கும் வருவதற்குத் தடை விதிக்கும் விஷயத்தில் நாடாளுமன்றம் தோல்வியடைந்துவிட்டது.
அரசுப் பதவிக்கு ரூசெஃப் வர முடியாமல் தடுப்பதற்கு வழிவகுக்கும் வண்ணம், கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட புத்திசாலித்தனமான நடவடிக்கை அது. எனினும், அந்த முடிவை எடுப்பதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால் அது நிறைவேற்றப்படவில்லை.
பிரேசிலின் 37-வது அதிபராக, ‘ஃபெடரேடிவ் ரிபப்ளிக் ஆஃப் பிரேசில்’ கட்சித் தலைவர் மிஷேல் டீமெர் பதவியேற்றுவிட்டார். அரசியல் வரலாற்றில் அக்கட்சி பெற்றிருக்கும் முக்கிய வெற்றி இதுவாகத்தான் இருக்கக்கூடும்.
அனைவருக்குமான கொள்கையைத் தொடங்குவது, சமூக, பொருளாதார மீட்டெடுப்பு போன்ற பல விஷயங்களைப் புதிய அதிபர் செய்ய வேண்டியிருக்கிறது. அவரது பொறுப்புகள் கடினமானவை. அவர் இனி செல்லவிருக்கும் பாதை, தடைகளும் ஆபத்துகளும் நிறைந்தவை. எனினும், இனி வரப்போகும் நாட்கள், பிரேசிலுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.
அரசுப் பதவிக்கு ரூசெஃப் வருவதற்கு எட்டு ஆண்டுகளுக்குத் தடைவிதிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவை மறுபரிசீலனை செய்வதில் உச்ச நீதிமன்றம் வழி காண வேண்டும்.
இந்த வாக்கெடுப்பு தொடர்பாக விசாரிப்பதற்கும், அதன் முடிவுகளை மாற்றுவதற்கும் நீதி அமைப்பு களுக்குச் சட்டரீதியாக ஏதேனும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அவை தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இல்லையென்றால், தொழிலாளர் கட்சி, லூயி இனாசியோ லூலா மற்றும் ரூசெஃப் இணைந்து, தங்களுக்கான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்து, பிரேசிலின் ஜனநாயகத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் ஆபத்து ஏற்படலாம்.
அது நடந்துவிடக் கூடாது. பிரேசில் இனி தனது எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். திரும்பிப் பார்க்கக் கூடாது. கடந்த காலம் கடந்துவிட்டது. எதிர்காலம் இன்னும் எழுதப்படவில்லை!
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்