தொழில் செய்ய விரும்பு

தொழில் செய்ய விரும்பு
Updated on
2 min read

வளரும் இந்தியாவில் தொழில் வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. அடுத்த கால் நூற்றாண்டிற்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு குறை ஏதும் இருக்காது. அதே போல் தொழில் செய்ய விரும்புபவர்களின் வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. இன்றைய உலகில் தொழில்கள் பல விதமாக உள்ளன.

சிறிய சிறிய ஆப்ஸ் (APPS) என்று கூறக் கூடிய மென்பொருட்களை உண்டு பண்ணி பல மில்லியன்/ பில்லியன் டாலர்களுக்கு விற்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக வாட்ஸப் (WHATSUP) என்ற மொபைல் மெஸ்ஸேஜிங் (MOBILE MESSAGING) மென்பொருளை (SOFTWARE) உருவாக்கின்றன. 19 பில்லியன் டாலர்களுக்கு விற்ற சம்பவத்தை சமீபத்தில் நீங்களெல்லாம் கேள்விப் பட்டிருப்பிர்கள். இதுபோல் சிற்சில பெரிய வாய்ப்புகளும், பற்பல சிறிய வாய்ப்புகளும் ஏராளமாய் நம் கண் முன்னால் உள்ளன.

இவற்றை எல்லாம் அறிந்து ஆராய்ந்து நாம் தொழில் செய்யும் போது கோடீஸ்வரர் ஆவது என்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. இன்றைய இளம் வயதினர் மற்றும் நடு வயதினர் பலருக்கும் தொழில் செய்யும் ஆசை ஏராளமாய் உள்ளது. அதே சமயத்தில் சற்று பயமும் அவர்களிடையே உள்ளது. தெளிவான ஞானம் மற்றும் திட்டமிடல் இருக்கும்போது இந்த பயங்களை வென்று நாம் சாதனை படைப்பது எளிதாகின்றது.

புதிய தொழில் தொடங்குவது என்பது எல்லோரும் சாப்பிடக்கூடிய வாழைப்பழம் அல்ல. உங்களுக்கு உண்மையிலேயே தொழில் துவங்குவதில் விருப்பம் உள்ளதா என்று அறிந்து கொள்ளுங்கள். உறவி னரோ அல்லது நண்பரோ தொழில் துவங்கி பெரியளவில் பணம் சம்பாதித்து விட்டார்கள் என்பதற்காக நீங்கள் தொழிலில் இறங்காதீர்கள். நீங்கள் செய்யப்போகும் தொழிலையும், அதில் தினசரி உள்ள செளகரியம் மற்றும் அசெளகரியங்களையும் கனவு கண்டுபாருங்கள்.

உங்களுக்கு லாபமே கிடைக்கா விட்டாலும் அத்தொழிலை நீங்கள் செய்ய விரும்புவீர்களா என்று எண்ணிப்பாருங்கள். நீங்கள், செய்யப்போகும் தொழிலை கட்டாயமாக காதலிக்க வேண்டும்; அத்தொழிலுடன் காதல் வயப்படா விட்டால் தொழிலில் இறங்குவது உகந்தல்ல.

ஒரு காலத்தில் பணம், சொந்தபந்தங்கள், சுற்றுவட்டாரம் போன்றவைகளே தொழில் துவங்குவதற்கு முக்கியமாக இருந்தன. ஆனால் இன்றோ தொழில் துவங்குவதற்கு மூன்று விஷயங்கள்தான் முக்கியம். அவையாவன 1)விருப்பம் 2)விருப்பம் 3)விருப்பம்.

ஏனென்றால் இன்றைய இந்திய பொருளாதாரச் சூழலில் ஐடியாக்களுக்கு பஞ்சம் இல்லை; முதலீட்டாளர்களுக்கு பஞ்சம் இல்லை; நல்ல தரமான ஊழியர்களுக்கும் பஞ்சம் இல்லை - இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துக் செல்லக்கூடிய உங்களைப் போன்றோர்களுக்குதான் இன்று நாட்டில் பஞ்சம். எந்த காலக்கட்டத்திலும் இல்லாத அளவிற்கு இன்று இந்தியாவில் முதல் தலைமுறை தொழில் அதிபர்கள் உருவாகி வருகிறார்கள்.

அடுத்த கால்நூற்றாண்டிற்கு இது போன்ற வளர்ச்சி இருந்து கொண்டுதான் இருக்கும். ஆகவே தொழில் துவங்கும் வாய்ப்புகளுக்கு பஞ்சமே இருக்காது. இதில் நீங்கள் உங்களை எங்கு அமர்த்தி கொள்கிறீர்கள் என்பதில் தான் உங்களுடைய உயர்வு அமையும்.

இந்தியா வேளாண் பொருளாதாரத்தில் இருந்து பெரிய அளவிற்கு உற்பத்தி பொருளாதாரத்தில் நுழையாமலேயே, சேவை பொருளாதாரத்திற்கு சென்றுவிட்டது. இன்று நமது நாட்டு மொத்த உற்பத்தியில் 64.8% (கட்டுமான சேவையையும் சேர்த்து) சேவை பொருளாதாரத்திலிருந்து வருகிறது.

உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியர்கள் மிகவும் அறிவுள்ளவர்கள் மற்றும் திறமைசாலிகள். அதிலும் தமிழர்களை பற்றி கேட்கவே வேண்டாம்! அவர்களது உழைப் பிற்கும், அறிவிற்கும், ஒழுக்கத்திற்கும் வேறு எவராலும் ஈடு செய்ய முடியாது. இவ்வளவு குணாதிசயங்கள் கொண்ட நாம் தொழில் தொடங்குவதே மிகவும் சரியானதாக இருக்கும்.

தொழிலில் நுழைபவர்கள் எவ்வாறு திட்டமிடுவது, எவ்வாறு தங்களது பயங்களை போக்குவது, நிதியை எவ்வாறு திரட்டுவது, கணக்குகளை எவ்வாறு வைத்துக் கொள்வது போன்ற பலவற்றைப் பற்றியும் தொடர்ந்து காண்போம்.

சொக்கலிங்கம் பழனியப்பன் - prakala@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in