Last Updated : 07 Sep, 2018 09:24 AM

 

Published : 07 Sep 2018 09:24 AM
Last Updated : 07 Sep 2018 09:24 AM

உயர் கல்வி ஆணையம் சாதிக்கப்போவது என்ன?

பல்கலைக்கழகங்களை நெறிப்படுத்த புதிய ஆணையம் தேவை என்பது மத்திய அரசின் முடிவு. உயர் கல்வி ஆணையம் ஒன்று ஏற்படுத்த சட்ட முன்வரைவு தயாராகியுள்ளது. ‘பல்கலைக்கழகங்களை நம்பி அவற்றின் போக்குக்கு விட்டுவிட முடியாது; மாநில அரசுகள் அவற்றைக் கண்காணிக்கும் என்றும் நம்ப முடியாது’ - உயர் கல்வி ஆணையச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவம் இவைதான்.

சில வகைச் சட்டங்களின் அடிப்படைத் தத்துவமே இந்த சந்தேகம்தான். நாமாகவே முறையாக நடந்துகொள்வோம் என்றால், இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டங்கள் எதற்கு? நம்மைக் கட்டுப்படுத்த நாம் அஞ்சும் அதிகார மையம் ஒன்று நமக்கு வெளியே வேண்டும் என்பது அந்த சந்தேகத் தத்துவம் சொல்லும் நியாயம். அந்த வகைச் சட்டங்களுக்கும் உயர் கல்வி ஆணையச் சட்டத்துக்கும் தத்துவ அடிப்படை ஒன்றுதானோ என்று நினைக்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

சமர்த்தான சட்டம்

பல்கலைக்கழகம் பெரும்பாலும் ஒரு மாநிலச் சட்டம் தாயாக இருந்து பெற்றுக்கொள்ளும் குழந்தை. தனக்கான விதிகளைச் செய்யவும் பட்டம் வழங்கவும் பல்கலைக்கழகத்துக்கு அந்தச் சட்டமே அதிகாரம் தருகிறது. உயர் கல்வி ஆணையச் சட்டம் அமலுக்கு வரும்போது இந்த மாநிலச் சட்டம் எப்படிச் செயல்படும்? பல்கலைக்கழக விதிகள் என்னவாகும்? உயர் கல்வி ஆணையம் அனுமதி அளிக்கும்வரை புதிய பல்கலைக்கழகங்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபட முடியாது. மாநிலச் சட்டம் பல்கலைக்கழகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அது பெற்ற குழந்தை உயர் கல்வி ஆணையத்தின் அனுமதி பெறாமல் அடி வைத்து நடை பயில முடியாது. இந்திய ஆணையம் வகுக்கும் விதிகளே பெரும்பாலானவற்றைக் கவனித்துக்கொள்ளும் என்பதால், பல்கலைக்கழகங்களின் விதிகளுக்கும் தேவை இருக்காது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பழைய பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி ஆணையத்தின் அனுமதி பெறாமல் பட்டம் வழங்க இயலாது. மூன்று ஆண்டுகள்வரை அனுமதி இருந்தாலும், அதற்குள்ளேயே அந்த அனுமதியை ஆணையம் ரத்துசெய்யலாம்.

மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே சட்டம் செய்துகொள்ளலாம் என்று அரசியல் சாசனம் பல்கலைக்கழகங்களைப் பொதுப் பட்டியலில் வைத்துள்ளது. அவை பொதுப் பட்டியலில் இருப்பதால் மாநிலத்துக்கு என்ன அதிகாரம் வருமோ அது அங்கு வராமல் உயர் கல்வி ஆணையச் சட்டம் பார்த்துக்கொள்ளும். இந்த அதிகாரம் தனக்கு மட்டுமே வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், அரசியல் சாசனத் திருத்தம் செய்து, அதைப் பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி, மத்திய அரசுப் பட்டியலில் சேர்க்கலாம். அப்படிச் செய்ய நேர்மை வேண்டும். அரசியல் சாசனத் திருத்தம் செய்தால் என்ன ஆதாயம் வருமோ அதைச் சாதாரண சட்டத்தின் மூலமே அடைந்துகொள்ள மத்திய அரசு சாமர்த்தியம் செய்கிறது.

விதிகளால் விளையாது கல்வி

உயர் கல்வி ஆணையத்தின் வேலைகளைச் சட்டம் பட்டியலிடுகிறது. கல்வியின் தரத்தை அது நிர்ணயிக்கும். சமச்சீரான தர உயர்வுக்கு முயற்சிக்கும். பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தை வகுத்துக்கொள்ள உதவும். பாடம் சொல்லும் முறைகளைச் சொல்லும். தேர்வுகள் எப்படி இருக்க வேண்டும், மாணவர்கள் படிப்பவை அவர்களை எப்படிப்பட்டவர்களாக உருவாக்க வேண்டும் என்றும் காட்டும். பல்கலைக்கழகங்களை நம்பாதவர்கள்தான் அவற்றுக்கு இப்படிக் கோடு இழுத்துக் காட்டுவார்கள்.

பல்கலைக்கழகங்கள் அரசுத் துறைகள் அல்ல. அவை, பவுத்த சங்கம், பண்டைய தமிழ்ச் சங்கம் போன்று, அன்றாட, சராசரி சமூகத்திலிருந்து விலகி இயங்கும் தனிக் குழுமங்கள். ஒருவரை நம்பி அதிகாரம் தரலாமா என்று ஆராயும் எச்சரிக்கை அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தலாம். பல்கலைக்கழகம் அன்றாட சமூகத்தின் அங்கமல்ல. அது வேற்று உலகம். அன்றாட வாழ்க்கை நமக்குத் திறமை, தகுதி, அழகு, அவலம் என்று கற்பித்திருப்பவை அந்த உலகத்து நடைமுறையில் அர்த்தமற்றவை.

கெடுபிடியான விதிகள் அரசுத் துறைகளில் விரும்பும் விளைவைத் தரலாம். அப்படி விதிகளால் விளைவதல்ல கல்வி. பல்கலைக்கழகங்கள் எதைக் கருதி, எவற்றை, எப்படிச் சொல்லித்தர வேண்டும் என்பதை அரசு ஆணையத்திடம் விடலாமா? ஆணையம் போன்ற புற மையம் பல்கலைக்கழகப் பாடத்தின் திறனை மதிப்பிட இயலும் என்பது உயர் கல்விக்குப் பகையான நிலைப்பாடு. பல்கலைக்கழகங்கள் இருப்பதற்கான நியாயமே அதனதன் சுதந்திர சிந்தனைதான். ஊசியின் முனையில் எத்தனை தேவ தூதர்கள் நிற்க இயலும் என்பது பழைய பல்கலைக்கழகப் பாடம். இதுவும் ஒரு பாடமா என்று இன்றைக்குக் கேலி செய்வோம். தர்க்கம் அறிந்தவர்கள் இதைப் பாடமாக மதித்தார்கள். வாயில் காப்போன் போல் ஆணையம் தன் ஞானத்தின் துணை கொண்டு சில பாடங்களை அனுமதிக்கும். சிலவற்றை வெளியிலேயே நிறுத்திவிடும். இப்படிச் செய்வதால் உயர் கல்வியில் தன் சித்தாந்த சாயல் படிவதை ஆணையம் விரும்பாவிட்டாலும், தானே அதை அறிந்து தடுக்க இயலாது. ஆணைய உறுப்பினர்கள் ஒரு தசாப்தம் பதவி வகிக்கச் சட்டம் அனுமதிக்கிறது. இந்த நிலையில் ஒரே அரசியல், கலாச்சார இலக்கு நோக்கி உயர் கல்வி பயணிப்பதை அதைச் செலுத்தும் ஆணையமே அறியாது.

தரமான கல்லூரிகள் ஐந்து என்றால், ஒன்றைப் போன்றே மற்ற நான்கும் இருப்பதால், அவை தரத்தைப் பெறுவதில்லை. ஒன்று மற்றொன்றின் நகலாக இல்லாமல் இருப்பதால்தான் அவை ஒவ்வொன்றும் அதனதன் தரத்தை அடைகின்றன. உயர் கல்வியில் தரம் என்பதற்குப் பொதுத்தன்மை கிடையாது. ஒரு பல்கலைக்கழகத்துக்கு இரண்டு பக்கங்கள். ஒன்று நிர்வாகம், மற்றது கல்வி. உயர் கல்வி ஆணையம் நிர்வாகத்தோடு நின்றுகொள்ள வேண்டும். மத்திய அரசு அஞ்சுவதுபோல் கல்வியை ஆயிரம் பல்கலைக்கழகங்கள் பாழாக்கக்கூடும். ஆனால், ஆணையம் அதற்குத் தீர்வாகாது. அந்த ஆயிரம் அங்கேயும் இங்கேயும் எதைச் செய்கிறதோ அதை இருந்த இடத்தில் இருந்தபடியே ஆணையம் எளிதாகச் செய்துவிடும்!

- தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர்,

‘காவிரிக் கரையில் அப்போது…’

நூலின் ஆசிரியர்,

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x