பேரழிவின் சாட்சியங்கள்: இனியும் போர் வேண்டுமா?

பேரழிவின் சாட்சியங்கள்: இனியும் போர் வேண்டுமா?
Updated on
3 min read

முதல் உலகப் போர் தொடங்கிய 100-வது ஆண்டு நிறைவும், இரண்டாம் உலகப் போர் தொடங்கிய 75-ம் ஆண்டு நிறைவும் இந்த 2014-ல் சந்தித்துக்கொள்வது ஆச்சரியமான தற்செயல்தான். இந்தப் போர்களில் பெருமளவில் பாதிக்கப்பட்ட நாட்டினர் துயரத்துடனும், பாதிப்புகளுக்குக் காரணமான நாட்டினர் குற்றவுணர்வுடனும் அந்தப் போர்களை நினைவுகூருகின்றனர்.

முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, அந்த அளவுக்கு நாசத்தை ஏற்படுத்தும் இன்னொரு போர் வருவதற்கே சாத்தியம் இல்லை என்றுதான் உலகமே நினைத்தது. ஆனால், அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. முதல் உலகப் போர் முடிவுக்கு வந்து 21 ஆண்டுகளில், அதாவது 1939-ல், இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. அதுவரை ‘மாபெரும் போர்’ (கிரேட் வார்) என்ற சொல் முதல் உலகப் போரைத்தான் குறித்துக் கொண்டிருந்தது. ஆனால், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வருவதற்குள் உலகுக்கே ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது: இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் முதல் உலகப் போர் ஒன்றுமே இல்லை.

அழிவின் எல்லையைத்தான் இந்தப் போர்களில் மனிதர்கள் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். அதற்கே உலகம் ஒட்டுமொத்தமாக உருக்குலைந்துபோய் விட்டது. தேசங்கள் அழிந்தன. தேசங்களின் எல்லைக் கோடுகள் மாற்றப்பட்டன. ஆகவே, இனியும் ஒரு உலகப் போர் வருமானால், அது இரண்டாம் உலகப் போரைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமானதாக, உலகையே அழிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.

இன்று உலகெங்கும் நடந்துவரும் போர்களைப் பார்த்தால், நம்முள் மூன்றாம் உலகப் போரைப் பற்றிய அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது. இஸ்ரேல்-பாலஸ்தீனம், உக்ரைன்-ரஷ்யா, சிரியா, லிபியா, இராக், சூடான், நைஜீரியா என்று நாடுகளுக் கிடையே நடக்கும் போர்கள், உள்நாட்டுப் போர்கள், சிறுபான்மை யினர் மீது உலகமெங்கும் அந்தந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மையினர் தொடுக்கும் போர்கள், இன அழிப்புகள், இதற்கெல்லாம் மேலாக எல்லா நாடுகளிலும் கொள்ளையிடத் துடிக்கும் வல்லரசுகளின் ஊடுருவல் போர்கள், பொருளாதாரப் போர்கள் என்று எல்லாவற்றையும் பார்க்கும்போது வெடிக்கக் காத்திருக்கும் மூன்றாம் உலகப் போரின் அங்கங்கள்தானோ இவையெல்லாம் என்ற அச்சம் எழுகிறது. இந்த அச்சம்தான் இரண்டு போர்களையும் நாம் நினைவுகூர வேண்டியதன் அவசியத்தை உருவாக்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in