

தன்னுடைய வழிகாட்டி சொன்ன வார்த்தைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் ஒருவர் அர்ப்பணித்துக்கொண்டு வாழ முடியுமா? வாழ முடியும் என்று நிரூபித்த வாழ்க்கை ஜி.எஸ். லட்சுமண ஐயருடையது. சுதந்திரப் போராட்ட வீரர். எத்தனையோ தலித் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர். லட்சுமண ஐயரின் சிலையைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் திறந்துவைத்தார். ஐயரை அறிந்திராதவர்களுக்கும் அவரைப் பற்றிய அறிமுகம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இது. சக மனிதர்கள் மீது பேரன்பு கொண்ட ஆளுமையின் வரலாறு அவருடையது!
கோபிச்செட்டிப்பாளையத்தில் 1917 பிப்ரவரி 22-ல் பெரும் நிலக்கிழாரான சீனிவாச ஐயரின் மகனாகப் பிறந்தவர் ஜி.எஸ். லட்சுமண ஐயர். தந்தை சீனிவாச ஐயர் சுதந்திரப் போராட்ட வீரர். கோபியைச் சுற்றி 650-க்கும் மேற்பட்ட ஏக்கர்கள் அவருக்குச் சொந்தமானவை. டி.எஸ். வங்கி எனும் வங்கியையே நடத்திவந்தவர். பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குத் தனது நிலங்களை இலவசமாக வழங்கியவர் அவர். தலித் மக்களின் குடியிருப்புக்காக ஆறரை ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியவர். சமூக அக்கறை மிக்க அவரது வாழ்க்கையைப் பின்பற்றிய லட்சுமண ஐயர் தந்தையைப் போலவே பல்வேறு சமூகப் புரட்சிகளைச் செய்தவர். ஊர்க் கிணறுகளில் தலித் மக்கள் நீரெடுப்பதற்கு சாதியவாதிகள் அனுமதி மறுத்த நிலையில், அவர்களைத் தங்கள் வீட்டுக் கிணற்றிலேயே நீர் எடுக்க அனுமதித்தவர்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச உணவு, தங்கும் வசதியுடன் கூடிய மாணவர் விடுதிகளை 1935-லேயே தொடங்கி நடத்திவந்தவர். மாணவர்களுக்காக டி.எஸ்.ராமன் விடுதியையும், மாணவிகளுக்காக சரோஜினி தேவி விடுதியையும் அவர் நடத்திவந்தார்.
1942-ல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி, சிறையில் இருந்த லட்சுமண ஐயர், பிணையில் வெளிவந்திருந்தபோது போலீஸாரின் கண்காணிப்பையும் மீறி குஜராத்தின் வார்தா நகரில் இருந்த காந்தியைச் சந்தித்தது அவர் வாழ்வின் மிக முக்கியமான தருணம். போலீஸின் கண்காணிப்பை மீறி வந்தது தவறு என்று அறிவுறுத்திய காந்தி, வேலூர் சிறையில் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார். “சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சேவையிலிருந்து தொடங்கு” என்று காந்தி சொன்ன வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் அதைச் செயல்படுத்தினார் லட்சுமண ஐயர். அரிஜன சேவா சங்கத்தின் அமைப்புச் செயலாளராக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
சத்தியமங்கலம், பவானி என்று கோபியைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினார். ஆதிக்க சாதியினரிடம் கடன் வாங்கி வட்டியே கட்ட முடியாமல் தவித்த தலித் மக்களுக்கு உதவி செய்து அவர்களைக் கடன் சுமையிலிருந்து விடுவித்தார். தலித் குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக நின்றார். சமூக விடுதலைக்காக அவர் செய்த பணிகளின் காரணமாக, தன்னுடைய சொந்த சமூகத்தினரால் அவரது குடும்பம் விலக்கிவைக்கப்பட்டபோதும்கூட லட்சுமண ஐயர் தன்னுடைய பாதையைத் துளியும் மாற்றிக்கொள்ளவில்லை.
சமூகப் பணிகளுக்காகச் செலவிட்டதன் காரணமாக ஏற்பட்ட கடன்களை அடைக்க மேலும் மேலும் மேலும் சொத்துக்களை இழந்துகொண்டேயிருந்தார். ஆனால், விடுதலை என்பது சமூக விடுதலைதான் என்பதில் உறுதியாக நின்ற லட்சுமண ஐயருக்கு இவையெல்லாம் பொருட்டாகவே இருக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் அவரது மனைவி லட்சுமி, மாமனார் சுந்தரம் ஐயர் ஆகியோரும் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்துக்குப் பிறகு, 1952-ல் கோபி நகர சபைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற லட்சுமண ஐயர், பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார். கோபிக்கு பவானி நதி நீரைக் கொண்டுவரும் திட்டம் அவற்றில் ஒன்று. கோபி பகுதியில் பொதுக் கிணறுகளில் தலித் மக்கள் நீரெடுப்பதற்கு ஆதிக்க சாதியினர் விதித்திருந்த சமூகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்தே கோபி பகுதியில் வசித்த தலித் மக்கள் பொதுக் கிணறுகளில் நீரெடுக்கும் உரிமையைப் பெற்றனர். தக்கர் பாபா வித்யாலயம் என்ற தொடக்கப் பள்ளி, பால்வாடிகள், குழந்தைகள் காப்பு மையங்கள் என்று லட்சுமண ஐயர் நிறுவிய கல்வி மையங்கள் ஏராளமான குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிறக்கச்செய்தன. அவர் நடத்திய பள்ளி, விடுதியில் தங்கிப் படித்த குழந்தைகள் இன்றைக்கு நல்ல பணியில் சமூக மரியாதையுடன் வாழ்கிறார்கள்.
நாட்டிலேயே கையால் மலம் அள்ளும் வழக்கத்தை ஒழித்த முதல் நகராட்சி கோபிச்செட்டிப்பாளையம்தான். அந்தப் பெருமைக்கு வித்திட்டவர் லட்சுமண ஐயர். 1986-ல் நடந்த நகர சபைத் தேர்தலில் வென்று மீண்டும் தலைவரான அவர், நகரின் உலர்க் கழிப்பறைகளை ஒழித்துக்கட்டினார். இதன் மூலம் மனித மலத்தை மனிதரே கையால் அள்ளும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சமூகப் பிரச்சினைகளுக்கு எதிரான போராட்டங்களில் முதல் ஆளாகக் கலந்துகொள்ளும் பழக்கம் அவரிடம் இறுதிவரை இருந்தது. ‘ஓயா மாரி’ எனும் பெயரில் அவரது வாழ்க்கையை ஆவணப்படமாகப் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளரும் சமூகச் செய்ற்பாட்டாளருமான ச.பாலமுருகன். தியாக வாழ்க்கையின் உன்னதத்தை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்லும் பதிவு அது.
சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து அரசியலில் இருந்தவர் என்றாலும் இன்றைய அரசியல் கலாச்சாரத்தின் நிழல் அவர் மீது விழுந்ததேயில்லை. ஒருகட்டத்தில் காங்கிரஸிலிருந்து விலகி, ஜனதா கட்சியில் சேர்ந்தார். அரசியல் என்பது சமூகப் பணிகளுக்கானது என்று நம்பிய தலைமுறையினரின் கடைசி மனிதராக, 2011-ல் மறைந்தார். இறக்கும்போது அவர் பெயரில் ஒரு சென்ட் நிலமில்லை. அவர் மறைந்தபோது ஊரிலேயே புதிய தலைமுறையினர் பலருக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், தியாக வாழ்க்கைக்கு மறைவு ஏது? அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கிறது. அடுத்ததடுத்த தலைமுறையினர் சமூகத்துக்கு சேவையைத் தொடங்க வேண்டும் என்றால், இந்நாட்டில் எந்த இடத்திலிருந்து அவர்கள் தொடங்க வேண்டும் என்பதை அந்தச் சுடர் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறது!
-வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு:
chandramohan.v@thehindutamil.co.in