

தொழிலாளர்கள் என்றாலே கிள்ளுக் கீரையாக நினைப்பதுதான் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக் கும் வழக்கம். இப்போது அவர்கள் இல்லாததன் குறையை காஷ்மீரத்தில் உணர்கிறார்கள். உத்தரப் பிரதேசம், பிஹார், ஹரியாணா, ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் காஷ்மீரில் கிடைத்த இடத்தில் தங்கிக்கொண்டு, அன்றாடக் கூலிக்கு வேலை செய்துவந்தனர். சமீபத்தில், காஷ்மீரைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தில் இவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்திய விமானப்படை விமானங்களிலும் ராணுவ வாகனங்களிலும் வேற்று மாநிலத்தவர், தங்கள் ஊர்களுக்கு இலவசமாகத் திரும்பலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதையடுத்து, அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர். இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொழிலாளர்களே கிடையாது. தண்ணீர்க் குழாய்களைப் பழுதுபார்ப்பது, கழிவுநீர் வெளியேற அடைப்புகளை நீக்குவது தொடங்கிக் கட்டுமானப் பணிகள் வரை என்று இந்தத் தொழிலாளர்கள்தான் எல்லா வேலைகளையும் செய்துவந்தனர்.
மழை, வெள்ளம் உச்சத்தில் இருக்கும்போது முகாம்களில் இருந்தால் உதவிகளைச் செய்வார்கள். மழை நின்று, வெள்ளம் வடிந்த பிறகு குடும்ப அட்டை வைத்திருக்கும் காஷ்மீரிகளுக்குத்தான் அரசின் உதவிகள் கிடைக்கும். இந்த நிலையில், காஷ்மீரில் இருந்தால் மேலும் சிரமப்பட வேண்டும் என்று அவர்கள் ஊர் திரும்பிவிட்டனர். அத்துடன் நவராத்திரிப் பண்டிகை வந்துவிட்டது. பிஹார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நவராத்திரி பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
எனவே, பூஜை சமயத்தில் ஊரில் இருக்கலாம். பிறகு, காஷ்மீருக்கு வரலாம் என்றும் நினைத்து அவர்களில் பலர் வெளியேறிவிட்டனர். ஆனால், இப்படிப் பெரும்பாலானவர்கள் வெளியேறியிருந்தாலும் சில நூறு பேர் இன்னும் தங்கியிருக்கின்றனர். இப்போது அவர்கள் காட்டில் மழை. தொழில் திறமை உள்ள தொழிலாளர்களுக்குத் தினந்தோறும் ரூ.400 தரப்பட்டுவந்தது. இப்போது அது ரூ.600 ஆக உயர்ந்துவிட்டது.
மற்ற தொழிலாளர்கள் நவம்பர் முதல் வாரத்தில் ஊர் திரும்புவார்கள். குளிர் காலம் முடிந்த பிறகு மார்ச் மாதம்தான் திரும்புவார்கள். இப்போது திரும்ப வாய்ப் பில்லை. சாலைகள், பாலங்கள், நடைமேம்பாலங்கள், ஆற்றங்கரைகள், வீடுகள், பொதுக் கட்டிடங்கள் என்று நிறைய கட்ட வேண்டியிருக்கிறது. தொழிலாளர்கள் இல்லையென்றால் இந்த வேலைகள் வேகம் பிடிக்காது என்று கட்டுமானத் தொழிலைச் சேர்ந்தவர்கள் கவலைப்படுகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகளை வாடகைக்கு விடுகிறவர்களின் கவலை இதைவிடப் பெரிது. சுற்றுலாப் பருவம் இன்னும் இரண்டு மாதம் இருக்கும்போது இந்த மழை, வெள்ளம் வந்து வீடுகளைப் பாழாக்கிவிட்டது. இதைச் சரிசெய்யவும் தொழிலாளர்கள் இல்லை. எனவே, இரண்டு மாத வருமானம் போய்விட்டதே என்று வருத்தப்படுகின்றனர். தொழிலாளர்களின் அருமை அவர்கள் வேலை செய்யும்போது யாருக்கும் தெரிவதில்லை. அவர்கள் வேலைக்கு வர மறுத்தாலோ வேலை செய்வதை நிறுத்தினாலோதான் தெரிகிறது; காஷ்மீரிகள் அதற்கு விதிவிலக்கல்ல.