Published : 11 Sep 2018 09:09 AM
Last Updated : 11 Sep 2018 09:09 AM

எப்படிப்பட்டவர் ரஞ்சன் கோகோய்? 

புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அரூப் குமார் தத்தா தனது ‘குவாஹாட்டி ஹைகோர்ட்: ஹிஸ்டரி அண்ட் ஹெரிடேஜ்’ நூலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். அசாமின் செல்வாக்கு மிக்க இரண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையிலான உரையாடல் அது. 1982-ல் 66 நாட்கள் அசாமின் முதல்வராகப் பதவிவகித்த கேசவ் சந்திர கோகோய்க்கும், அசாமின் முன்னாள் சட்ட அமைச்சரும் சட்டவிரோதக் குடியேறிகளை நிர்ணயிக்கும் தீர்ப்பாய சட்டத்தை (1983) உருவாக்கியவருமான அப்துல் முஹிப் மஜூம்தாருக்கும் இடையிலான உரையாடல். “தங்கள் மகன் எதிர்காலத்தில் தங்களைப் போலவே அசாம் மாநில முதல்வராக வருவாரா?” என்று அப்துல் முஹிப் மஜூம்தார் கேட்டபோது, “என் மகன் என்னுடைய நகலாக இருக்க மாட்டான். ஆனால், இந்தியாவின் தலைமை நீதிபதியாக வரும் திறமை அவனுக்கு உண்டு” என்று பதிலளித்தாராம் கேசவ் சந்திர கோகோய். அவரும் வழக்கறிஞர்தான். அவரது வார்த்தைகள் தீர்க்கதரிசனமானவை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் தீபக் மிஸ்ரா, அந்தப் பதவிக்கு கேசவ் சந்திர கோகோயின் மகனான ரஞ்சன் கோகோயைப் பரிந்துரைத்திருக்கிறார்.

1954 நவம்பர் 18-ல், அசாமின் கிழக்குப் பகுதியில் உள்ள திப்ருகர் நகரில் புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர் ரஞ்சன் கோகோய். உடன்பிறந்தோர் நான்கு பேர். அண்ணன் அஞ்சன் குமார் கோகோய் ஏர் மார்ஷலாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். திப்ருகர் நகரின் டான் பாஸ்கோ பள்ளியில் படித்த ரஞ்சன் கோகோய், டெல்லியின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பயின்றவர். தனது தந்தையை அடியொற்றி சட்டம் பயின்ற அவர், 1978-ல் வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்தார். மென்மையாகப் பேசக்கூடியவர், யாருடனும் அதிகம் பேசாதவர் என்று குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் அவருடன் பணியாற்றிய சக வழக்கறிஞர்கள் நினைவுகூர்கிறார்கள்.

ரஞ்சன் கோகோய் வித்தியாசமான சிந்தனை கொண்ட நீதிபதியாகப் பணியாற்றினார் என்று குவாஹாட்டி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அதுல் சந்திர புராகோஹேன் குறிப்பிடுகிறார். ஒரே மாதிரியான வழக்குகளை இணைத்து, அவற்றை ஒன்றாக விசாரித்து, ஒரே தீர்ப்பாக வழங்குவது ரஞ்சன் கோகோயின் பாணி. அசாம் கல்வித் துறை தொடர்பான சுமார் 10,000 வழக்குகள் தீர்க்கப்பட்டது இப்படித்தான். 2001 பிப்ரவரி 28-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2010 செப்டம்பர் 9-ல் பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றல் செய்யப்பட்டார். ஐந்து மாதங்களிலேயே அந்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். 2012 ஏப்ரல் 23-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.

தீர்ப்புகளைத் தாண்டி கருத்துகள் சொல்வதிலும் தனது சிந்தனைகளை வெளிப்படுத்துவதிலும் புகழ்பெற்றவர். ஜூலை மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஜனநாயகத்தைக் காக்கும் முதல் அணியில் சுயாதீன பத்திரிகையாளர்களும், உரத்துப் பேசும் நீதிபதிகளும் இடம்பெற வேண்டும்” என்றார். சட்டப் பொருள் விளக்கப் பணியில் சிறப்பாகப் பணியாற்ற, நீதித் துறையானது முனைப்புடன் செயலாற்ற வேண்டும்; கறைபடியாமல் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். குவாஹாட்டியில் நார்த் ஈஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் நடத்திய நீதிபதி கே.என். சைக்கியா நினைவுக் கருத்தரங்கில் பேசிய அவர், “வழக்குகள் தேங்குவது என்பது நீதித் துறையைப் பீடித்திருக்கும் பிரச்சினை. சர்வதேச சமூகத்தின் முன் அவப்பெயரை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

உயர் நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதையும், மாவட்ட, கீழமை நீதிமன்றங்களில் 2.8 கோடி வழக்குகள் தேங்கி நிற்பதையும் குறிப்பிட்டுப் பேசிய அவர், “எதிர்காலத் தேவையின் அழுத்தங்களுடன், மிகப் பெரிய சவால்களை இன்றைக்கு நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இருக்கும் சட்டவியல் தொடர்பான மறு சிந்தனையையும், மறு மதிப்பீட்டையும் இவை கோருகின்றன” என்று குறிப்பிட்டார். தங்கள் சொத்து விவரங்களைப் பகிரங்கமாக வெளியிட்டிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 11 பேரில் ரஞ்சன் கோகோயும் ஒருவர். அதன்படி, அவரிடம் கார் இல்லை. அவருக்குச் சொந்தமான பழைய வீடும், அவரது தாய் சாந்தி கோகோயால் அவர் பெயருக்கு மாற்றப்பட்டதுதான்.

அசாமின் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் பணியில் நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமனுடன் இணைந்து ஈடுபட்டிருக்கிறார். 2016-ல், கேரள இளம்பெண் செளம்யா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு தொடர்பாக விமர்சித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவுக்கு முதலில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது இவர்தான். “தீர்ப்பின் மீதான தாக்குதல் அல்ல அது, நீதிபதிகள் மீதான தாக்குதல்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ஆருஷி கொலை வழக்கு, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளிட்டவை இவர் விசாரித்த வழக்குகள். ஆனால், தலைப்புச் செய்திகளில் இவர் பெயர் இடம்பெற்றது வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அதிருப்தி தெரிவித்து, இவரும் செலமேஸ்வர் உள்ளிட்ட மூன்று நீதிபதிகளும் ஜனவரி மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதுதான். தீபக் மிஸ்ராவுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் கருத்து வேறுபாடுகள் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.

‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில் வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x