

டெல்லி அரசியலில் மீண்டும் புயல் வீசத் தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில், 31 இடங்களை வென்ற பாஜக ஆட்சியமைக்க மறுத்ததையடுத்து, 28 இடங்களை வென்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸின் 8 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. எனினும், லோக்பால் மசோதாவைத் தாக்கல் செய்யும் விஷயத்தில் காங்கிரஸும் பாஜகவும் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, 49 நாட்களிலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கேஜ்ரிவால்.மக்களவைத் தேர்தலில் பாஜகவின் விஸ்வரூப வெற்றிக்குப் பின்னர், அரசியல் களத்திலிருந்து கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார் கேஜ்ரிவால். டெல்லியில் தற்போது ஆட்சியமைக்க பாஜக முயல்வதைத் தொடர்ந்து மீண்டும் அரசியல் களத்தில் அவர் சுறுசுறுப்படைந்திருக்கிறார்.
ஹர்ஷவர்தன் உள்ளிட்ட மூன்று பேர் மக்களவை உறுப்பினர்களான பின்னர், தற்போது பாஜகவின் பலம் 28தான். எனவே, குதிரை பேரத்தில் பாஜக ஈடுபடும் என்று ஆஆகவும் காங்கிரஸும் கூறிவந்தன. திங்கள்கிழமை காலை, பாஜகவின் திரைமறைவு வேலைகளை அம்பலப்படுத்தப்போவதாக கேஜ்ரிவால் கூறிய சில மணி நேரத்துக்குள், ஆஆகவின் இணையதளத்தில் பரபரப்பான வீடியோ ஒன்று வெளியானது.
டெல்லி பாஜக துணைத் தலைவர் ஷேர் சிங் தாகரை, அவரது வீட்டில், ஆஆக சட்டசபை உறுப்பினர் தினேஷ் மொஹானியா, அந்தக் கட்சியின் செயலாளர் விவேக் யாதவ் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். ஷேர் சிங்கின் உதவியாளர் விவேக் யாதவும் உடன் இருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் சாதகமாக நடந்துகொண்டால் ரூ.4 கோடி தருவதாக ஷேர் சிங் பேசுவதுபோல் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. “கடந்த ஒரு மாதமாகவே பாஜக என்னை இது தொடர்பாக அணுகிவருகிறது. எனவே, கட்சித் தலைமையிடம் பேசி இந்தச் சந்திப்பை ரகசியமாகப் பதிவு செய்தேன்” என்று தினேஷ் மொஹானியா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவிக்கவிருப்பதாக கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜகவின் ஆட்சிமன்றக் குழு கூடி விவாதிக்கும் என்றும், ஜனக்புரி தொகுதி உறுப்பினரான ஜக்தீஷ் முகி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன. மேலும், டெல்லியை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என்று தங்கள் எம்எல்ஏக்களை பாஜக கேட்டுக்கொண்டுள்ளது. பிஹார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டதால், டெல்லி தேர்தலைச் சந்திப்பதில் பாஜகவுக்குத் தயக்கம் இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் கருதப்பட்டது. ‘குறுகிய காலத்தில் பதவி விலகிய ஆஆக மீதும், ஊழல் புகார்களில் சிக்கிய காங்கிரஸ் மீதும் டெல்லி மக்கள் அதிருப்தியுடன்தான் இருப்பார்கள். தேர்தலைச் சந்திப்பது பாஜகவுக்குத்தான் சாதகம்’ என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருந்த நேரத்தில், இப்படியான சங்கடம் பாஜகவுக்கு நேர்ந்திருக்கிறது.
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in