Last Updated : 26 Jun, 2019 09:28 AM

 

Published : 26 Jun 2019 09:28 AM
Last Updated : 26 Jun 2019 09:28 AM

காந்தியும் 60 நாய்களும்!

‘திரு. காந்தி அவர்களே, நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா? திரு. அம்பாலால் சொன்னதற்கு ‘வேறென்ன செய்துவிட முடியும்?’ என்று தாங்கள் பதில் கூறியது உண்மைதானா? எந்தவொரு உயிரையும் எடுப்பதற்கு இந்து மதம் அனுமதிக்காததோடு, அதைப் பாவம் என்று கருதும்போது வெறிநாய்களைக் கொல்வது சரிதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று அகமதாபாத் மனிதநேய சங்கத்திலிருந்து காந்திக்குக் காட்டமாக ஒரு கடிதம் வந்திருந்தது. படித்துவிட்டுத் தன் உதவியாளரைப் பார்த்து மெலிதாகப் புன்னகை புரிந்தார் காந்தி.

1926-ன் முற்பகுதி அது. தீவிர அரசியலிலிருந்து ஒரு ஆண்டு காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளப்போவதாக காந்தி அறிவித்திருந்தார். ஒரு வகையில் அது அமைதி ஆண்டு. அந்த ஆண்டில்தான் வாரந்தோறும் ஒரு நாளை அமைதி நாளாக அனுசரிக்கும் வழக்கத்தை காந்தி தொடங்கினார். அடுத்த 23 ஆண்டுகள் இந்த வழக்கத்தை அவர் கைவிடவே இல்லை. அந்த நாட்களில் அவர் மக்களைச் சந்திக்காமல் இருப்பதில்லை. அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்வார். அவருடைய பதில் அவசியமான இடங்களில் ஒரு தாளில் எழுதித் தருவார். அதிக அளவில் பயணம் செய்தது, நிறைய இடங்களில் பேசியது போன்றவற்றால் அதீதக் களைப்படைந்த காந்தி, சிறு இளைப்பாறுதலாகக் கண்டுபிடித்த உத்தி இந்த அமைதி தினம். அதுவே அவருக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுப்பதாக மாறியது.

காந்தியின் அமைதி ஆண்டின் தொடக்கத்தில் நாய்கள் தொடர்பான ஒரு விவகாரம் வெடித்தது. காந்தி ஆசிரமத்தின் புரவலரும் அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின்போது காந்தியால் எதிர்க்கப்பட்டவருமான அம்பாலால் சாராபாய் தனது ஆலை வளாகத்தில் திரிந்த 60 வெறிநாய்களை ஆள்வைத்துக் கொன்றுவிட்டார். அந்த நாய்கள் பலரையும் கடித்துவந்ததாலும் பலருடைய உயிரிழப்புக்குக் காரணமானதாலும்தான் இப்படி ஒரு முடிவெடுத்தார். நாய்களைக் கொன்ற பிறகு அவருடைய மனசாட்சி கேட்கவில்லை. காந்தியிடம் இது பற்றிக் கூறியபோது, ‘இதுபோன்ற சூழலில் வேறென்ன செய்துவிட முடியும்?’ என்று பதிலளிக்கிறார். இருவருக்கிடையிலான உரையாடலைப் பற்றிக் கேள்விப்பட்ட அகமதாபாத் மனிதநேய சங்கம், காந்தியின் விளக்கத்தைக் கோரி ஒரு கடிதம் எழுதுகிறது.

‘இதுதான் மனித நேயமா?’ என்ற தலைப்பில் காந்தி அந்தக் கடிதத்தைத் தனது ‘யங் இந்தியா’ இதழில் வெளியிடுகிறார். அந்தக் கடிதமும் அதற்கு காந்தியின் பதிலும் அந்த இதழின் முதல் ஒன்றரைப் பக்கங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. காந்தியின் பதிலில் அகிம்சை பற்றிய அவரது பார்வையின் உள்ளிழைவுகள் நமக்கு வெளிப்படுகின்றன. அவரது அகிம்சை என்பது வெறுமனே லட்சியபூர்வமானதல்ல, நடைமுறை அடிப்படையிலானது என்பதும் நமக்குப் புலப்படும்.

‘நாமெல்லாம் குறைகள் கொண்ட, தவறிழைக்கக் கூடிய மனிதர்கள்தானே. வெறிநாய்களைக் கொல்வதைத் தவிர வேறேதும் வழி நம் முன்னே இல்லை. சில சமயங்களில் பல மக்களைக் கொன்றுகுவிக்கும் ஒரு மனிதனைக் கொல்ல வேண்டிய தவிர்க்க முடியாத கடமையை நாம் எதிர்கொள்ள வேண்டிவருகிறது’ என்று காந்தி தன் பதிலில் எழுதியிருந்தார். மேலும், ஒரு சமூகம் நாய்களை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றித் தொடர்ந்து விரிவாக எழுதினார். தெருநாய்களெல்லாம் சொர்க்கத்திலிருந்து வந்து குதித்தவை இல்லை. அவையெல்லாம் இந்தச் சமூகத்தின் சோம்பலின், அலட்சியத்தின், அறியாமையின் வெளிப்பாடு என்று காந்தி கருதினார்.

தெருநாய்கள் விவகாரத்தில் மேலைநாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகிறார். மனிதநேயம் என்பதன் லட்சியத்தைப் பொறுத்தவரை இந்தியா மேம்பட்டதாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் மேலைநாட்டினர்தான் நம்மைவிட அதிக அளவில் கடைப்பிடிக்கின்றனர் என்கிறார். மேலைநாடுகளில் உரிமையாளர் இல்லாத நாயைக் காண முடியாது என்றும் நாயைக் கொல்லக் கூடாது என்று இரக்கத்துடன் பேசும் இந்தியாவில்தான் உரிமையாளர்கள் இல்லாத நாய்கள் தெருக்களில் மலிந்துகிடக்கின்றன என்றும் கூறுகிறார். ஒரு சமூகத்துக்கு நாய்கள், கால்நடைகள் மீது அக்கறை இருப்பின், அவற்றை அநாதையாக விடக் கூடாது என்று சொல்லும் காந்தி, உண்மையில் அது போன்ற நாய்கள் மீது அக்கறை கொண்டிருப்பவர்கள், அவற்றுக்கென்று பராமரிப்பகங்களை ஏற்படுத்த வேண்டும்; இல்லையெனில், அவற்றில் சிலவற்றைத் தங்களுடன் வைத்துப் பராமரிக்க வேண்டும் என்கிறார்.

அந்த ஆண்டு முழுவதும் அந்த விவாதம் நீடித்தது. காந்தியும் பொறுமையாகத் தன் தரப்பை விவரித்துக்கொண்டே வந்தார்.

வெறிநாய்களை முன்னிட்டு அகிம்சையைப் பற்றிப் பேசும்போது தரவுகளை முன்வைக்கவும் அவர் தவறவில்லை. அகமதாபாத் அரசு மருத்துவமனையின் கணக்குப்படி 1925-ல் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,117 என்றும்

1926-ன் முதல் 9 மாதங்கள் வரை இந்த எண்ணிக்கை 995 என்றும் ஒரு தரவை ‘யங் இந்தியா’ இதழில் முன்வைக்கிறார்.

‘அகிம்சையைத் தீவிரமாகப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்பவர்களிடம் உள்ள பிரச்சினையே அவர்கள் அதனைக் கண்மூடித்தனமான பக்தியாக மாற்றிவிட்டு, நம்மிடையே உண்மையான அகிம்சையைப் பரவ விடாமல் முட்டுக்கட்டை போடுவதுதான். நாய்கள் விவாதத்தில் பேசப்படும் அகிம்சையானது நமது மனசாட்சியை எந்த அளவுக்கு மயக்கத்துக்குள்ளாக்கிவிட்டதென்றால், கடுமையான சொற்கள், கடுமையான தீர்மானங்கள், வெறுப்பு, கோபம், பிறருக்குத் தீங்கிழைக்கும் எண்ணம், கொடூர மனப்பான்மை போன்ற இன்னும் மோசமான வன்முறைகளை உணர முடியாதவர்களாக நம்மை ஆக்குகிறது. மனிதர்களையும் விலங்குகளையும் கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதைக்குள்ளாக்குவது, சுயநலமிக்க பேராசையால் நிகழும் சுரண்டல், பசி பட்டினி போன்றவையும், நம் கண்முன்னே பலவீனர்களின் சுயமரியாதையைக் கொன்று, அவர்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துவது போன்றவையெல்லாம் நாய்களைக் கொல்வதைவிட மோசமானது என்பதை தற்போதைய விவகாரம் நம்மை மறக்கச் செய்துவிட்டது. 60 முஸ்லிம்களும் ஆங்கிலேயர்களும் கொல்லப்பட்டால், நாய் ஆர்வலர்கள் இந்த அளவுக்குக் குரல்கொடுப்பது சந்தேகமே’ என்று எழுதுகிறார்.

இந்த விவகாரத்தில் காந்தி மீது கடுமையான வசை பொழிந்து ஆண்டு முழுவதும் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. நேரிலும் அவரைச் சந்தித்து மூர்க்கமான அகிம்சையாளர்கள் பலர் கோபத்தையும் வன்மத்தையும் கொட்டினார்கள். அவர்களது கோபமும் வன்மமும் காந்தி எழுதியதை நிரூபித்தன. எனினும் அவர்கள் மேல் காந்திக்குக் கோபம் இல்லை. “அவர்களெல்லாம் என்னை அகிம்சையின் உருவமாகக் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட நான் அவர்களின் எண்ணத்துக்கு மாறாக ஒரு கருத்தைக் கூறும்போது கோபம் கொள்கிறார்கள். இதுவும்கூட அன்பின் வெளிப்பாடுதான்’ என்றார்.

- ஆசை, 

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x