Published : 05 Jun 2019 09:19 AM
Last Updated : 05 Jun 2019 09:19 AM

இப்தார் விருந்துகள் இனி வீட்டுக் கொண்டாட்டங்கள் ஆகட்டும்!

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு. பசியை, ஏழைகளின் நிலையை உணர்ந்திருத்தல் என்ற ஆழமான பிரக்ஞை இந்த நோன்புக்கு உண்டு. ஒரு மாத காலம் தங்கள் உடலை வருத்தி இறைவனை நோக்கி இருக்கும் நோன்பானது, தினந்தோறும் அதிகாலையில் தொடங்கி மாலையில் முடியும்; கிட்டத்தட்ட 14 மணி நேரம் பசித்திருந்து நோன்பை முடிக்கும் நிகழ்வையே ‘நோன்பு துறக்கும் நிகழ்வு’ என்று குறிப்பிடுகிறோம். பசி, தாகம், களைப்பின் உச்சத்தில் நிகழ்த்தப்படும் பிரார்த்தனையை இறைவன் உடனடியாக ஏற்பார் என்பது நம்பிக்கை; அப்படிப்பட்ட பிரார்த்தனை சுயநலன் சாராததாக, ஒட்டுமொத்த சமூகத்துக்குமானதாக அமையும் பட்சத்தில், மேலும் கூடுதல் சிறப்புடையதாக அமையும் என்பதும் நம்பிக்கை.

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருக்க இடவசதி ஏற்பாடு செய்துதருவதும், இந்த மாதத்தில் என்றேனும் ஒரு நாள் தங்கள் சார்பில் நோன்பு துறப்புக்கு ஏற்பாடு செய்துதரப்படுவதும் இஸ்லாமியரல்லாதோரால் உலகின் பல பகுதிகளிலும் இன்று நடப்பதைக் காண்கிறோம். நோன்பின் மீது இஸ்லாமியரல்லாதோர் கொண்டிருக்கும் மதிப்பு மற்றும் இஸ்லாமியர்கள் மீது கொண்டிருக்கும் அபிமானத்தின் வெளிப்பாடாக இது அமைகிறது.

இந்தியாவில் இது பல காலமாகவே சமூகத்தில், பண்பாட்டில் இருக்கிறது; இன்றும் பல இந்து வணிக நிறுவனங்கள் நோன்புக்குப் பிரமாண்டமாக உதவிவருவதைச் செய்திகள் வாயிலாக நாம் கவனித்தேவருகிறோம்.

நேரு தொடக்கிவைத்த பாரம்பரியம்

இன்றைக்கு அமெரிக்க அதிபரோ, கனடிய பிரதமரோ அந்நாடுகளில் தீபாவளி - பொங்கல் சமயங்களில், கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வதைப் பார்க்கிறோம்; அங்கும் இங்கும் எங்குமுள்ள இந்துக்கள் மத்தியில் அது மகிழ்ச்சியை உருவாக்குகிறது. அதோடு மட்டும் அல்லாது, கிறிஸ்தவர்கள் - இந்துக்கள் மத்தியிலான சமூக இணக்கத்தை மேலும் உறுதிப்படுத்தும் நிகழ்வாகவும் அந்தத் தருணங்கள் மாறுகின்றன. அப்படித்தான் இந்தியாவில் சிறுபான்மையின மக்களுடைய பண்டிகையில் அரசுத் தரப்பு பங்கெடுத்துக்கொள்வதை சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் தருணங்கள் ஆக்க முற்பட்டார் நம்முடைய முதல் பிரதமர் நேரு.

நம்முடைய குடியரசுத் தலைவர் மாளிகை, ஆளுநர் மாளிகைகளில் தொடங்கி படிப்படியாகப் பல கட்சித் தலைமையகங்களிலும் நோன்பு துறப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளும், ரமலான் மாத சிறப்பு இப்தார் விருந்துகளும் நடப்பதற்கான சூழல் இப்படித்தான் வளராலானது. ரமலான் மாதத்தில் நம்முடைய குடியரசுத் தலைவர் மாளிகையில் ‘இப்தார் விருந்து’ அளிப்பது குடியரசுத் தலைவர் வழக்கம்.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவரானபோது அவர் ஒரு மாற்றத்தை உண்டாக்கினார். தன்னுடைய ஐந்தாண்டு பதவிக் காலத்தில் ஒரு முறையும் இப்தார் விருந்து அளித்திடாத அவர், அதற்கு மாறாக, விருந்துக்கு ஆகும் செலவுத் தொகையை, ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சுமார் ரூ.22 லட்சத்தை இப்தார் விருந்துக்காகக் குடியரசுத் தலைவர் மாளிகை செலவிட்டுவந்த நிலையில், அந்தத் தொகையுடன் தன் சொந்தப் பணம் ஒரு லட்ச ரூபாய் சேர்த்து, ரூ.23 லட்சமாக ஆதரவற்றோர்க்கு அவர் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இப்தார் விருந்துகளும் நடத்துவதில்லை; யாருக்கும் அந்தத் தொகையை உதவுவதாகவும் தெரியவில்லை. இதற்கான பின்னணி ஒரு சிறுகுழந்தைக்கும் இந்நாட்டில் தெரியும்.

பிணைப்பா, விலக்கலா?

ஒருகாலத்தில் பெரும்பான்மைச் சமூகத்தினருடன் ஒன்றிணைந்து கூடி உணவுண்டு மகிழ்வதற்கான தருணங்களாக அமைந்துவந்த ‘இப்தார் விருந்துகள்’ இன்று அரசியல் விவாதங்களுக்குள் நுழைக்கப்பட்டுவிட்டன. “மதச்சார்பற்ற அரசியல் பேசுவோர் இப்தார் விருந்துகளில் மட்டும் எப்படிக் கலந்துகொள்கின்றனர்?” என்பன போன்ற கேள்விகள் இந்த நிகழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்திருந்த பின்னணியை இன்று மண்ணில் அடியாழத்தில் புதைத்துவிட்டன.

அமெரிக்க அதிபர் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பது மத அடிப்படையிலான அவருடைய நம்பிக்கையை வெளிப்படுத்த அல்ல; ‘சிறுபான்மையினரும் இந்தச் சமூகத்தில் சக அங்கத்தினர்; நாங்கள் உங்கள் கூட இருக்கிறோம்’ என்கிற செய்தியைப் பகிர்ந்துகொள்ளத்தான். ஆனால், இன்று அந்த வகையிலான நியாயங்களைப் பேச இந்தியாவில் இடம் இல்லை.

மேலும், இன்று இஸ்லாமியர்களிலேயேகூட பெரும்பான்மையினர் ‘இப்தார் விருந்து’கள் இனி தனியுறவு அடிப்படையிலானதாக மட்டும் தொடர்வதே நல்லதாக இருக்கும் என்ற மனநிலை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். ரமலான் பெருநாளை ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் குறைந்தது பத்து இந்துக்களின் குடும்பங்களுடன் இணைந்தே இந்தியாவில் கொண்டாடுகிறது; பிரியாணி நம் எல்லோரையும் இணைக்கிறது. ஆக, தனிப்பட்ட வகையில் நடக்கும் இத்தகைய இப்தார் விருந்துகள் சமூகங்களை மேலும் இணைக்கின்றன; பிணைக்கின்றன. ஆனால், எதிர் விளைவுகளையே அதிகம் உண்டாக்கும் பொதுவெளி இப்தார் அரசியல் விருந்துகளை இனி தொடர்வானேன் என்ற கேள்வியே எழுகிறது.

சொந்தச் செலவு சூனியம்

பொதுவெளியில் நடக்கும் இப்தார் விருந்துகளில், ‘இஸ்லாமியர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அல்லது ஈர்க்கும் விதமாகப் பேசுகிறேன் பார்’ என்று எதையாவது அரசியல் தலைவர்கள் கூடக்குறைவாகப் பேசிவைப்பதே விமர்சனத்துக்காகக் காத்திருக்கும் வாய்களுக்கு பக்கோடா ஆகிறது. மேலும், இந்த விருந்துகளுக்காக அரசியல் கட்சிகள் ஏதோ இஸ்லாமியர்களுக்குச் செலவழிப்பதுபோலவும், இஸ்லாமியர்கள் இதனால் உவகை அடைவதுபோலவும்கூட வெளியே ஒரு தோற்றம் உண்டு.

உள்ளபடி, இந்த இப்தார் விருந்துகள் - அது எந்தக் கட்சி சார்பில் நடத்தப்பட்டாலும் சரி - ஒவ்வொன்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் நிதி திரட்டப்பட்டு நடத்தப்படுவதுதான். ஒருவகையில், இந்த விருந்துகள் இஸ்லாமியர்களின் சொந்தச் செலவிலேயே அவர்களுக்கு வைக்கப்படும் சூனியம் ஆகிவருவதை இன்று அவர்கள் உணரத் தொடங்கியிருக்கின்றனர். ‘நாமே செலவழித்து எதிர்த்தரப்புக்கு ஏன் பேச ஒரு வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்!’ என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது.

ஆகவே, தீபாவளி விருந்துகள்போல, இப்தார் விருந்துகளும் இனி வீட்டுக் கொண்டாட்டங்கள் ஆகட்டும்! ஆனால், விருந்தின் வீச்சு மேலும் பல மடங்கு அதிகரிக்கட்டும். இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றாக அமர்ந்து வீடுகளில் விருந்துண்ணுவோம். எல்லா அரசியலையும் வெளியே தள்ளி மக்களை அன்பால் அரவணைக்கும் வல்லமை பிரியாணிக்கு உண்டு!

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x