Last Updated : 24 Jun, 2019 09:12 AM

 

Published : 24 Jun 2019 09:12 AM
Last Updated : 24 Jun 2019 09:12 AM

அஸிம் பிரேம்ஜி: வணிகக் கலாச்சாரத்தைக் கற்றுத்தந்த நாயகன்!

இந்தியாவின் மிகப் பெரும் ஐடி நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் தலைவராகவும், இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவராகவும் அறியப்பட்ட அஸிம் பிரேம்ஜி, தயாள குணத்தாலேயே தன்னை நினைவுகூரப்படும்படி வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டவர். ‘இந்தியாவின் பில்கேட்ஸ்’ என்று அவர் அழைக்கப் படுவதற்குப் பணபலமும் சாதனைகளும் மட்டும் காரணமல்ல; சமூகப் பங்களிப்புக்கான அர்ப்பணிப்பும்கூடத்தான்.

2013-ல் தனது சொத்தில் பாதியைச் சமூகத்துக்குக் கொடுப்பதாக உறுதியளித்ததோடு அந்த வருடம் ரூ.8,000 கோடியைத் தந்தார். அடுத்த வருடம் ரூ.12,316 கோடி. 2015-ல் கொடுத்தது ரூ.27,514 கோடி. கடந்த மார்ச் மாதம் அவரது விப்ரோ பங்கிலிருந்து 34% - அதாவது ரூ.52 ஆயிரம் கோடியைக் கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக, இதுவரை அவர் சமூகத்துக்காகப் பங்களித்தது ரூ.1.4 லட்சம் கோடி. பிற இந்தியப் பெரும் பணக்காரார்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் இது. வெறுமனே பணத்தை மட்டும் வாரிக் கொடுப்பதோடு தனது கடமை முடிந்தது என்று நினைக்கக்கூடியவர் அல்ல; தொடக்கக் கல்வி, கற்பித்தலின் தரத்தை மேம்படுத்துவது என மிக ஆழமாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.

பிரேம்ஜியின் தொடக்க காலம்

பிரிவினைக்கு முன்பாக ஜூலை 24, 1945-ல் கராச்சியில் பிறந்த அஸிம் பிரேம்ஜி, பாரம்பரியமான வணிகப் பின்புலமுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை முகம்மது ஹஸிம் பிரேம்ஜி, ‘பர்மாவின் அரிசி மன்னர்’ என்று அழைக்கப்பட்டார். அந்த இடத்திலிருந்து ‘ஐடி நிறுவனத்தின் பேரரசர்’ என்று அழைக்கப்படும் உயரத்துக்குத் தன்னை எடுத்துச்சென்றிருக்கிறார் அஸிம் பிரேம்ஜி. தந்தையின் திடீர் மறைவுக்குப் பிறகு வணிகத்தைப் பார்த்துக்கொள்வதற்காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அஸிம் பிரேம்ஜி வெளியேறியபோது அவரது வயது என்ன தெரியுமா? 21.

இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் 1977-ல் வெளிநாட்டு நிறுவனங்களையெல்லாம் இந்தியாவிலிருந்து வெளியேற்ற அரசு முடிவெடுத்தது. ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் உருவாக்கும் வெற்றிடத்தைக் கண்டுகொண்ட அஸிம் பிரேம்ஜி அதைத் தன் திறமையால் நிரப்ப முயன்றார். அதுவரை சம்பாதித்து வைத்திருந்த பெரும் தொகையை கம்யூட்டரில் முதலீடுசெய்யத் துணிந்தார். ‘வெஸ்டர்ன் இந்தியன் வெஜிடபிள் ப்ராடக்ஸ்’ என்பது ‘விப்ரோ’ ஆனது. அதன் பிறகு, நடந்ததெல்லாம் வரலாறு! மென்பொருள் நிறுவனங்கள் எதிர்கொண்ட ‘ஒய்2கே’ பீதியின்போது நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்காக லட்சக்கணக்கான மென்பொருள் நிரல்களை விப்ரோ எழுதிக்கொடுத்தது. ‘ஒய்2கே’ நெருக்கடி முடிவுக்குவந்த பிறகு வேறு சில நிறுவனங்களும்கூட விப்ரோவுடன் கைகோத்துக்கொள்ளும் அளவுக்கு அதன் அணுகுமுறை இருந்தது.

கொடுக்கும் கலை அறிந்தவர்

அஸிம் பிரேம்ஜியின் சாதனைகளும் அவர் வாங்கிய விருதுகளும் ஏராளம். ஆனால், வணிகக் கலாச்சாரம் எப்படி இருக்க வேண்டுமென்ற இலக்கணத்தைக் கற்றுக்கொடுத்ததன் வழியே அவர் இப்போது உயர்ந்துநிற்கிறார். அதனால்தான், வணிக வரலாற்றில் அஸிம் பிரேம்ஜியின் இடம் தனித்துவமாக மிளிர்கிறது. “ஒரு பணக்காரர் தனக்குக் கிடைக்கும் அதிகாரத்தை சமூகத்துக்குத் தர வேண்டும், எல்லா பொறுப்பையும் அரசின் மீது சுமத்தக் கூடாது” என்று சொல்லும் பிரேம்ஜி, பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“மனிதநேயத்தை யாரும் வற்புறுத்த முடியாது. அது இயல்பிலிருந்து வர வேண்டும். அப்படி வரும்போது அது ஆத்ம திருப்தியைத் தரும்” என்பார் பிரேம்ஜி. மனிதநேயம் மட்டுமல்ல; சக ஊழியர்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதம், வெளிப்படைத்தன்மை, நிறுவன நிர்வகிப்பு, அதிகாரப் படிநிலைகளில் ஏற்றத்தாழ்வைத் தகர்த்தது என எல்லாவற்றிலும் முன்னுதாரண வணிகக் கலாச்சார மாதிரியை உருவாக்கினார். தன் அன்றாடத்தையும்கூட எளிமையாக வைத்துக்கொண்டார். விமானம் என்றால் சாதாரண வகுப்பில் பயணிப்பது, டொயாட்டோ காரைப் பயன்படுத்துவது, பயணங்களின்போது நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையிலேயே தங்குவது என எங்கும் எளிமை. “எனது ஊழியர்களுக்கு இது போதும் என்றால் எனக்கும் இது போதும்” என்கிறார் பிரேம்ஜி.

இப்போது விப்ரோ தலைமைப் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். அடுத்த மாதம் தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு ஓய்வுபெறுகிறார் அஸிம் பிரேம்ஜி. “எனக்கு இது ரொம்பவும் நீண்ட, திருப்திதரக்கூடிய பயணம். எனது எதிர்காலத்தை சமூகப் பணிகளுக்காக இன்னும் அர்ப்பணிப்போடு செலவிட விரும்புகிறேன்” என்றிருக்கிறார். இந்தியாவுக்கு நிறைய அஸிம் பிரேம்ஜிக்கள் வேண்டும்!

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x