பார்வையில் பட்ட செய்தி: மகாத்மாவின் செய்தியைச் சுமந்து செல்லும் மாமா!

பார்வையில் பட்ட செய்தி: மகாத்மாவின் செய்தியைச் சுமந்து செல்லும் மாமா!
Updated on
1 min read

நைஜீரியாவில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளைக் கடத்திச்சென்று, உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் கண்டனத்தையும் சந்தித்த போகோ ஹராம் குழுவை யாரும் மறந்துவிட முடியாது. சில மாணவிகள் அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டாலும், இன்னும் பல மாணவிகள் விடுவிக்கப்படவில்லை. அவர்களை மீட்கும் முயற்சியில், நைஜீரிய அரசுக்கும் போகோ ஹராம் பயங்கரவாதிகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்திவருபவர், மாமா (அம்மா) என்று அழைக்கப்படும், 44 வயதான பாரிஸ்டர் ஆயிஷா வக்கீல்.

நைஜீரியாவின் மைதுகுரி பகுதியின் வடக்கு ஷெஷூரி மாவட்டப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இவர், அடிப்படையில் வழக்கறிஞர். கணவர் அல்கலி கானா வக்கீல், நீதிபதியாகப் பணிபுரிகிறார். போகோ ஹராமுக்கும் ஆயிஷாவுக்கும் இடையில் ஆத்மார்த்தமான உறவு உண்டு. அந்த இயக்கத்தின் தலைவர் முகம்மது யூசுப்பின் வீட்டுக்குச் சென்று, அவரது மாணவர்களுக்குச் சமையல் செய்துதருவாராம் ஆயிஷா. “அந்தப் பையன்கள் என்னை ‘அம்மா’ என்றுதான் அழைப்பார்கள். காரணம், அவர்களில் பலர் தாயை இழந்தவர்கள்” என்கிறார்.

எனினும், வளர்ந்த பின்னர் அவர்கள் இத்தனை தீவிரமாகச் செயல்படுவார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. “மதத்தின் பெயரால், பெண்களை இப்படி நடத்தக் கூடாது. ஒரு பெண் உங்களை அறைந்தால்கூட, அவளைத் திருப்பித் தாக்கக் கூடாது என்றுதான் இஸ்லாம் போதிக்கிறது என்று அந்தப் பையன்களிடம் வலியுறுத்திவருகிறேன். என்றாலும், தற்போது அந்தக் குழுவில் எனக்கு அறிமுகம் இல்லாத பலரும் உள்ளனர். எனவே, பேச்சுவார்த்தை கடினமானதாகவே உள்ளது” என்கிறார் மாமா.

நெக்ரோசிஸ் பாதிப்பு காரணமாக அகமதாபாதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவரையும் மகனையும் சந்திக்க சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து, காந்தி எழுதிய சில புத்தகங்களையும், நைஜீரியாவுக்குக் கையோடு கொண்டுசெல்கிறார். “ ‘கண்ணுக்குக் கண் என்றால், இந்த உலகமே குருடாகி விடும்’ என்பது போன்ற காந்தியின் வார்த்தைகளை அவர்களுக்கு வாசித்துக் காட்டப்போகிறேன்” என்கிறார் மாமா, நம்பிக்கையுடன். நம்பிக்கை பலிக்கட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in