Last Updated : 24 Jun, 2019 09:05 AM

 

Published : 24 Jun 2019 09:05 AM
Last Updated : 24 Jun 2019 09:05 AM

இப்போது வந்துவிடாதீர்கள் விருந்தாளிகளே என்று சொல்ல எப்போது கற்றோம்?

அப்போதெல்லாம் மழைக்காக ஐயனார் கோயில் குதிரைக் காலில் சீட்டு எழுதிக் கட்டுவார்கள். வெளிர் மேகத்தையும் கருமேகமாகக் குளிர்வித்து மழையைப் பிழியவல்ல நம் தலைமுறைக்கும், ஐயனாருக்கு விண்ணப்பித்த தலைமுறைக்கும் ஒரு வேறுபாடு. பூமியின் இருப்பான நீரை நுகர்ந்து தீர்த்துவிடும் தலைமுறை நாம். அவர்களோ நல்ல நிர்வாகிகளைப் போல் இருப்பைத் தொடாமல் அவ்வப்போது வரும் வரவை மட்டும் செலவழித்து அதிலும் மிச்சம் கண்டவர்கள். ஆழ்துளைக் கிணறுகள், பூமியின் இருப்பான நீரை நுகர்ந்து தீர்க்க நமக்கு வாய்த்த சாதனம். விவசாயத்துக்கானாலும், குடிநீருக்கென்றாலும் இன்று நாம் பயன்படுத்தும் நீர் பூமியின் நீண்ட கால இருப்புச் செலவு. குளிக்கும்போது, துணி துவைக்கும்போது, கையலம்பும்போது, தாகத்தைத் தணித்துக்கொள்ளும்போதுகூட பூமி என்ற இந்தக் கோளின் பழங்கால இருப்பிலிருந்தே நீரைச் செலவுசெய்கிறோம்!

சிறிய கிராமமே என்றாலும் காவிரிக்கரை ஊர்களில் ஏழெட்டுக் குளங்களும் குட்டைகளும் இருந்தன. நீராதாரத்தோடு சேர்ந்தே உருவானவை இந்தக் கிராமங்கள். இன்றைய நகர விரிவாக்கம் - பெருநகர வளர்ச்சியானது கிராமங்களைப் போல் அதற்கான நீராதாரத்தோடு உருவாவது அல்ல. திருவாரூரில் நானூறு ஏக்கர் பரப்பில் பெருந்திட்ட வளாகம் ஒன்று. ஆழ்துளைக் கிணறோ, வெளியிலிருந்து குழாய் வழியாக வரும் தண்ணீரோதான் அதற்கு நீராதாரம். புது நகர்கள் உருவாகும்போது அங்கே விளையாட்டு மைதானம், பூங்கா, பொதுவெளிகள் வேண்டும் என்று கேட்கிறோம். நீராதாரங்களான குளங்களை ஏன் அங்கே வற்புறுத்துவதில்லை?

ஏரி இடம்பெயருமா?

எங்கிருந்தாவது நமக்கு நீர் வழங்கப்படுவதற்கு பழகிவிட்டோம். இருக்கும் இடத்திலேயே நீராதாரத்தை உருவாக்கிக்கொள்ளும் அன்றைய சிந்தனை இப்போது கைவருவதில்லை. பெர்னம் காடு இடம்பெயர்ந்து வரும் என்று ஷேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்தில் படிக்கும் போது, ‘என்ன விசித்திரம் இது!’ என்று நினைத்தோம். இன்று ஏரிகளும் அணைகளும் குழாய்வழியே இடம்பெயர்வது விசித்திரமாகத் தெரிவதில்லை.

அடிப்படைத் தேவையான நீருக்கு ஆதாரமில்லாமல் ஒரு ஊர் உருவாவதைச் சாத்தியமாக்குவது மைய நீர் விநியோகத் திட்டங்கள். மேல்நிலை நீர்த்தொட்டி, ஆழ்துளைக் கிணறு என்று ஒரு மையத்திலிருந்து நீர் விநியோகமாவது மக்களுக்கு வசதிதானே என்று நினைக்கக் கூடாது. அந்தப் புள்ளியில்தான் இன்னொருவர் உங்கள் மீது அதிகாரம் வரித்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது. காலிக் குடங்களோடு நீருக்குப் போராடும் மக்கள் விநியோகத் திட்டங்களின் சிந்தனை மூலத்தோடு போராடுகிறார்கள்; அரசாங்கத்தோடு அல்ல!

சமுதாய அக்கறை

ஊரில் தலையாரிக் குளம் என்று ஒன்று இருக்கும். அதன் மீன் குத்தகை வருமானம், தலையாரிக் காவல் பணிக்காகக் கிராமம் அவருக்குத் தரும் ஊதியத்தின் பகுதி. இன்னொரு ஊரில் நாகசுரக் கலைஞருக்குக் கோயில் ஊதியத்தோடு அதன் குளம் ஒன்றின் மீன் குத்தகை வருமானமும் சேர்த்தி. கோயில் பூசாரிக்குக் கோயில் குளத்து மீன்களில் பங்கு உண்டு. மீன் குத்தகையைப் பாசிக் குத்தகை என்போம். ஊர்க் குளத்தின் பாசிக் குத்தகை வருமானத்தில் அந்த ஊர் கோயில் திருவிழா நடக்கும். பெருமாள் கோயில், சிவன் கோயில், பிடாரி கோயில், காளியம்மன் கோயில் குளங்களில் அந்த ஊர் மக்களுக்கு அக்கறை வருவதற்கான சமுதாய ஏற்பாடு இது.

வீட்டுக்கு வீடு கேணி, வீட்டு முற்றத்திலும் ஒரு கேணி, தெரு முனையில் கேணி, ஊரின் பொதுக் கேணி என்று கோடையிலும் வற்றாத கேணிகள் ஊர் முழுக்க இருந்தன. ஆயிரக்கணக்கான லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தொட்டிகள் வந்ததும் எல்லா கேணிகளும் வற்றி, புழக்கம் ஒழிந்தன. கெடுத்தவரின் வருத்தமோ, கெட்டவரின் துயரமோ தொனிக்காத மூன்றாமவரின் ஆய்வு மொழியில், ‘நீர்மட்டம் கீழிறங்கியது’ என்று பேசத் தொடங்கினோம். முன்பிருந்த நீராதாரங்களை விநியோகத் திட்டங்கள் ஒருங்கிணைத்துக்கொள்வதில்லை. ஒருபக்கம், ஊர்க் குளங்களுக்கு வரத்து வழி அடைபட்டுத் தூர்ந்துகொண்டிருக்கும்; மறுபக்கம், நாம் குளிப்பதற்குக் குழாய் வழியாகத் தண்ணீர் விநியோகமாகும். உள்ளூர் நீராதாரங்களைக் கழித்து ஒதுக்கிவிட்டு, தன்னைத்தானே நிரந்தரமாக்கிக்கொண்டன நீர் விநியோகத் திட்டங்கள்.

நீர்ச் சிக்கனம், மழை நீர் அறுவடையை இன்று தீர்வுகளாக வற்புறுத்துகிறோம். பெய்யும் மழையெல்லாம் நிலத்துக்குள்தான் இறங்குகிறது. அதை நிலத்துக்குள் செலுத்துவதற்குத் தனியான ஏற்பாடு எதற்கு? வர வேண்டிய வயலுக்கு நீர் வராமல் வாய்க்கால் தூர்ந்துவிட்டால் எங்கிருந்து வரும் நீரை நாம் சிக்கனம் செய்வது? மற்ற இடங்களில் பெய்யும் மழையும் குளத்துக்கு வந்துசேர்ந்தால் அதுதான் மழைநீர் அறுவடை. அப்படி வருவதற்கான வழியே அற்றுவிட்டால், குளத்தின் பரப்பு மேல் பெய்யும் மழை மட்டும் நீர் அறுவடையாகுமா?

நிலத்தில் இறங்கும் மழை நீர் தங்குவது மணல் படிவத்தில். மணலே கொள்ளைபோன பிறகு நிலத்தடி நீரை எப்படிச் செறிவூட்டுவது? குளத்து நிறை மீன்களும் தாமரையும் சுத்தம் செய்யச் செய்ய... அன்று ஊரே அதில் அன்றாடம் குளித்தால் அது இன்று நாம் கண்டுபிடித்த மறுசுழற்சி முறைதானே!

வறட்சியில் உதவும் நீராதாரங்கள்

“ஊருணியில் தேங்கிய மழை, தேவை போக மிச்சமானால் அடுத்த ஆண்டு குடிநீருக்கும் அதைக் காவல் போட்டுப் பாதுகாத்துக்கொள்வோம்” என்றார் நாகலாபுரத்து நண்பர் ஒருவர். “தண்ணீர் தீர்ந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டதற்கு, “ஊருணிக்குள்ளேயே ஊற்று தோண்டிக்கொள்ளலாம்” என்றார். “ஊற்று வட்டாவும் குடமுமாகச் சென்றால் தண்ணீர்ப் பஞ்சம் தீர்ந்துவிடுமா?” என்று நீங்கள் கேட்கலாம். தங்களிடமே இருக்கும் நீர் ஆதாரம் வறட்சி வந்தாலும் உதவும் வகையில் பராமரித்துக்கொண்டார்கள் நாகலாபுரத்து மக்கள் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

1960-களில் குழாய் வழியாகத் தண்ணீர் வரத் தொடங்கிய பிறகு எல்லோருக்கும் “அப்பாடா!” என்றிருந்தது. ஆனால், “இப்போது வந்துவிடாதீர்கள். இங்கே தண்ணீர் இல்லை” என்று வெளியூர் விருந்தாளிகளை எச்சரிக்கும் நிலைக்கு எவ்வளவு விரைவாக நம்மைக் கொண்டுவந்து அது சேர்த்துவிட்டது?

- தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரி வெறும் நீரல்ல’ நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x