Published : 10 Jun 2019 10:19 AM
Last Updated : 10 Jun 2019 10:19 AM

குளங்கள்தான் நீர் சேமிப்பின் உயிர்நாடி!

தண்ணீரைச் சேமிப்பது தொடர்பாக நாம் பேசத் தொடங்கியதும் நமது விவாதங்களில் பெரும்பாலும் அணைகள் வந்து முன்னால் நிற்கின்றன. ஆனால், பல நூற்றாண்டுகளாக நமது வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து, இன்று அழிந்துவரும் குளங்கள், ஏரிகளின் நீர்க் கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? தமிழகம் மொத்தமாகத் தன்வசம் வைத்துள்ள 41,127 குளங்களின் நீர்க் கொள்ளளவு 347 டிஎம்சி - இது தமிழகத்திலுள்ள அனைத்து அணைகளின் மொத்த நீர்க் கொள்ளளவைக் காட்டிலும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய நீராதாரங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் சுருங்கிவரும் சூழலில், தமிழகத்தின் முக்கியமான நீர் ஆதாரங்களான குளங்களையும் ஏரிகளையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது.

குளங்களின் மகத்துவம்

குளங்கள் சிறிய நீர் நிலைகளாக இருந்தாலும் தமிழகம் முழுக்கப் பரவிக்கிடப்பதால், வீட்டுத் தேவை, கால்நடை வளர்ப்பு, குடிநீர், விவசாயம் எனப் பன்முகப் பயன்பாட்டுக்கு வழிவகுக்கிறது. குளங்கள் பெரும்பாலும் சிறிய அளவில் இருப்பதால் அதை நிர்வகிப்பது சுலபம். கால்வாய்ப் பாசனத்தோடு ஒப்பிடும்போது குளங்களைப் பராமரிப்பதற்கான செலவும் மிகவும் குறைவு.

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறு, குறு விவசாயிகளுக்கெல்லாம் குளங்கள்தான் முக்கியமான நீர்ப்பாசனமாகப் பயன்பட்டுவந்திருக்கின்றன.

மழைப்பொழிவின்போது குளங்கள் நீரைச் சேமிப்பதால் அது நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க உதவுகிறது. குளங்கள் ஒவ்வொரு ஊரிலும் அமைந்துள்ளதால் குடிநீருக்காகப் பெண்கள் வெகுதூரம் நடந்து நீர் எடுத்துவரும் அவலமும் இருக்காது.

இப்படிப் பல்வேறு பயன்பாடுகளோடு நம் வாழ்க்கையில் ஒன்றரக் கலந்திருந்த குளங்களின் அழிவுக்குக் குறைவான மழைப்பொழிவுதான் காரணம் என்பவர்கள் உண்டு. உண்மை அதுவல்ல. நீர்வரத்துப் பகுதிகளையும் மழை நீரைக் குளத்துக்குக் கொண்டுசெல்லும் வாய்க்கால்களையும் ஆக்கிரமிப்பு செய்வதும், போதுமான நிதி ஒதுக்கிக் குளங்களைத் தொடர் பராமரிப்பு செய்யாததும்தான் குளங்களின் அழிவுக்குப் பிரதானக் காரணங்கள்.

நகர்மயமாதலின் பொருட்டும் குளங்களும் ஏரிகளும் கட்டிடங்களுக்குள் புதைந்துவிட்டன. பல பகுதிகளில் சாக்கடை நீரைச் சுமக்கும் ஓடையாகக் குளங்கள் மாற்றப்பட்டுவிட்டன.

தற்போதைய நிலைமை

மத்திய அரசின் நீர்வளத்துக்கான நிலைக் குழுவால் 2012-13-ல் வெளியிடப்பட்டுள்ள 16-வது அறிக்கையில், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளால் குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. புது டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பானது, டெல்லியில் மொத்தமாக உள்ள 1,012 நீர்நிலைகளில் 168 நீர்நிலைகள் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. விளைவாக, குளங்களின் நீர்க் கொள்ளளவும் பாசனப் பரப்பளவும் வெகுவாகக் குறைந்துவிட்டன.

இந்தியாவில் குளங்கள் மூலமாக 1960-61-ல் நீர்ப்பாசனம் பெற்ற மொத்தப் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? 46.30 லட்சம் ஹெக்டேர்கள்! ஆனால், இது 2016-17-ல் மூன்றில் ஒரு பங்காக - 17.23 லட்சம் ஹெக்டேர்களாக - குறைந்துவிட்டது. இதே காலகட்டத்தில், தமிழகத்தின் குளத்துநீர்ப் பாசனப் பரப்பளவு 9.36 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.02 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துவிட்டது. அதாவது, தமிழகத்தின் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் குளத்தின் பங்களிப்பு 38%-லிருந்து 12.66% ஆகக் குறைந்துவிட்டது.

குறு நீர்நிலைகளைப் பராமரித்து மழை நீரைத் தேக்காத காரணத்தால், விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாகச் சுரண்டிக்கொண்டிருக்கின்றோம். இந்தியாவின் நிலத்தடி நீர் மட்டம் படு பாதாளத்துக்குச் சென்று பிரச்சினை மேலும் மோசமாகியிருக்கிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் நிலத்தடி நீர் வாரியம் 2017-ல் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் சொல்கின்றன, தமிழகத்தில் மொத்தமாக உள்ள 1,139 வருவாய் வட்டங்களில் 710 வட்டங்களின் நிலத்தடி நீர் இனி பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவை என்று.

வளர்ச்சிக்கான வழிமுறைகள்

மீண்டும் குளங்களைப் புதுப்பிப்பது தொடர்பாகத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு மழைத் துளியும் குளத்துக்குச் சென்றடையும் நடவடிக்கைகளை அதிவேகத்தில் செயல்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளம், ஏரிகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது. ‘தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம் 2000’ கூறியுள்ளதுபோல், அனைத்துக் குளங்களையும் மேலாண்மை செய்யும் அதிகாரத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘குடிமராமத்து’ திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு சில கார்ப்பரேட் நிறுவனங்கள், சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலமாக நீரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இதற்கு உகந்த சூழ்நிலையை அரசு உருவாக்கித்தர வேண்டும்.

இந்தியாவில் தனிநபருக்குக் கிடைக்கக்கூடிய நீரின் சராசரி அளவு 1,544 கன மீட்டர். தமிழகத்தில் இது வெறும் 750 கன மீட்டர்தான். வேகமாக மாறிவரும் பருவநிலை மாற்றங்களால், மழைப் பொழிவும் எதிர்காலத்தில் குறையக்கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு துளி நீரையும் சேகரிக்க, தகுந்த நடவடிக்கைகளை எடுக்காவிடில், எதிர்வரும் காலங்களில் மிகப் பெரும் நீர்ப் பஞ்சத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மக்களுக்கு நீர்ப் பாதுகாப்பு கொடுக்க முடியாமல்போனால், அது சமூக அமைப்பையே உருக்குலைத்துவிடும். மிக எளிமையாகவும், குறைந்த செலவிலும் சாத்தியப்படுத்தக்கூடிய குளங்களைச் சீரமைக்கும் பணியை அரசு துரிதப்படுத்த வேண்டும்; எல்லா தரப்பும் அதற்குப் பங்களிக்க வேண்டும்!

- அ.நாராயணமூர்த்தி, முன்னாள் உறுப்பினா், விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம், இந்திய அரசு, புதுடெல்லி.

தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x