Last Updated : 14 Jun, 2019 08:38 AM

Published : 14 Jun 2019 08:38 AM
Last Updated : 14 Jun 2019 08:38 AM

வந்தேறிகளுக்கு வாழ்வுரிமை இல்லையா?

சென்னை மயிலாப்பூரின் முக்கியமான வீதியொன்றில் குடியிருக்கும் நண்பரொருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அது ஒரு பெரிய பங்களா. ஆனால், வீட்டின் பின்புறம் புதர் மண்டி இருந்தது. “ஏன் அப்பகுதி இப்படி இருக்கிறதே என்று கேட்டபோது, அது அக்காலத்தில் உலர் கழிப்பிடத்தைச் சுத்தம் செய்ய வருபவர்களுக்கே என்றிருந்த சந்து” என்று நண்பர் சொன்னார்.  இதைத்தான் அக்காலத்தில் ‘பீ சந்து’ என்று சொல்வார்கள். எனது நினைவலைகள் சற்று பின்னோக்கிச் சென்றன.

தமிழகமெங்கும் உலர் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வருபவர்களெல்லாம் தெலுங்கில் பேசுவார்கள். இந்நாளில் அவர்களை ‘ஆதி ஆந்திரர்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சி செய்த சென்னை மாகாணத்தில் நகராட்சிகளில் நகரச் சுத்தி தொழிலாளர்களை ஆரம்பத்தில் திரட்டி சங்கம் அமைத்தது கம்யூனிஸ்ட் கட்சி. அவர்களிடையே பேசுவதற்காக கம்யூனிஸ்ட் செயல்வீரர்கள் தெலுங்கு கற்றுக்கொண்டனர்.  ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!’ என்று தொழிலாளர்கள் குரலெழுப்பும்போது தொழிலாளி வர்க்கத்தை தேசம், எல்லை, மொழி என்று பிரிப்பதில்லை. அகில இந்திய மாநாடுகளில் அனைத்து மொழிகளிலும்தான் கோஷம் எழுப்புவார்கள்.

சமீபத்தில் ஒரு சர்ச்சை. அதிக எண்ணிக்கையில் வட மாநிலத் தொழிலாளர் உள்ள தொழிற்சாலையில் செயல்படும் சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் தனது சகாக்களிடம் இந்தி கற்றுக்கொண்டு அத்தொழிலாளர்களிடம் நேசக்கரம் நீட்டி சங்கத்திற்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபடுமாறு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்தச் சுற்றறிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் அவ்வளவு விமர்சனங்கள்! எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், கம்யூனிஸ்ட் கட்சி  தோழரே ஒருவர், ”நாம் ஏன் இந்தி கற்க வேண்டும்? மாறாக வட இந்தியத் தொழிலாளர்களுக்குத் தமிழ் கற்றுத்தர முயற்சிப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். தோழர்களுக்கும் வரவர சர்வதேசியம் மறந்துகொண்டிருக்கிறதோ என்று தோன்றியது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டியதில் ஈடுபட்ட 1,500 தொழிலாளர்களும் வட மாநிலங்களிலிருந்து வந்தவர்களே. அப்போது அந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு பாராட்டு நிகழ்ச்சியை அன்றைய முதல்வர் கருணாநிதி நடத்தியதும், தொழிலாளர்களுக்கு பிரியாணி விருந்து அளித்ததும், இந்தி ஆடல் பாடல் நிகழ்ச்சியோடு அந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் நினைவுக்குவருகிறது. மெட்ரோ ரயில் பணி தொடங்கி இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்துவரும் பெரும்பான்மைக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் வட மாநிலங்களிலிருந்து திரட்டிவரப்பட்டவர்களே. அரசு அறிக்கையின்படி 2016 கணக்கின்படி தமிழ்நாட்டில் 10.67 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருக்கின்றனர்; அவர்களில் 27% உற்பத்தித் தொழில்களிலும், 14% நூற்பாலைகளிலும், 11.41% கட்டிடத் தொழில்களிலும், ஏனையோர் மற்ற தொழில்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் வட மாநிலத் தொழிலாளர்களே.

இந்தத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள், சமூக உரிமைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி உரிமை இவற்றைப் பற்றியெல்லாம் யாரும் இன்று கவலைப்படுவதில்லை. அரசமைப்புச் சட்டத்தின்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிப்பதற்கும், தொழில் புரிவதற்கும் அடிப்படை உரிமை உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த உரிமைகளை அவர்களுக்கு அரசுகள் வழங்குகின்றனவா என்பதே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

சென்னை வேளச்சேரியில் நான்கு வட இந்தியத் தொழிலாளர்களை ‘வங்கிக் கொள்ளையர்’ என்று சொல்லி தமிழகக் காவல் துறையினர் என்கவுன்டர் செய்தபோது அச்செயலைப் பெரிய அளவில் தமிழக மக்கள் கண்டிக்கவில்லை. அதேபோல, ‘செம்மரக் கடத்தல்காரர்கள்’ என்று சொல்லி தமிழக சுமை தூக்கும் தொழிலாளர்களை ஆந்திரக் காவல் துறையினர் சுட்டுக் கொன்றபோது ஆந்திர மக்களும் அலட்டிக்கொள்ளவில்லை.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் என்று சொல்லும்போது அவர்கள் அந்நிய மாநிலங்களில் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள். தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசித்துவந்த தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்ட பிறகு அங்கு பல தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டுவருகின்றன. அதேபோலத்தான் தருமபுரி, ஆற்காடு ஒட்டியுள்ள கிராமங்களில் தெலுங்கு பள்ளிகள் மூடப்பட்டுவருகின்றன. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும் அங்கு வசிக்கும் சிறுபான்மையினரின் குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை படிப்படியாக குறைக்கப்பட்டுவருகிறது. இது ஒரு குறியீடுதான்.

ஆனால், காலனிய காலத்தில்கூட இப்படிப்பட்ட பிராந்திய பாசம் மிகையாக்கிப் பார்க்கப்படவில்லை என்பதை நாம் நினைவுகூர வேண்டும். நூறு வருடங்களுக்கு முன் பிஜி தீவில் கரும்புத் தோட்டத்தில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒப்பந்த அடிமைகளான இந்து ஸ்தீரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்காக விம்மி விம்மி அழுத பாரதியின் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. ‘‘பஞ்சை மகளிரெல்லாம் – துன்பப் / பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு / தஞ்சமு மில்லாதே – அவர் / சாகும் வழக்கத்தை யிந்தக் கணத்தினில் / மிஞ்ச விடலாமோ? – ஆ! /   வீர காளீ, சாமுண்டி காளீ!”

அன்றைக்கு ஒரு தொழிலாளியை இன்னலிலிருந்து மீட்க காளியிடம் இறைஞ்சுவதைத் தவிர பாரதிக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனால், சுதந்திர இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின்படி இங்குள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் முழுப் பாதுகாப்பும் இருக்கிறது.  அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த நிலம், வாழுமிடம் இவற்றின் அடிப்படையில் எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று கூறுகிறது நம்முடைய அரசமைப்புச் சட்டம். மேலும், மாநிலங்கள் தாண்டி இடம்பெயர்ந்து வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கும் 1961-ல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது.  (பிரிவு 16(2)) . சட்டம் எப்போதுமே தொழிலாளர்கள் பக்கமே இருக்கிறது.

1959-ல் கொண்டுவரப்பட்ட வேலை வாய்ப்பகங்கள் சட்டத்தின்படி கடைநிலை ஊழியர்களை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பகங்களின் பட்டியலின்படி எடுத்துக்கொள்ளலாம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் காப்பீட்டுக் கழகம் பற்றிய வழக்கொன்றில் ரத்துசெய்தது (1979). உத்தர பிரதேச மாநிலத்தில் வட்டாரவாரியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது. தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டரீதியாக நியமிக்கப்பட்டதை ரத்துசெய்த சென்னை உயர் நீதிமன்றம், தனது தீர்ப்பில் “காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை ஒரு இந்தியாவாக இருக்கும்போது கிருஷ்ணகிரியிலிருந்து கன்னியாகுமரி வரை வட்டாரரீதியான நியமனங்களை அனுமதிக்க முடியாது” என்று கூறியது.

தமிழ்நாட்டிலுள்ள வேலை வாய்ப்புகளை வெளியாட்கள் வந்து பறித்துவிடுகிறார்கள் என்ற குரல் மேலோங்கிவருகிறது. ஆனால், இத்தகைய கோஷங்கள் கைப்பிடி இல்லாத கத்திபோலத்தான். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழகத் தொழிலாளர்களும் பல வேலைகளில் இருக்கிறார்கள். 1970களில் மும்பையில் சிவசேனை தலைமையில் தமிழகத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டபோது தமிழர்களை  ‘வந்தேறிகள்’ என்று சொல்லிதான் தாக்கினார்கள். இன்றைக்கு அதே கோஷத்தைத் தமிழர்கள் முன்னெடுப்பதால் அதன் அர்த்தம் வேறாகிவிடாது. தொழிலாளர்களுக்குச் சட்டம் கொடுக்கும் பாதுகாப்பு அவர்களுக்குப் பணியிடங்களில் உறுதிபடுத்தப்படுவதைப் பற்றித்தான் தொழிற்சங்கங்கள் கவலைப்பட வேண்டுமே தவிர, இடம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களை விரட்டுவது எப்படி என்றோ (அ) அவர்களுக்கு நம் மொழியைப் பயிற்றுவிப்பதன் அவசியத்தைப் போதிப்பதோ அவர்களுடைய வேலை அல்ல.

வீதியில் அன்றைக்கு ஒலித்த சர்வதேசிய முழுக்கம் ஒன்று நினைவுக்குவருகிறது: ”பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்!/ பாரில் கடையரே எழுங்கள் வீறுகொண்டு தோழர்காள்! / பற்று கொண்ட மனித சாதி யாவும் ஒன்றதாகுமே, / மடிமிசைப் பிரித்த தேச பாசையும் ஓர் ஐக்கியமே!”

-கே.சந்துரு, மேனாள் நீதிபதி,

சென்னை உயர் நீதிமன்றம்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x