Published : 02 Mar 2018 09:38 AM
Last Updated : 02 Mar 2018 09:38 AM

வங்கி மோசடிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

பொ

துத் துறை வங்கிகளின் நிதி மோசடிகளும் தொழிலதிபர்கள் உருவாக்கிய நஷ்டக் கணக்குகளும் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன. பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி, ரூ. 11,000 கோடி, ரூ. 4,000 கோடி என வரிசையாக நஷ்டத்தை உருவாக்கியதில், சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் மட்டும்தான் பொறுப்பாளிகளா என்றும் கேள்வி எழுகிறது. சொந்த ஆதாயங்களுக்காக, கோடிக்கணக்கான மக்களின் சேமிப்பு கொள்ளையடிக்கப்படுவதற்கு உடந்தையாக இருப்பவர்கள் பற்றிப் பெரிதாகப் பேசப்படுவதில்லை என்பதுதான் விநோதம்.

நமது வங்கிகளில் விஜய் மல்லையா உருவாக்கிய ரூ.9,000 கோடி நஷ்டம் ஒரு நாளில் நிகழ்ந்ததல்ல, அதற்குப் பின்னணியில் சம்பந்தப்பட்ட பல வங்கிகளின் உயரதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர். ஆனால், அவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியாது. சில அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்த நடவடிக்கைகள் குறித்தும் வங்கிகள் முழுமையாக விளக்கவில்லை. நீரவ் மோடி விஷயத்தைப் பொறுத்தவரை அவருக்கு உடந்தையாக இருந்ததாக வங்கி அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது சற்றே ஆறுதல். ஆனால், அது மட்டும் போதுமா?

இதுபோன்ற மோசடிகளில் தணிக்கையாளர்களின் பங்கும் முக்கியமானது. நிறுவனப் பதிவாளரிடத்தில் பதிவுசெய்யப்படும் அனைத்து நிறுவனங்களுமே ஒவ்வொரு ஆண்டும் நிறுவனப் பதிவாளரிடத்தில் தங்களது வரவு செலவு அறிக்கையை அளிக்க வேண்டும். இதுவே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் எனில், பங்குச் சந்தைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதாவது காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு அடிப்படையில் நிறுவனத்தின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை அளிக்க வேண்டும் என்பது விதி. ஆகவே, ஒரு நிறுவனத்தின் நிதி நிர்வாகம் என்பது நிறுவன அதிகாரிகளோடு மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. நிறுவனக் கணக்காளர்களையும் தாண்டி உள் தணிக்கையாளர்கள், வெளித் தணிக்கையாளர்கள் இந்தக் கணக்கு வழக்குகளை ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும் என்பது கட்டுப்பாட்டு அமைப்புகள் வரையறுத்துள்ள விதி. இந்த மோசடி நிறுவனங்களின் வரவு செலவு அறிக்கைக்குச் சான்றளித்த தணிக்கையாளர்களின் பங்கு எத்தகையது என்பதை இது உணர்த்தும்.

நிறுவனங்கள் அளிக்கும் விவரங்கள் அடிப்படையில்தான் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படுகிறது என்று தணிக்கை நிறுவனங்கள் சொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் தணிக்கையின் முக்கியப் பணியே வரவு செலவு மூலங்களை ஆராய்வதுதான். அப்படியெனில் ‘கிங்ஃபிஷர்’ நிறுவனத்துக்கும், நீரவ் மோடி, கோத்தாரி, சிம்பாலி ஆலை நிறுவன மோசடிகளுக்குப் பின்னால் தணிக்கை அறிக்கை தயாரித்த நிறுவனங்களும் இருப்பது உறுதியாகிறது. ஆக, இந்தத் தணிக்கை நிறுவனங்கள் தணிக்கைப் பணிகளை மேற்கொள்ளும் வேறு வேறு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையைச் சந்தேகிக்காமல் இருக்க முடியாது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் நாட்டை உலுக்கிய சத்யம் கணினி நிறுவன மோசடி நினைவிருக்கும். அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்குகளில் கிட்டத்தட்ட ரூ.8,000 கோடி அளவுக்கு மோசடி செய்தது 2009-ல் கண்டுபிடிக்கப்பட்டது. நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர வேண்டும் என்பதற்காக அதன் சொத்து மதிப்பை உயர்த்திக்காட்டியதுதான் ராமலிங்க ராஜு செய்த மோசடி. “இல்லாத லாபத்தை மிகைப்படுத்திக் காட்டினோம். பல ஆண்டுகளாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம்” என்று ஒப்புக்கொண்டார் ராமலிங்க ராஜு.

இந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை 2000-லிருந்து 2008 வரை தணிக்கை செய்துவந்தது லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ‘பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்’ (பி.டபிள்யூ.சி.) நிறுவனம். சத்யம் நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்ததாக அந்நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்திய நிறுவனங்களுக்குத் தணிக்கை செய்ய அந்நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது செபி. இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்த பிறகுதான், ஏற்கெனவே பல இந்திய நிறுவனங்களின் தணிக்கையில் பி.டபிள்யூ.சி. நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்துப் பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா.

உண்மையில், நிதி மோசடி செய்யும் நிறுவனங்களின் ஒவ்வொரு ஆண்டு தணிக்கை அறிக்கையிலும், அந்நிறுவனங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் மறைக்கப்படுகின்றன. எல்லாம் சரியாக நடக்கிறது என்றால், வங்கிகளில் வாங்கிய கடனை வெளிநாடுகளில் பதுக்க முடிவுசெய்கிறபோதும், வேறு கணக்குகளுக்குத் திருப்புகிறபோதும் அது தணிக்கையின் கண்களில் இருந்து தப்ப முடியாது. உண்மையை மறைப்பது மட்டுமல்ல, தெரிந்த உண்மையைச் சொல்லத் தவறுவதும் குற்றம்தானே!

- நீரை மகேந்திரன், தொடர்புக்கு:

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x