

கல்கியின் பலம் எழுத்தில் மட்டுமல்ல, அவரது சமூகச் செயல்பாடுகளிலும் இருக்கிறது.
விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்புமான காலத்திலும், தமிழகத்தின் அரசியலில் சமூக கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்யும் எவருக்கும் கல்கியின் எழுத்துகள் ஒரு மாபெரும் புதையல். ‘பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியதால் மூன்று தலைமுறை கடந்தும் வாசிக்கப்படுபவர் அவர். ஆனால், இந்த ஒரு காரணத்துக்காக மட்டும் கல்கி அறியப்படுவாரேயானால், அது அவரது ஆளுமைக்குச் சிறப்பாகாது. முன்னோடிப் பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடலாசிரியர், தேச விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குபெற்ற அனுபவம் கொண்டவர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர் கல்கி.
சம கால ஆளுமைகளை அவர் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளராகப் பிரபலமாவதற்கு முன்பு ஒரு வாசக சாலையில் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார் கல்கி. அப்போது அங்கே வந்த வ.ரா. அவருக்கே உரிய குணாதிசயத்துடன் படபடவென்று பேசியதை நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார் கல்கி.
“அவர் கூறியதையெல்லாம் மேலே நான் எழுத்துக்கு எழுத்து சரியாக எழுதியிருப்பதாகச் சொல்லவில்லை. முப்பது வருஷத்துக்கு முந்தைய கதை. பேச்சின் தோரணை மட்டும் உண்மை. வார்த்தைகளில் சில வ.ராவின் வார்த்தைகளாக இருக்கலாம். சில என்னுடைய வார்த்தைகளாகவும் இருக்கலாம்” என்று நேர்மையுடன் பதிவுசெய்திருக்கிறார். வாசித்தவர்களுக்கு வ.ராவைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது கல்கியின் எழுத்து!
சென்னை தொழிலாளர் சங்கத்தை அமைத்து, தொழி லாளர்களை ஒருங்கிணைத்தவர் திரு.வி.க. அவரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் கல்கி.
“நவசக்தியில் நான் தொண்டாற்றிய காலத்தில் திரு.வி.க-வுடன் தொழிலாளர் கூட்டங்களுக்குப் போயிருக் கிறேன். தொழிலாளர் கூட்டம்தானே என்பதற்காக
திரு.வி.க. தமது பிரசங்கத்தின் நடையை மாற்றிக்கொள்ள மாட்டார். வழக்கம் போலவேதான் சொற்பொழிவாற்றுவார். அவர் கூறுவதெல்லாம் தொழிலாளர் சகோதரர்களுக்கு விளங்குமா என்று எனக்குச் சில சமயம் சந்தேகம் உண்டாகும். ஆனால், அவர்களுடைய முகங்கள் மட்டும் மலர்ந்துதான் இருக்கும். திரு.வி.க. கடல் மடை திறந்ததுபோல் பொழிந்த அரிய கருத்துகளை அவர் கள் உணர்ந்தார்களோ இல்லையோ, ‘இதோ நமது அருமைத் தோழர் ஒருவர் பேசுகிறார்’ என்பதை மட்டும் அவர்கள் பரிபூரணமாக உணர்ந்திருந்தார்கள்.”
பாராட்டும் விமர்சனமும்
அக்காலத்தில் இசைக் கலைஞர்களும் திரைப்படக் கலைஞர்களும் கல்கியின் பாராட்டைத் தங்களுக்குக் கிடைத்த மாபெரும் விருதாகவே கருதினர். நல்ல அம்சங்களைப் பாராட்டிவிட்டுக் குறைகளை நகைச்சுவை தொனியில் குறிப்பிடுவதில் வல்லவர் கல்கி.
அண்ணாதுரையின் ‘ஓரிரவு’ நாடகத்தைப் புகழ்ந்து எழுதிய கல்கி, ‘கதாநாயகியாக நடித்தவர் ஆணா, பெண்ணா என்பதைக் கடைசி வரையில் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. யாராயிருந்தாலும் திருடன் வந்த கட்டத்தில் அவருடைய நடிப்பு பலே! பேஷ்!’ என்று எழுதியிருந்தார்.
பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார் கல்கி. வடநாட்டில் காங்கிரஸ் மாநாடுகளில் பெண்கள் இயல்பாகக் கலந்துகொண்டு புழங்குவதைக் குறிப்பிட்டு, ‘தமிழ்நாட்டில் பெண்களைப் பொது இடத்தில் உற்றுநோக்கும் தவறான பழக்கம் ஆண்களுக்கு இருக்கிறது. அதனால், பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதில் தயக்கம் காட்டுகிறார்கள்’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் கல்கி.
பெண்கள் மீதான அக்கறை
ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த கதாகாலட்சேபத் துறையில் பெண்ணாகிய ஸ்ரீமதி சரஸ்வதிபாய் முத்திரை பதித்தார். அவரைப் பற்றி ஏராளமான தகவல்களுடன் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் கல்கி.
அக்காலத்தில் கன்னையாவின் நாடகக் கம்பெனி மிகவும் பிரபலமாக இருந்தது. காட்சிகளைத் தத்ரூபமாகக் காட்டுவதிலும், வேஷப் பொருத்தங்களிலும் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார் கன்னையா. அவர் ஒரு சமயம் தன் கம்பெனி நடிகர்களிடம், “அரங்க மேடையில் நாம் ராம லட்சுமணர்களைக் காட்டுவதென்றால், அதற்கு எவ்வளவோ பிரயத்தனம் செய்து தகுந்தவர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்குப் பயிற்சி தந்து, பிறகு கொண்டுவந்து மேடையில் நிறுத்துகிறோம். ஆனால், மதி சரஸ்வதிபாய் அம்மாள் காலட்சேபம் செய்யும்போது, கையை ஒரு பக்கம் காட்டி, ‘அதோ ராம லட்சுமணர்கள் வந்துவிட்டார்கள்’என்று சொன்னால், உடனே ராம லட்சுமணர்கள் நம் கண் முன்னால் நிற்கிறார்கள்’’ என்றாராம்.
இதனை நினைவுகூரும் கல்கி, மதி சரஸ்வதி பாயின் வெற்றி அவ்வளவு சுலபமானதாக இருக்க வில்லை என்கிறார். பெண்ணாய்ப் பிறந்த ஒருத்தி புருஷர்கள் அடங்கிய சபையில் எழுந்து நின்று பேசுகிறதாவது, பாடுவதாவது, என்றெல்லாம் எதிர்ப்புக் கிளம்பியதாம். அதனைப் பொருட்படுத்தாமல் சாதித்துக்காட்டிய சரஸ்வதிபாயைப் பாராட்டி எழுதிய கல்கி, அவரது வெற்றி எப்படிச் சாத்தியமாயிற்று என்பதையும் விவரித்திருக்கிறார். ‘சமூகத் துறையில் அர்த்தமற்ற சம்பிரதாயங்களையும் மூடத்தனமான கட்டுப் பாடுகளையும் உடைத்தெறிந்துவிட்டு, முன்னேற்றப் பாதையில் வழிகாட்டுகிறவர்களையும் வீராங்கனைகள் என்று கூறலாமல்லவா? அந்த வகையில் நம் காலத்தில் தென்னாட்டில் பிறந்த வீராங்கனைகளில் மதி சரஸ்வதிபாய் தலைசிறந்து விளங்குகிறார்’ என்று கொண்டாடியிருக்கிறார் கல்கி.
‘கடிதமும் கண்ணீரும்’, ‘காந்திமதியின் கணவன்’, ‘கேதாரியின் தாயார்’ போன்ற அவரது சிறுகதைகள் பெண்களின் உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலித்தவை.
மாற்றுக் கருத்துகளுக்கு மரியாதை
என்.எஸ்.கிருஷ்ணனின் ‘நல்லதம்பி’, அண்ணாவின் ‘வேலைக்காரி’ போன்ற படங்கள் வெளிவந்தபோது, அவை நாத்திகவாதத்தைப் பிரச்சாரம் செய்வதாகச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இத்தகைய படங்களைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
மேற்கூறிய படங்களுக்கு விமர்சனம் எழுதிய கல்கி, படத்தில் வெளிப்படும் சீர்திருத்த கருத்துகளுக்காகவும், தொழில்நுட்பங்களுக்காகவும் படங்களை வெகுவாகப் பாராட்டி எழுதினார். இவற்றைத் தடைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் வலியுறுத்தினார். கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை உடையவரான கல்கியின் பார்வை பாரபட்சம் தவிர்த்த தராசுப் பார்வை!
கல்கியின் நாவலான ‘தியாகபூமி’ சினிமாவாகத் தயாரிக்கப்பட்டது. தன்னை நிராகரித்த கணவனுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாள் தியாகபூமி கதாநாயகி. விவா கரத்து கோரிய அவள், ‘வேண்டுமென்றால் கணவனுக்கு நான் ஜீவனாம்சம் தரவும் தயார்’ என்கிறாள். இத்தகைய மரபை மீறிய சிந்தனைகளுக்காகக் கடுமையாக விமர்சிக் கப்பட்டது அந்தத் திரைப்படம்.
காலப் பின்னணி
கல்கியை, அவரது எழுத்துகளை, அவர் வாழ்ந்த காலப் பின்னணியில் எண்ணிப் பார்க்க வேண்டும். தேச விடுதலை இயக்கத்தின் தாக்கம் குறையாத காலம் அது. ராஜாஜியின் சிந்தனையை ஒட்டிய கல்கியின் அரசியல் நிலைப்பாட்டுக்குக் கிடைத்த ஆமோதிப்பு அவரது முற்போக்குக் கருத்துகளுக்குக் கிடைக்கவில்லை.
தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்களின் மீதும் அன்பு பாராட்டினார் கல்கி என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. கல்கியின் தீவிர விமர்சகரான எழுத்தாளர் புதுமைப்பித்தன் அகாலமாய் மரணமடைந்தபோது, நிதி திரட்டி அவர் குடும்பத்தாருக்கு உதவியிருக்கிறார் கல்கி. திரு.வி.க-வைப் பற்றிக் குறிப்பிடும்போது கல்கி கூறுகிறார்: “அவருடைய குணாதிசயங்களுக்குள்ளே என் ஞாபகத்தில் மேலோங்கி நிற்பது ‘அவர் எவ்வளவு நல்லவர்’ என்பதேயாகும். இந்த உலகத்தில் ஒரு மனிதன் பெறக்கூடிய பேறு இதைக் காட்டிலும் வேறு என்ன இருக்கிறது?” திரு.வி.க-வைப் பற்றி கல்கி எழுதிய இந்த வாசகங்கள் அவருக்கும் பொருந்தக்கூடியவை.
கல்கியின் எழுத்துகளை வாசித்தவர்களில் பெரும் பாலானோர் தேசபக்தியையும் தெய்வ பக்தியையும் ஒருசேரப் பார்க்கப் பழகியிருந்தனர். இந்தியப் பாரம்பரிய சிந்தனையை அடியொற்றியிருந்தனர். அவர் களைச் சுயமரியாதை இயக்கம் சீண்டிப் பார்த்தது. இதனால் காயப்பட்ட அவர்கள், தாங்கள் ஏற்கெனவே நம்பியிருந்த அடையாளங்களை மேலும் வலிமையாகப் பற்றிக்கொள்ளும் நிலைமை இருந்தது.
இத்தகையோரை அடுத்த கட்ட நகர்வுக்குத் தயார் செய்யும் அரிய பணியைச் செய்திருக்கிறார் கல்கி. ‘விவாக விஷயம்’ போன்ற அவரது கட்டுரைகள் மிக முக்கியமானவை. முரண்பட்ட பாதைகளின் சந்திப்பில் நின்றுகொண்டு ஒருவிதச் சமன்பாட்டை இலக்காகக்கொண்டு இயங்கிய அவரது வரலாற்றுப் பங்களிப்பு குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
- கே. பாரதி, எழுத்தாளர்,
தொடர்புக்கு: bharathisakthi1460@yahoo.com