Published : 16 Mar 2018 09:55 am

Updated : 17 Mar 2018 11:05 am

 

Published : 16 Mar 2018 09:55 AM
Last Updated : 17 Mar 2018 11:05 AM

நூற்றாண்டு காணும் தாகூரின் தமிழகப் பயணம்

காகவி பாரதி இறப்பதற்குச் சில நாட்கள் முன் ‘ஸ்ரீரவீந்திர திக்விஜயம்’ என்னும் கட்டுரையைச் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் எழுதியிருந்தார். ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளுக்குச் சென்ற தாகூர் அங்கெல் லாம் பெற்ற பெருவரவேற்பைக் கொண்டாடி எழுதிய எழுத்தோவியம் அது. கண்காணா நாடுகளுக்கு விஜயம் செய்து வெற்றிக்கொடி நாட்டிய தாகூரின் பயணங்களைப் பற்றி எழுதிய பாரதி, தன் கண்காண நடந்த பயணத்தைப் பற்றி ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை.

அந்தப் பயணம், பாரதி கைதாகி விடுதலை பெற்ற பிறகு முதன்முறையாகச் சென்னை வந்து தங்கியிருந்த 1919 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த தாகூரின் தமிழகப் பயணமாகும். இது, பாரதியின் தாய்மண்ணில் அவன் அறிந்து நிகழ்ந்த ‘ரவீந்திர திக்விஜயம்’ ஆகும். இந்தப் பயணத்தைப் பற்றி ‘சுதேசமித்திரன்’ இதழில் தொடர்ச்சி யாகச் செய்திகள் வெளிவந்தன.

இலையுதிர் காலத்தின் பாடல்கள்

1919 பிப்ரவரியில் தமிழகம் வந்த தாகூர், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மதுரை, சென்னை முதலிய நகரங்களுக்குப் பயணம் செய்தார். ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய கூட்டங்களிலும், மாணவர்கள் கூடிய கூட்டங்களிலும் சொற்பொழிவாற்றினார். அவருடைய இந்தப் பயணங்களின் முக்கிய நோக்கம் ‘சாந்தி நிகேத’னுக்கு நிதி திரட்டுதல். அந்த நோக்கம் மிகச் சிறப்பாகவே நிறைவேறியது. ஒவ்வொரு நிகழ்ச்சியின் நிறைவிலும் தாகூருக்கு அவர் மகிழும்வண்ணம் பணப்பை கொடுக்கப்பட்டது.

திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரியின் ‘லாலி ஹாலில்’ பிப்ரவரி 10-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்கள், நகரவாசிகள் முன்னிலையில் ‘இந்திய வனங்கள் ஒரு படிப்பினை’ என்னும் பொருளில் உரையாற்றினார். பிப்ர வரி 13-ல் ‘லாலி ஹா’லில் மாணவர்கள் முன் இலையுதிர் கால வைபவத்தைப் பற்றியும், தேசியக் கல்வியைப் பற்றி யும் பேசினார். இலையுதிர்கால வைபவம் பற்றிப் பேசுகை யில் தான் எழுதிய நாடகத்தை, பாடல்களை அவர் வாசித்துக் காட்டினார். தாகூரோடு பயணம் செய்துவந்த சி.எஃப்.ஆண்ட்ரூஸ் ‘சாந்தி நிகேத’னைப் பற்றிய சொற்பொழிவுகளை திருச்சி, மதுரை முதலிய இடங்களில் ஆற்றினார்.

ஸ்ரீரங்கத்துக்கு வருகைதந்த தாகூர் அங்கு நடந்த தெப்ப உற்சவத்தைக் கண்டு மகிழ்ந்தார். கோயிலையும், வாணிவிலாச அச்சுக்கூடத்தையும் பார்வையிட்டார். ‘இந்திய வனங்கள் ஒரு படிப்பினை’ என்னும் பொருளில் அங்கே பேசினார். அவரின் வருகையை ஒட்டி ‘ஹிந்து மெஸேஜ்’ என்ற பத்திரிகை தாகூரின் படத்துடன் சிறப்பு வெளியீடு ஒன்றைப் பிரசுரம் செய்திருந்தது.

இடையில் பிப்ரவரி 12-ல் தஞ்சைக்கு வந்த தாகூர், ஆண்ட்ரூஸ் முதலியவர்களை ரயில் நிலையத்தில் தஞ்சைவாசிகள் வரவேற்றனர். வடவாற்றங்கரையில் இருந்த ‘ஸ்வீட்ஹோம்’ என்னும் வி.ஏ.வாண்டையாரின் பங்களாவில் அவர் தங்கினார். அரசாங்க போதனாமுறைப் பள்ளிக்குச் சென்றார். அங்கே அவரது ‘சித்ரா’ என்ற நாடகம் நடிக்கப்பட்டதைப் பார்வையிட்டார். பெசன்ட் லாட்ஜ் சென்ற அவரை ‘பிரகன் நாயகி ஸ்திரீகள் சங்க’ த்தின் உறுப்பினர்கள் வரவேற்றனர். ஸ்ரீகிருஷ்ண லீலா தியேட்டரில் ‘காடுகளிலிருந்து படிப்பினை’ என்னும் பொருளில் பேசினார். அதைக் கேட்க மூவாயிரம் பேர் வந்திருந்தனராம்.

பிப்ரவரி 14-ம் தேதி மதுரைக்குத் தாகூர் வந்திறங்கினார். மாணவர்களும் ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும் வரவேற்றனர். மாலையில் அமெரிக்கன் கல்லூரி அரங்கில் ‘காடுகளிலிருந்து நாம் தெரிந்துகொள்வது’ என்னும் பொருளில் பேசினார். கல்லூரி முதல்வர் ரெவரண்ட் ஸம்புரூ, ராமநாதபுரம் ராஜா முதலிய பெருமக்களும் கூடியிருந்தனர்.

சென்னையில் தாகூர்

திருச்சி, மதுரைப் பயணங்களை அடுத்து சென்னைக்கு வந்த அவர், மயிலாப்பூர் வக்கீல் டி.எஸ்.இராமசாமி இல்லத்தில் தங்கினார். இதனை அன்னி பெசன்ட்டின் ‘நியூ இந்தியா’ உள்ளிட்ட பத்திரிகைகள் பதிவுசெய்துள்ளன. மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ‘கோகலே அரங்’கில் பேசத் திட்டமிட்டார். 10-ம் தேதி ‘கல்வியின் லட்சியங்கள்’ என்னும் தலைப்பில் கோகலே அரங்கில் தமது உரையஒன்றை வாசித்தார்.

ஜஸ்டிஸ் டி.வி.சேஷகிரி ஐயர், ஜஸ்டிஸ் டி. சதாசிவய்யர், ஸர் பி.எஸ்.சிவஸ்வாமி ஐயர், பி.வி. நரஸிம்மய்யர், டாக்டர் லாஸரஸ், மிஸஸ் லாஸரஸ், ‘தி இந்து’ஆசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார் முதலிய பிரமுகர்களெல்லாம் அந்நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்தனர். அந்த உரையில், நம்முடைய கல்விமுறையில் உள்ள குறையையும், தாய்மொழிக் கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

11-ம் தேதி ‘வனங்கள் நமக்கு அளிக்கும் போதனை’ என்ற பொருள் பற்றிப் பேசினார். காடுகள் குறித்து ராமாயணம், காளிதாசனின் நாடகங்கள் முதலியவற்றில் உள்ள செய்திகளை எடுத்துக்காட்டினார். நமது இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருப்பதைப் போல மேனாட்டுக் கவிகளின் நூல்களில்கூடக் காணப்படவில்லை என்றார். உலகிலுள்ள சகல ஜீவராசிகளும் சமத்துவம் என்ற லட்சியமே இந்தியாவுக்குக் கதி மோட்சத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்பொழிவுக்கும் சென்னை நகரின் பிரபல உத்யோகஸ்தர்களும் கல்விமான்களும் அநேக பெண்களும் வருகைதந்திருந்தனராம்.

தாகூரின் சொற்பொழிவுகள் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு நடந்தன. பெரும்பாலும் அவரது சொற்பொழிவுகள் தேசியக் கல்வி, காடுகள் தரும் படிப்பினை என்னும் பொருளிலேயே நிகழ்ந்தன. சென்னையில் ஆரிய கான சபையாரும், சுகுணவிலாச சபையாரும் தங்கள் நாடகங்களைத் தாகூரின் முன்னிலையில் நடத்தி, வசூலா கும் பணத்தைத் தாகூருக்குச் சமர்ப்பித்தனர். ஆரியகான சபையார் ‘லலிதாங்கி’ என்ற நாடகத்தை நடத்தியபோது, தாகூர் அந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்தார்.

சென்னையில் மாணவர்களும் பொதுமக்களும் கேட்டுக்கொண்டதன் பேரில், சில தினங்கள் கூடுதலாகத் தங்க தாகூர் திட்டமிட்டார். ‘வனங்கள் நமக்கு அளிக்கும் போதனை’ என்னும் பொருளில் சென்னை மாநிலக் கல்லூரியில் 13-ம் தேதியும், சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் 14-ம் தேதியும், பச்சையப்பன் கல்லூரியில் 15-ம் தேதியும் பேசுவதாக அறிவிக்கப்பட்டது. 16-ம் தேதி ஒரு பொது உபந்யாசத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 14-ம் தேதி கிறித்தவக் கல்லூரி, சட்டக் கல்லூரி களுக்கு தாகூர் விஜயம் செய்தார். அக்கல்லூரிகளின் மாணவர்கள் பாராட்டு மடல்களைச் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், மார்ச் 14-ம் தேதி சுதேசமித்திரன் பத்திரிகையில் ஓர் அறிவிப்பு வந்தது. மதுரை முதலிய இடங்களுக்குச் சென்றுவந்ததால் தாகூருக்கு இன்புளூயன்ஸா காய்ச்சல் கடுமையாய்க் கண்டிருப்பதாகவும் அறையைவிட்டு வெளியே செல்லக்கூடாதென மருத்துவர் கள் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டதாகவும் அதனால் சில நாட்கள் அவர் சொற்பொழிவு ஏதும் செய்ய மாட்டார் எனவும் அந்த அறிவிப்பு தெரிவித்தது.

தாகூரும் பாரதியும்

தாகூர் சென்னையிலிருந்த காலங்களில், பரலி சு.நெல்லையப்பரால் ‘தமிழ்நாட்டு ரவீந்திரநாதர்’ என்று குறிப்பிடப்பட்ட பாரதியும் சென்னையில்தான் இருந்தார். அதே நாட்களில் நுழைவுக் கட்டணம் வைத்தும் வைக்காமலும் பாரதியும் வேறு கூட்டங்களில் பேசினார். அதே காலகட்டத்தில் சென்னை வந்த காந்தியைச் சந்திக்க ஆசைப்பட்டுச் சந்தித்த பாரதி, தாகூரைச் சந்தித்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் கிடைக்கவில்லை.

தன்னை ஒத்த நவயுகக் கவியும் தன் படைப்புகளை மொழிபெயர்த்தவருமான பாரதியைச் சந்திக்கத் தாகூரோ, தான் மிகவும் கொண்டாடிய தாகூரைச் சந்திக்க பாரதியோ முயன்றதாகத் தெரியவில்லை.

ஆனால், தாகூரைச் சந்திக்க ஒரு மாபெரும் தமிழ் ஆளுமை விரும்பி, அவர் தங்கியிருந்த மயிலாப்பூர் இல்லத்துக்குச் சென்றார். சந்திக்கச் சென்றவர் சேகரித்து வைத்திருந்த பழங்காலச் சுவடிகளைக் காண்பதற்காக அன்று மாலையே திருவல்லிக்கேணியில் இருந்த அவரது இல்லத்துக்குத் தாகூர் வருகைதந்தார். அவரைப் போற்றி ஒரு பாடலும் புனைந்தார். ‘முந்தைய யுக இருளில் பனையோலைச் சுவடிகளில் மறைந்து கிடந்த திராவிட நாட்டின் கீர்த்தி உன்னாலன்றோ வெளிப்பட்டது’ என்று பாராட்டினார். தமிழக விஜயத்தின்போது தாகூரைச் சந்திக்க விரும்பிய, தாகூர் வந்து சந்தித்த தமிழ் ஆளுமை பழந் தமிழின் மகத்தான பிரதிநிதி உ.வே.சா.

ஓர் ஆறுதலான செய்தி. தாகூரும் பாரதியும் நேரில் சந்திக்கவில்லையாயினும், ஓர் இடத்தில் மட்டும் ஒன்றா கத் தலைகாட்டியுள்ளனர். அது மார்ச் 11-ம் தேதி சுதேசமித்திரன் இதழ்ப் பதிவு. அதில் ஒரே பக்கத்தில் 10-ம் தேதி பேசிய தாகூரின் சொற்பொழிவும், ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதியால் மொழிபெயர்க்கப்பட்ட தாகூரின் ‘பஞ்ச வியாசங்கள்’ நூலின் விளம்பரமும் இடம்பெற்றிருந்தன. தமிழகப் பயணத்தின்போது தாகூரிடத்தில் எவரேனும் சொல்லியிருப்பார்களா அவரது பஞ்ச வியாசங்களை மொழிபெயர்த்தவர் என்ற அளவிலேனும் பாரதியைப் பற்றி? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

- ய.மணிகண்டன், பேராசிரியர்,

தலைவர், தமிழ்மொழித் துறை

சென்னைப் பல்கலைக்கழகம்,

தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author