ஸ்டீவன் ஹாக்கிங்: காலத்தின் வரலாற்றாசிரியர்!

ஸ்டீவன் ஹாக்கிங்: காலத்தின் வரலாற்றாசிரியர்!
Updated on
3 min read

வா

ழும் ஐன்ஸ்டைன் எனப் போற்றப்பட்ட ஸ்டீவன் ஹாக்கிங் 76 ஆண்டு வாழ்வை முடித்துக்கொண்டார். 20 வயதிலிருந்து இயற்கையுடன், மருத்துவ அறிவியலுடன் மிக நீண்ட போரை மனத் துணிவுடன் நடத்திவிட்டார்.

ஆம், அவர் சிறுவனாக இருந்தபோதே அவர் ஷூ லேஸைக் கட்டுவதற்கு மிகவும் கடினப்படுவதைப் பார்த்த அவர் தந்தை, மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பல மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பிறகு, அவருக்கு நரம்பியல் இயக்க நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அவர் முழு உடல் இயக்கமுமே செயலற்றுப் போனது. அப்போது ஹாக்கிங் மருத்துவர்களிடம் கேட்கிறார், செயலற்றுப்போனது எனது உடல் இயக்கம் மட்டுந்தானா? மூளை இயக்கமுமா? மூளைக்கு ஒரு சிக்கலும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். இதைக் கேட்டதும் மகிழ்கிறார் ஹாக்கிங்! என் அறிவுத் தேடலுக்கு உடல் இயக்கம் வேண்டாமே, மூளை இயக்கம் போதுமே. அப்படியானால், நான் எவ்வளவு கொடுத்து வைத்த மனிதன் என மகிழ்கிறார். உடல் இயக்க ஊனத்திலும் அறிவைப் பற்றி யோசித்தாரே, அவர்தான் ஹாக்கிங்.

எனக்கு மார்க்சியம் பிடிக்கும். என் தம்பி பாலாஜி மார்க்சிய எதிரி. அவன் ஒருமுறை இந்தப் புத்தகத்தைப் பார் எனக் கையில் கொடுத்தான். அது ஸ்டீவன் ஹாக்கிங் எழுதிய ‘எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தில் உறுதியின்மைக் (அன்செர்டனிட்டி) கொள்கையை ஹாக்கிங் விளக்கிக் காட்டி, அதன் மூலம் மார்க்சியம் முன்வைக்கும் முன்னுறுதிக் கொள்கை தவறு எனச் சொல்வதாகக் கூறினான் தம்பி. சரி, என்னதான் உள்ளது எனப் படித்துப் பார்த்துவிடுவோம் எனப் புத்தகத்தைப் புரட்டினேன். மார்க்சி யம் பற்றி ஹாக்கிங் என்ன கூறுகிறார் என்பதையே என் தம்பி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனப் பின்னர் தெரிந்தது தனிக்கதை. ஆனால், ஹாக்கிங்கின் இந்தப் படைப்பு பெரும் பாதிப்பை என்னுள் ஏற்படுத்தியது.

ஹாக்கிங் கூறுவதுபோல், அதுவரை இருந்த பல நூல்களும் அறிவியலை விளக்குகிறேன் என்ற பெயரில் பல கணிதச் சூத்திரங்களைக் கணக்கில்லாமல் கொடுத்து, படிப்போருக்குத் தலைவலியைத் தருவதாய் இருந்தன. அறிவியல் வறட்சி இல்லாமல், ஒரு கணிதச் சூத்திரமுமின்றி ஒரு புத்தகத்தை எழுதத் துணிந்தார் ஹாக்கிங். சந்தேகமில்லை, புத்ககத்தைப் படிக்க எடுத்த நான் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உடனே, தமிழ்வழிக் கல்விப் பற்றா ளன் என்ற வகையில், என்னுள் தோன்றிய முதல் ஆசை இது தமிழில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதே. இந்தப் பணி செய்ய என்னால் முடியுமா என்ற தயக்கத்தில் இருந்த எனக்கு ‘உங்களால் முடியும்’ என ஊக்கமூட்டினார் தியாகு. அதுவே பிறகு ‘காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றது. இப்படி ஹாக்கிங்கைத் தமிழ் பேச வைத்ததில் இன்று நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்.

புதுப் புதுக் கதைகளை, கவிதைகளை, நகைச்சுவைத் துணுக்குகளை அவ்வப்போது சொல்லி அறிவியலை மர்மக் கதைபோல் கொண்டு சென்றதுதான் ஹாக்கிங்கின் வெற்றி.

புத்தகத்தின் முதல் அதிகாரத்தின் முதல் பத்தியைப் பாருங்கள். பெட்ரன்ட் ரசல் ஒரு கூட்டத்தில் விண்ணி யல் விதிகள் பற்றி விரிவாகப் பேசி முடிக்கிறார். அப்போது ஒரு மூதாட்டி ஐயா, நீங்கள் சொன்னதெல்லாம் வெறும் குப்பை. உண்மையில் உலகம் ஓர் ராட்சச ஆமையின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு தட்டை யான தட்டே என்கிறார். அப்படியானால், அந்த ஆமை எதன் மீதம்மா நிற்கிறது என்கிறார் ரசல். அதற்கு உடனே மூதாட்டி, ஆமையின் கீழ் ஆமை எனக் கடைசி வரை ஆமைகள்தான் என்கிறார். இதைப் படிக்கும் வாசகர் எவரும் மூதாட்டியின் வாதத்தை மனத்தில் கிண்டலடித்துச் சிரித்துக்கொண்டே நகர்வார், இல்லையா? ஹாக்கிங் சொல்கிறார், இதைப் படிக்கும் உங்களில் பலரும் மூதாட்டி சொன்னதைக் கேலிக்குரியதாகவே கருதுவீர்கள். சரி, உங்களுக்கு அறிவியலைப் பற்றி இதைவிடப் பெரிதாக என்ன தெரியும் எனக் கேட்டு, நம்மைத் திகைக்க வைக்கிறார்.

அப்படியே அறிவியல் என்னும் அதிசயத்தை அழகாக விவரிக்கத் தொடங்குகிறார். கருந்துளைகள் குறித்த கோட்பாடுகளுக்கு முக்கியப் பங்களிப்பு செய்த, தமிழராகிய சந்திரசேகருக்கு இந்தப் புத்தகத் தில் பெரிய இடம்கொடுத்துள்ளார் ஸ்டீவன் ஹாக்கிங். கருந்துளை எப்படிப்பட்டது எனச் சொல்லும்போது, அதற்குள் விழுந்தால் எவரும் தப்ப முடியாது. ஏன் ஒளிகூடத் தப்ப முடியாது என்கிறார். இந்தக் கருந் துளை யின் அதிபயங்கரத்தை விளக்குவதற்கு, நரக நுழைவாயில் குறித்து கவிஞர் தாந்தே வரிகளை எடுத்துக்காட்டுகிறார், ‘நுழைகின்றீர் ஈண்டு நீவிர், நம்பிக்கை யாவும் துறந்து வாரீர்.’ உங்களுக்கு விரைவில் இறப்பு உறுதி என மருத்துவர் தெரிவித்த பின்பும் அதிசயமாக உயிர்பிழைத்து வாழும் எவருக்கும் கடவுள் ஈடுபாடு வராமல் போகாது. அதிலும் ஹாக்கிங் வித்தியாசமானவர். தீவிர நாத்திகர். அவர் புத்தகம் முழுதுமே கடவு ளைக் கிண்டலடித்துக்கொண்டே இருப்பார். ஓரிடத்தில் சொல்வார், கடவுள் என்று ஒருவர் இருந்தால் கூட, அவர் இயற்பியல் விதிகளுக்குக் கீழ்ப்படியும் கடவுளாகத் தான் இருக்க முடியும். யோசுவாக்காக சூரியன் நின்றது போன்ற கதைகளைப் புறந்தள்ளிவிட்டால், கடவுளுக்கு வேறு தலையெழுத்து இல்லை என கிறித்துவ இதிகாசக் கதையைக் கிண்டலடிக்கிறார்.

‘பிக் பாங்க்’ எனப்படும் பெருவெடிப்பு பற்றி ஹாக்கிங் நிறைய எழுத ஆரம்பித்தார். ஒரு முறை வாடிகனில் சேசு சபையார் ஒழுங்கு செய்த அண்டவியல் மாநாட்டில் கலந்துகொண்டார். அண்டவியல் குறித்துப் போப்பாண்டவரிடம் பல அறிவியலர்களும் பேசுகின்றனர். இங்கு பெரு வெடிப்புக்குப் பிறகு, ஏற்பட்ட வளர்ச்சி பற்றி எல்லாம் பேசுவது சரிதான், ஆனால் பெருவெடிப்பு பற்றியே ஆய்வுசெய்யக் கூடாது, ஏனென்றால், அது கடவுள் செயல் என்றாராம் போப்பாண்டவர். ஹாக்கிங் பெரு வெடிப்பு நிலவரம் பற்றித் துணிச்சலுடன் விளக்குகிறார்.

பெரு வெடிப்பு பற்றி ஹாக்கிங் முன்வைத்த கருதுகோளில் ஆதிப் படைப்புக் கோட்பாட்டுக்கு எதிரான கருத்து மறைந்து கிடந்தது. ‘‘நல்வாய்ப்பாக, நான் நிகழ்த்திய உரையின் பொருள் பற்றி போப்பாண்டவருக்குப் புரியவில்லை. இல்லை என்றால், கலீலியோவுக்கு நேர்ந்த கதி எனக்கும் ஏற்பட்டிருக்குமோ’’ என நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார் ஹாக்கிங். கலீலியோ இறந்து சரியாக 300 ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன் என்பதும் அச்சத்துக்குக் காரணம் என நகைச்சுவை ததும்பக் கூறி, அவருக்கும் கலீலியோவுக்கும் உள்ள பொருத்தப்பாட்டைச் சொல்லிப் பெருமைப்படுகிறார் ஹாக்கிங்.

ஹாக்கிங் விரும்பும் பொருத்தப்பாடு அவருக்கு இறப்பிலும் அமையும் பேறு கிடைத்துவிட்டது. அறிவி யல் மாமேதை ஐன்ஸ்டைன் பிறந்த அதே நாளில் இந்த ‘நம் காலத்தின் ஐன்ஸ்டைன்’ மறைந்துவிட்டார்.

- நலங்கிள்ளி, ஸ்டீவன் ஹாக்கிங்கின் காலம்:

ஒரு வரலாற்றுச் சுருக்கம் நூலின் மொழிபெயர்ப்பாளர்,

தொடர்புக்கு: enalankilli@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in