நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: நடைமுறை என்ன?

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: நடைமுறை என்ன?
Updated on
2 min read

ரசியல் சட்டத்தின் 75-வது கூறு, ‘மக்களவையில், மத்திய அமைச்சரவைக்குப் பொறுப்பு இருக்கிறது’ என்று சொல்கிறதே தவிர, நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து அதில் ஏதும் இல்லை. அரசியல் சட்டத்தின் 118-வது கூறு, நாடாளுமன்றத்தின் அவைகள் தங்களது நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது. அதன்படி மக்களவையின் விதி 198, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான நடைமுறைகளை விவரிக்கிறது.

அரசின் பொருளாதாரக் கொள்கையில் உள்ள தவறுகள், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் உள்ள தோல்விகள், வெளிநாட்டு அச்சுறுத்தல், விவசாயிகள் - தொழிலாளர்கள் - சிறுபான்மையினர் நலன்கள் புறக்கணிப்பு போன்றவற்றுக்காக அரசின் மீது நம்பிக்கையில்லை என்று எதிர்க்கட்சி கள் தீர்மானம் கொண்டுவரலாம். தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டால் பிரதமர் தலைமை யில் உள்ள அமைச்சரவை பதவி விலக வேண்டும். அதற்குப் பிறகு மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதர வைப் பெற்ற புதிய அரசு பதவி ஏற்கலாம்.

தற்போது ஆளும் பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் தெலுங்கு தேசமும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், ‘ஆந்திரத்துக்கு அளிப்பதாக வாக்குறுதி தந்த சிறப்பு மாநில அந்தஸ்து தரவில்லை’ என்பதற் காகத்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைத் தனித்தனியாகக் கொண்டுவருகின்றன. பாஜகவை வெவ்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து எதிர்க்கும் காங்கிரஸ், திரிணமூல், இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகியவையும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. ‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால்கூட ஆதரிக்கத் தயார் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடு அறிவித்திருக்கிறார்.

இவ்வளவு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த மிகப் பெரிய கட்சி வெளியில் வருகிறது என்பதாலும், கூட்டணி இதன் மூலம் வலுவிழக்கும் என்பதாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகிழ்ந்து ஆதரிக்கின்றன. தெலுங்கு தேசம் கட்சி இந்த விவாதத்தில் ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்துடன் வேறு பிரச்சினை களையும்கூட சுட்டிக்காட்டிப் பேசலாம். பணமதிப்பு நீக்கம், பொதுச் சரக்கு சேவை வரி, சிறுபான்மையினர்கள் சந்தித்து வரும் அச்சுறுத்தல், அரசின் மதவாதப் போக்கு போன்றவையும் விவாதத்துக்கு வரும்.

இப்போது மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியே தனிப்பெரும்பான்மை வலுவுடன் இருக்கிறது. அதன் தோழமைக் கட்சிகளில் பெரியதான சிவசேனை ஆதரிக்காவிட்டாலும்கூட, பிற கட்சிகள் ஆதரிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, தீர்மானம் வெற்றி பெறச் சாத்தியம் இல்லை. பாஜக கட்சித் தலைவர் அமித் ஷாவின் எதேச்சாதி காரப் போக்கு, பிரதமர் மோடியை நெருங்க முடியாத நிலை ஆகியவற்றால் ஏராளமான உறுப்பினர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர் என்று செய்திகள் கசிகின்றன. அப்படியே அவர்கள் உள்ளுக்குள் பொருமினா லும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட மாட்டார்கள். கட்சிக் கட்டுப்பாடு மட்டுமல்ல, 1985-ல் கொண்டு வரப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்டமும் இதற்கு முக்கியக் காரணம். எனவே, ‘நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்’ என்று ஆளும் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டால், எல்லா உறுப்பினர்களும் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

கூட்டணியில் இடம்பெறாவிட்டாலும் வெளியிலிருந்து ஆதரிக்கிறது அஇஅதிமுக. அக்கட்சிக்கு மக்களவையில் 37 உறுப் பினர்கள் உள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் அதன் இப்போதைய முக்கிய கோரிக்கை. எனவே, விவாதம் இம்மாதம் 29-ம் தேதிக்குள் நடக்கும்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அஇஅதிமுக எதிர்த்து வாக்களிக்கும் அல்லது நடுநிலைகூட வகிக்கலாம்.

இக்கட்சி ஆதரித்தாலும், எதிர்த்தாலும் மத்திய அரசு கவிழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும், அதன் முடிவு பிற அரசியல் கட்சிகளால் கூர்ந்து கவனிக்கப் படுகிறது.

- வ.ரங்காசாரி,

தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in