

கா
ங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆந்திர மாநிலத்தை 'ஆந்திரம்’, 'தெலங்கானா' என்று இரண்டாகப் பிரித்ததில் மோசமான மரபை ஏற்படுத்தியது. ஆந்திரத்துக்கு 'சிறப்பு மாநில அந்தஸ்து' தரப்படும் என்று அன்றைய பிரதம மந்திரி மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் 20.02.2014-ல் அறிவித்தார். அன்றைய மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று இன்றைய ஆந்திர ஆளும் கட்சி தெலுங்கு தேசமும் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். ரெட்டி காங்கிரஸும் கோருகின்றன.
"எந்த மாநிலத்துக்கும் இனி சிறப்பு அந்தஸ்து கூடாது என்று 'பதினான்காவது நிதிக் குழு' கூறியிருப்பதை அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதால் அப்படிச் செய்ய முடியாது; ஆந்திரத்தின் நிதித் தேவையைக் கருத்தில் கொண்டு வேறு வழிகளில் கூடுதலாக நிதியுதவி அளிக்கிறோம்" என்று மறுத்துவிட்டார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று கூறுவதற்கு நிதிக் குழு மீது பழிபோடப்படுவது இது முதல் முறைஅல்ல; மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது எம். வெங்கைய நாயுடு இதே காரணத்தைக் கூறினார். ‘14-வது நிதிக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு சிறப்பு அந்தஸ்து என்ற பிரிவு நீங்குகிறது’ என்ற சுற்றறிக்கை 2016 செப்டம்பரில் வெளியிடப்பட்டது.
உண்மையில் மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கலாமா, கூடாதா என்பது நிதிக் குழுவின் விசாரணை வரம்பில் இல்லவே இல்லை. எனவே, அது பரிந்துரைக்க வேண்டிய தேவையும் எழவில்லை. அது அப்படிப் பரிந்துரைக்கவும் இல்லை.
நிதிக் குழுவின் பரிந்துரை அறிக்கையை நிதானமாகப் படித்துப் பார்த்தால், எந்த இடத்திலும் அப்படி அது பரிந்துரைக்கவில்லை என்பது தெளிவாகும். மாநிலங்களின் வருவாய் ஈட்டும் திறன், செலவு செய்ய வேண்டிய சூழல் ஆகியவற்றின் பின்னணியில், அனைத்து மாநிலங்களும் சமமான வளர்ச்சி பெறத்தக்க வகையில் வரி வருவாயைப் பங்கீடு செய்வதற்கான உத்தியை வகுப்பதுதான் நிதிக் குழுவின் முக்கிய வேலை.
'சிறப்பு அந்தஸ்துள்ள மாநிலம், பொதுப் பிரிவில் உள்ள மாநிலம் என்று நாங்கள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை; மாநிலங்களின் நிதிநிலைமை மீது ஆதிக்கம் செலுத்தும் பொதுவான காரணிகள் பல இருக்கும் நிலையில், சில மாநிலங்களுக்கென்றே தனிப்பட்ட பிரச்சினைகளும் இருப்பதை நிதிக் குழு கணக்கில் கொள்கிறது. இந்தப் பொது அம்சங்களையும், தனிப்பட்ட பிரச்சினைகளையும் கணக்கில் கொண்டு நிதித் தேவைகளை மதிப்பிட்டுப் பரிந்துரைத்திருக்கிறோம். சில மாநிலங்களின் செலவுத் தேவைகளுக்குக் காரணங்களாக இருக்கும் வரம்பு களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம்' என்று நிதிக் குழு பரிந்துரைத்திருக்கிறது. இதில் முக்கியம் என்னவென்றால் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கலாம் என்றோ, கொடுக்க வேண்டாம் என்றோ நிதிக் குழு பரிந்துரைக்கவேயில்லை என்பதே. அவ்வாறான விசாரணைக் கோரிக்கையும் நிதிக் குழுவிடம் தரப்படவில்லை.
தங்களுடைய வருவாய் ஆதாரத்தையும், செலவுத் தேவைகளையும் மதிப்பிட வேறு வரையறைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று 'சிறப்பு மாநில அந்தஸ்து' பெற்ற மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. அப்போதுதான், 'எல்லா மாநிலங்களின் வருவாய் ஈட்டும் திறனையும், செலவுக்கான நியாயங்களையும் பரிசீலிக்கும்போது ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கையாள்வோம், மாநிலங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளையும் கணக்கில் கொள்வோம்' என்று நிதிக் குழு கூறியது.
'ஆந்திரப்பிரதேச மாநிலம், அதிலிருந்து பிரிந்த தெலங்கானா ஆகியவற்றின் நிதிக் கோரிக்கைகள் தொடர்பாக, 'ஆந்திர மாநில மறுசீரமைப்புச் சட்டம்-2014’, 4.3.2014-ல் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை எண் எஸ்.ஓ. 655 (இ) ஆகியவற்றின்படி பரிசீலிப்போம்' என்று மட்டுமே நிதிக் குழு குறிப்பிட்டுள்ளது. எனவே பதினான்காவது நிதிக் குழுவுக்குச் சிறப்பு அந்தஸ்து தொடர்பாகப் பரீசிலிக்க வேண்டிய தேவையோ, கடமையோ ஏற்படவில்லை.
சிறப்பு அந்தஸ்துள்ள மாநிலங்கள் என்ற பெயரில் சில மாநிலங்கள் தொடர்ந்தாலும், மாநிலங்களுக்கு இடையிலான இந்த அசமத்துவம் குறித்துப் பரிசீலிக்க வேண்டிய தேவை நிதிக் குழுக்களுக்கு ஏற்படுவதில்லை. முன்பிருந்த 'மத்திய திட்டக் குழு' பரிந்துரைப்படி 'தேசிய வளர்ச்சி மன்றம்' (என்.டி.சி.) மூலம் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. அதற்கு ஐந்து வரையறைகள் உள்ளன.
மலைப்பாங்கான பிரதேசம் - கடினமான தரைப்பகுதி, குறைந்த எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி - பழங்குடிகள் எண்ணிக்கை அதிகம், பக்கத்து நாடுகளுடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதி, பொருளாதார-அடித்தளக் கட்டமைப்புரீதியாக பின்தங்கிய நிலைமை, நிதி வசதியைப் பெருக்க முடியாத நிலைமை ஆகியவையே அந்த ஐந்து வரையறைகள். இந்த வரையறைகளை நிர்ணயிப்பதோ, வரையறைகள்படி ஒரு மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதோ நிதிக் குழுவின் வேலையல்ல.
அசமத்துவ அடிப்படையில் மாநிலங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க நமது அரசியல் சட்டத்திலேயே சிறப்புப் பிரிவுகள் உள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டத்தின் 370-வது கூறின்படியும், வட கிழக்கு மாநிலங்களுக்கு அரசியல் சட்டத்தின் 371 'ஏ' முதல் 'எச்' வரையில் உள்ள பிரிவுகள்படியும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இவையுமே தாற்காலிகமான, காலவரம்புள்ள, சிறப்பு ஏற்பாடுகள்தாம். அரசியல் காரணங்களுக்காக விருப்ப அதிகாரப்படி மாநிலங்களுக்கிடையே அசமத்துவமான ஏற்பாடுகளைச் செய்தால் கூட்டாட்சியின் இழையைத்தான் அது பலவீனப்படுத்தும்.
இந்த விவகாரத்தில் எல்லா அரசியல்கட்சிகளுமே குற்றவாளிகள்தான். பதினான்காவது நிதிக் குழு, சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் அல்லது வேண்டாம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. எனவே, சிறப்பு அந்தஸ்து தரமுடியாததற்கு நிதிக்குழுதான் காரணம் என்று பழிபோடுவது நிச்சயம் திசைதிருப்பும் முயற்சியாகும். மத்திய அரசு அதாவது நிர்வாகம் நினைத்தால் உத்தரவிட்டு சிறப்பு அந்தஸ்துள்ள மாநிலத்தை உருவாக்கலாம் அல்லது அந்தஸ்தை வழங்கலாம் என்பதே உண்மை.
- எம். கோவிந்த ராவ், பதினான்காவது நிதிக்குழு உறுப்பினர்.
தமிழில்: சாரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்.