

ஆ
திச்சநல்லூர்- கீழடி அகழாய்வை முன்வைத்து ஒருவிதமான அரசியல் பாடாய்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம், கொடுமணலில் அகழாய்வுப் பணிகளை ஜனவரி 16-ம் தேதியிலிருந்து தொடங்கி இருக்கின்றனர் மத்திய தொல்லியல் துறையினர். இரண்டு மாதங்களாக ரகசியம் காப்பது போல நடந்துகொண்டிருக்கும் இந்த அகழாய்வில் என்னதான் கிடைத்திருக்கிறது? அறிந்துகொள்வதற்காகக் கொடுமணலுக்கே புறப்பட்டோம். அதற்கு முன்பு, கொடுமணல் ஆய்வைப் பற்றி ஒரு முன்கதைச் சுருக்கம்.
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் கொடுமணல் (கொடுமணம்) சிற்றூர் பாடப்பெற்றுள்ளது. ‘கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு...’ என்று நீள்கிறது கபிலரின் பாடல். ‘கொடுமணல் பட்ட வினை மாண் அருங்கலம் பந்தர்ப் பெயரிய பலர்புகழ் முத்தம்!’ என்கிறார் அரிசில் கிழார்.
நொய்யலாற்றின் இருகரைகளில் அமைந்துள்ளது இவ்வூர். கபிலர், அரிசில் கிழார் பாடல்கள் கொடுமணலில் செய்யப்படும் கல்மணி அணிகலன்களை புகழ்வதற்கேற்ப இன்றைக்கும் இங்கே உள்ள தோட்டங்காடுகள், ஆற்றங்கரைகள் போன்ற இடங்களில் வண்ண வண்ணக் கல்மணிகள், முதுமக்கள் தாழிகள், பிராமி எழுத்துக்களுடன் கூடிய மண்பாண்ட ஓடுகள் கிடைப்பது வாடிக்கை.
தமிழகத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் பல் கலைக்கழகப் பேராசிரியர்களும் இங்கே பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். 1979-ல் தமிழக அரசின் தொல்லியல் துறை, மாதிரி அகழாய்வுக் குழியைக் கொடுமணலில் தோண்டியது. அதில் ரோமானிய ஓடு ஒன்று கிடைத்தது. 1985 முதல் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூன்று பருவங்களில் அகழாய்வுகளை செய்தது.
1997 முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மீண்டும் அகழாய்வை இரு பருவங்களாக மேற்கொண்டது. இதற்காக 15 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில் செலசனக்காடு, தோரணக்காடு என இரு இடங்களில் தோண்டிய குழிகளில் தொல்பொருட்கள், மட்கலங்கள் கிடைத்தன. அங்கு காணப்பட்ட மண் அடுக்குகளின் அடிப்படையில் இரண்டு பண்பாட்டுக் காலங்களில் மக்கள் வாழ்ந்தது தெரியவந்தது.
இதன்படி முதல் பண்பாட்டுக்காலம் கிமு 300 முதல் கிபி 100 என்றும், இரண்டாம் பண்பாட்டுக்காலம் கிபி 100 முதல் கிபி 300 என்றும் அறுதியிடப்பட்டது. இந்த ஆய்வுகளில் இரும்பை உருக்கப் பயன்படுத்திய உலையின் பகுதிகள், இரும்புச் சிட்டங்கள், இரும்பு வாள், இரும்பு அம்பு முனைகள், செப்பு உலோக அம்பு முனைகள், இரண்டு புறமும் வெட்டும் கோடாரி, வில், குத்தீட்டி, செம்பினால் ஆன உடைந்த வடிகட்டி என தொல்பொருட்கள் பலவும் கண்டெடுக்கப்பட்டன. கொடுமணல் மக்கள் இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் தொழில்நுட்பத்தை 2,000 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர் என்று உலகுக்கு அறிவித்தனர் ஆய்வாளர்கள்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தினரின் அகழாய்வில் மண்ணில் புதைந்த உலைகளும், ஆய்விடத்தின் மேற்பரப்பிலேயே இரும்புக் கசடுகளும், புடம் போடும் மட்கலங்களும் எடுக்கப்பட்டன. தவிர, மான்கொம்புகள், சங்கு வளையல், அறுக்கப்பட்ட சங்குகள், கண்ணாடி வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இங்கு கிடைத்த ‘பெரில்’ பச்சைக்கல், ‘சபையர்’ எனப்படும் நீலக்கல் ரோமானியர் களைப் பெரிதும் கவர்ந்தவை. பளிங்குக் கற்களால் ஆன மணிகளும் இங்கு அதிக அளவு கிடைத்துள்ளன. தவிர, பச்சைக்கல், பளிங்குக்கல், நீலக்கல், சூதுபவளம், மாவுக்கல் போன்ற கற்களாலான மணிகளும் கிடைத்துள்ளன. இதன் முடிவாக, கொடுமணலில் அரிய கல்மணி களுக்குப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. இங்கிருந்து கல்மணிகள் சேரர்களின் துறைமுகமான முசிறி வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன.
இப்போது கொடுமணலுக்குள் புகுவோம். பேருந்தை விட்டு இறங்கி, “இங்கே அகழ்வாராய்ச்சி நடக்கும் இடம்?” என்று எதிர்ப்படுபவர்களைக் கேட்டதற்கு, ‘ஓடு கழுவற இடம்தானே?’ என்று கேட்டுவிட்டு ஊருக்கு நேர் எதிர்த் திசையைக் காட்டினார்கள்.
அகழாய்வில் மிகுதியாகக் கிடைப்பது தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய மண்பாண்ட ஓடுகளே. எனவே, மண்ணில் புதைந்து கிடக்கும் அவற்றை எடுத்துக் கழுவுவது முக்கியம். இதனால், ஒட்டுமொத்த அகழாய்வுப் பணியையும் இப்படி ‘ஓடு கழுவும்’ வேலைக்குள் அடக்கி வெள்ளந்தியாய்ப் பேசுகிறார்கள் கிராம மக்கள்.
போகிற வழியெல்லாம் சோளக்காடுகள், தென்னை மரங்கள். அதனிடையே தென்படும் அத்தனூரம்மன் கோயிலும் மதுரகாளியம்மன் கோயிலும் பழமையான கோயில்கள். அதிலும் அத்தனூரம்மன் கோயிலில் இருந்த இரண்டு விதமான நாகர் சிலைகளிலும் முழுக்க தமிழ் பிராமி எழுத்துக்களே செதுக்கப்பட்டுள்ளன.
“இந்தச் சிலைகள்ல இருக்கிற எழுத்துக்களை வந்து படியெடுக்காத ஆராய்ச்சியாளங்களே இல்லை. இதை ஆராய்ச்சிப் பண்ணி பார்த்தவங்க சிலைக்கு மட்டுமல்ல, கோயிலுக்கும் வயசு ஆயிரம், ரெண்டாயிரம் இருக்கும்னு தான் கணிக்கிறாங்க!’ என்கிறார் இந்தக் கோயிலின் பூசாரி சுப்பிரமணியம். இக்கோயிலிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் நடை.
எதிர்ப்படும் ஒரு தோட்டத்தின் நடுமையம்தான் அகழாய்வு நடக்கும் இடம். சுமார் நான்கைந்து ஏக்கர் நிலத்தில் 10 அடிக்கு 20 அடி அளவிலான 8 செவ்வகக் குழிகள். அனைத்து செவ்வகக் குழிகளும் 1 அடிக்கும் சற்று அதிக ஆழத்தில் தோண்டப்பட்டிருந்தன. இங்கே குழி தோண்டிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் உள்ளூர்க்காரர்கள்தான்.
இங்கே கண்டெடுக்கப்படும் மண்பாண்ட ஓடுகள், பல வண்ணங்களில் மினுங்கும்கற்கள் போன்றவை தண்ணீரில் கழுவப்பட்டுத்தனித்தனிக் கட்டங்களில் வகை பிரித்திருந்தனர். ஏற்கெனவே, கீழடி அகழாய்வு, அரசியல்விவகாரம் ஆகியிருந்ததால் கொடுமணல் பற்றிவிவரங்கள் சொல்ல யாருமே முன்வரவில்லை.
மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராமிடம் பேசியபோதுகூட, “பணி ஆரம்பித்துக் கொஞ்ச காலமே ஆகிறது. இன்னமும் நான்கைந்து மாதங்கள் இப்பணிகள் நடக்கும். தமிழகத் தொல்லியல் இலாக்கா கண்டுபிடித்த மாதிரியான பொருட்கள் மட்டுமே இதுவரை கிடைத்திருக்கின்றன. அவை கிமு 3-ம் நூற்றாண்டு வரையிலானவை என கருதலாம். இன்னமும் ஓரிரு வாரங்கள் பொறுங்கள். நாங்களே உங்களைக் கூப்பிட்டு விஷயங்களைத் தருகிறோம். இப்போது வேண்டாமே!” என்று பிடிகொடுக்காமலே நம்மை அனுப்பி வைத்தார்.
ஏற்கெனவே நடந்து முடிந்த கொடுமணல் அகழாய்வுகளில் பங்கேற்ற தமிழகத் தொல்லியல் துறையில் ஓய்வு பெற்ற அலுவலர் பூங்குன்றனிடம் பேசினோம். “மத்திய தொல்லியல் இலாக்கா இங்கே 1962-ல் மேற்பரப்பு ஆய்வை மட்டும் செய்தது. பொதுவாக, மாநில அரசு இப்படியான அகழாய்வுக்கு மொத்தமே ரூ 2 லட்சமோ ரூ. 3 லட்சமோதான் ஒதுக்குவார்கள்.
அதுவே, மத்திய தொல்லியல் துறையினர் நேரடியாக ஆய்வில் ஈடுபடும்போது ரூ. 50 லட்சம்கூட ஒதுக்குவார்கள். கீழடி அகழாய்வு ரூ.50 லட்சம் செலவில்தான் நடந்திருக்கு. அதுபோன்ற ஆய்வு கொடுமணலில் நடக்கும்போது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டதுபோல் 10 மடங்கு அதிசயத் தகவல்கள்கூட வெளியாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!’ என்றார்.
- கட்டுரை, படம் - கா.சு.வேலாயுதன்
தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in