Last Updated : 13 Mar, 2018 09:36 AM

 

Published : 13 Mar 2018 09:36 AM
Last Updated : 13 Mar 2018 09:36 AM

லெனின் இன்னமும் வாழ்கிறார்..

ந்திய இடதுசாரிகளுடனான எனது முதல் அனுபவமே கிரிக்கெட்டில் ‘டக் அவுட்’ ஆன கதைதான். 1975-ல் நான் இதழியல் படித்துக் கொண்டிருந்த மாணவன். கம்யூனிஸ்ட் தலைவர் ஈஎம்எஸ். நம்பூதிரிபாடு உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்ற பந்தயத்தில் தோற்று 10 ரூபாயை இழந்தேன். அவர் இறந்து விட்டதாகத்தான் நினைத்தேன்.

அதன்பிறகு பத்திரிகையாளர் ஆன பிறகு, கேரளத்தின் படிப்பறிவு குறித்த கட்டுரைக்காக அப்போது சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஈஎம்எஸ்ஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பந்தயத்தில் தோற்ற கதையை அவரிடம் சொன்னேன். கையை நீட்டிய அவர், , “என்னுடைய நாடித்துடிப்பைச் சோதித்துப் பாரேன். நீ சொன்னதுதான் சரியாக இருக்கும். அந்தக் காசை திரும்பப் பெற்றுவிடு..” எனக் கூறினார். எல்லோரும் சிரித்தார்கள்.

பத்திரிகைத் துறைக்கு வந்தபிறகு இடதுசாரிகளை தெரிந்து கொண்டேன். அவர்களின் பொருளாதாரக் கொள்கைகள், சமூக - அரசியல் போலித்தனம் குறித்து விமர்சித்தேன். தனிநபர் சுதந்திரத்தை மறுக்கும் அதிகாரத் தலைமை எப்படி ஜனநாயகமாக முடியும். வெளிநாடுகளில் படித்த, இந்தியாவின் பெருமை வாய்ந்த கல்லூரிகளில் படித்த உயர் ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சித் தலைவர்கள் எப்படி சமத்துவம் குறித்தும் ஏழைகள் குறித்தும் பேச முடியும் என்பதே என் நிலைப்பாடாக இருந்தது.

1989 முதல் 1993 வரை பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடியபோது, எதிர்த்துப் போராடியது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். அக்கட்சியினர் பஞ்சாபின் எல்லை மாவட்ட கிராமங்களில் தங்கியிருந்து, தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்டு உயிர்த் தியாகம் செய்தனர். அதைத்தவிர அவர்களைப் பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை.

கடந்த 2004-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி. பரதனின் கேலியான விமர்சனத்தைக் கேட்டு கொதித்தேன். ஆனால் அவர்களே, மதவாத கட்சி என ஒதுக்கிவைத்த பாரதிய ஜனதாவுடன் கைகோத்துக் கொண்டு, மன்மோகன் சிங்கின் அணு ஆயுதக் கொள்கையை எதிர்த்து நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். அதில் மன்மோகன் சிங் வெற்றிபெற்றபோது மகிழ்ச்சியடைந்தேன். மேற்கு வங்கத்தில் அவர்களை மம்தா பானர்ஜி தோற்கடித்தபோதும் மகிழ்ச்சியுற்றேன்.

1980-களின் இறுதியில் சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறும் நிலைமைக்கு வந்தது. ஆப்கானிஸ்தான் போரில் தோற்றது. மிகையீல் கார்ப்பசேவ், பெரஸ்திராயிகா, கிளாஸ்நாஸ்ட்டைக் கொண்டு வந்தார். டெங் தலைமையில் சீனாவின் சந்தை திறந்துவிடப்பட்டது. அப்போது சிபிஎம் மாநிலச் செயலாளராக இருந்த சரோஜ் முகர்ஜியைச் சந்தித்தேன். ‘கொர்ப்பசேவும் டெங்கும் மாறிவிட்டனர். நீங்கள் மட்டும் ஏன் மாறவில்லை..' எனக் கேட்டேன். அதற்கு அவர், `எங்கள் கம்யூனிசம் டெங், கார்ப்பசேவ் கம்யூனிசத்தை விடத் தூய்மையானது' என உறுதிபடக் கூறினார்.

அடுத்த 2 ஆண்டுகளில் சோவியத் யூனியன் உடைந்தது. புக்காரெஸ்ட் வீதிகளில் ராணுவ டேங்குகள் வலம் வந்தன. பீரங்கி முனைகளில் அல்லி மலர்கள் சொருகப்பட்டிருந்தன. சர்வாதிகாரி அதிபர் செசஸ்கு கொல்லப்பட்ட இடத்தில் மக்கள் சாரை சாரையாக வந்து காறித் துப்பிவிட்டுச் சென்றனர்.

மீண்டும் மாஸ்கோ சென்றிருந்தேன். அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்களின் சிலைகள் உடைத்து தள்ளப்படுவதைப் பார்த்தேன். அதுவும் நல்லதுதான். கொள்கைகள் எப்போது செத்துப் போகிறதோ, அப்போதே அதன் அடிப்படையில் உருவான சர்வாதிகாரிகளின் சிலைகளும் அகற்றப்படுவதுதானே நியாயம்?

மேற்கு வங்கத்தில் தங்களது 34 ஆண்டு ஆட்சியால் மாநிலத்தின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டனர் இடதுசாரிகள். ஜனநாயகம் மற்றும் சுதந்திரச் சிந்தனையைப் போற்றிப் பேசிய அவர்கள், எதிர்க்கட்சியினரை அழிக்கும் ரவுடிகளையும் மாமூல் வசூலிக்கும் கொள்ளையர்களையும்தான் உருவாக்கி விட்டிருந்தனர். கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸும் மாறி மாறி ஆட்சி செய்ததால், அங்கு தொழில்துறை ஓரளவுக்குத் தப்பிப் பிழைத்தது. நாட்டின் மற்ற பகுதிகளில் இடதுசாரிக் கட்சிகள் மறைந்துவிட்டன. 2004 தேர்தலில் 59 தொகுதிகளில் வென்று தேசிய சக்தியாக உருவெடுத்தனர். ஆனால் அதை அவர்களே கெடுத்துக் கொண்டனர்.

தற்போதைய அரசியல் சூழலில், சமூக பொருளாதாரமும் வறுமை ஒழிப்பு கொள்கைகளும் தான் வளர்ச்சிக்கு வழி என்பதை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. இடதுசாரிகள் இடம் தெரியாமல் போகிறார்கள். அவர்களின் தலைவர்கள் ஜேசிபி-யால் இடித்துத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் பொருளாதாரச் சிந்தனைகள் எந்தப் போட்டியும் இல்லாமல் ஆளுகின்றன. இந்திரா காந்திக்குப் பிறகு சக்திவாய்ந்த தலைவராக இருக்கும் நரேந்திர மோடியே இந்தக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறார்.

போலியான சோஷலிச அரசியல் பொருளாதாரத்தைத்தான் நாம் கொண்டிருக்கிறோம். இடதுசாரிகளின் கோட்டையை தகர்த்துவிட்டதாக ஒரு கட்சி கொண்டாடுகிறது, அதன் தொண்டர்கள் லெனின் சிலையை உடைத்துத் தள்ளுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்குத் தெரியவில்லை, அந்த கொடுங்கோலனின் கொள்கைதான் இந்தியாவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்று. லெனின் 1924-ல் இறந்தார். அவருடைய நாடு ரஷ்யா 1990-ல் அவருடைய கொள்கைகளை கைவிட்டது. ஆனால் இந்தியாவில் அந்தக் கொள்கைதான் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.

சேகர் குப்தா,

‘தி பிரிண்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்

தமிழில்: எஸ். ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x