ஒரு தேசத்தின் பெரும் பாய்ச்சல்!

ஒரு தேசத்தின் பெரும் பாய்ச்சல்!
Updated on
2 min read

நிலவில் கால்வைத்தவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன வாசகங்கள் இவை: ‘‘ஒரு மனிதனைப் பொறுத்தவரை சிறிய காலடிதான் இது. ஆனால், மனித குலத்தைப் பொறுத்தவரை பெரும் பாய்ச்சல்.” இந்தியாவின் மங்கள்யான் செவ்வாயை எட்டிப்பிடித்திருக்கும் தருணத்திலும் ஆம்ஸ்ட்ராங்கின் வாசகங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கின்றன. ஆம், நம் தேசத்தைப் பொறுத்தவரை பெரும் பாய்ச்சல்தான் இது.

இந்தியாவிலேயே தயாரான கருவிகள், பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் சாதனை இது. மிக முக்கியமாக, இந்திய அறிவால் உருவான தொழில்நுட்பத்தின் பெரும் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் விண்வெளிப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக, நவீன வானியல் யுகம் அதிநவீன வானியல் யுகத்துக்கு வித்திட்டது. இந்தியாவுக்கோ, சுதந்திரம் அடைந்த பின் எல்லாவற்றையும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழல். எனவே, வளர்ந்த நாடுகள் ஏற்கெனவே ஓடிக்கொண்டிருந்த இந்த ஓட்டப் பந்தயத்தில் இந்தியா சற்றுத் தாமதமாகக் கலந்துகொண்டது.

எனினும், இன்று மங்கள்யான் வெற்றியின் மூலம் இந்தியா வானியல் பந்தயத்தின் முதல் இடங்களில் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அசாதாரணமான சாதனை இது என்றே சொல்லத் தோன்றுகிறது. உலகின் எந்த நாடும் முதல் முயற்சியிலேயே இதைச் சாதித்ததில்லை என்பது இந்தச் சாதனையை மேலும் உயர்த்தியிருக்கிறது. இதைச் சாத்தியமாக்கியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் முன்னோடிகளுக்கும், மங்கள்யான் திட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் இந்தத் தருணத்தில் நாம் உரித்தாக்குகிறோம்!

எந்த தேசத்துக்கும் இளைத்ததல்ல இந்தியா என்ற உண்மையை உரக்கச் சொல்லியிருக்கும் மங்கள்யான் வெற்றியை அனைவரும் கொண்டாடுவோம்!

புகைப்படங்கள் - தி இந்து ஆவணக் காப்பகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in