

கொளுத்தும் கோடைக்கு எந்தக் குளிர்பானங்கள் கிடைத்தாலும் அந்த வெம்மையை சமாளிக்கவே முடியவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பதுதான் நம் இயல்பு. ஆனால், மழைக் காலத்தையோ குளிர் காலத்தையோ சமாளிக்க, டீ, காபி முதலான சூடான பானங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், கோடையில் கோடையைச் சமாளிக்கும் வரப்பிரசாதமாக ஏராளமான குளிரூட்டிகள், உடலை உஷ்ணத்தில் இருந்து காப்பதற்காக, இயற்கையாகவே இயற்கையால் நமக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவற்றில், மிக முக்கியமானது நுங்கு. இந்த நுங்கு, சுவையானதா என்றால் ஆமாம், சுவையானதுதான். குளிர்ச்சியானதா என்றால் ஆமாம், குளிர்ச்சியானதுதான். தொண்டையில் இருந்து அடிவயிறு வரை, ஒரு ஏ.ஸி.யைப் போல் ஆக்கிவிடும் தன்மை, நுங்கிற்கு உண்டு.
நா வறண்டு தவிக்கும், இந்தக் கோடையில், நீர்ச்சத்துக்கள் உடலுக்கு மிக மிக அதிகமாகவே தேவை. இந்த நீர்ச்சத்தை, சொடுக்குப் போடுகிற நேரத்தில் நமக்கு அள்ளி வழங்கும் வள்ளல்களாகத் திகழ்கின்றன நுங்குகள்.
மேலும் வெயில் காலத்தில், சுட்டெரிக்கும் சூரியனின் தகிப்பால், உடலின் கனிமச்சத்தையும் சர்க்கரைச் சத்தையும் அதிகமாகவே இழக்கிறோம். தாகம் தணிக்கச் செய்யும் நுங்கு, இழந்த கனிமச்சத்தையும் சர்க்கரை அளவையும் கூட்டித் தருகிறது.
அதுமட்டுமா? நுங்கில், எண்ணிலடங்காத சத்துகளும் இருக்கின்றன. அவற்றால், நமக்கு தாராளமாகவே கிடைக்கின்றன. இதனால், கோடையில் வரும் நோய்களில் இருந்து தப்பிக்க, கேடயமாகப் பயன்படுகிறது நுங்கு. அம்மை முதலான நோய்களும் அண்டாது. உஷ்புஷ் என்று வெயில் தாக்கத்திலிருந்தும் குளிர்ச்சிப்படுத்திவிடும்.
இதோ... இந்தக் கோடையும் வந்துவிட்டது. கோடையில் நுங்கும் மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இந்த முறை 3 நுங்கு 20 ரூபாய், 25 ரூபாய் என்றெல்லாம் விற்கப்படுகின்றன. வெயில் வருடந்தோறும் ஏறிக்கொண்டே இருப்பது போல, நுங்கு விலையும் சர்ர்ரென ஏறிக்கொண்டே இருக்கிறது.
‘எப்போதும் சித்திரை பிறந்த கையுடன், நுங்கு விற்பனை தொடங்கிவிடும். ஆனால் இந்த முறை, நுங்கு வரத்து குறைவுதான். மே முதல் வாரத்தில் இருந்து, நுங்கு வரத்து அதிகரிக்கும். அப்போது நுங்கின் விலையும் ஓரளவு குறைய ஆரம்பிக்கும்’ என்கிறார்கள் வியாபாரிகள்.
நுங்கு வாங்க மறக்காதீங்க. இந்தத் தலைமுறை பசங்களுக்கு, நுங்கு வாங்கிக் கொடுத்து அதன் பயன்பாட்டைச் சொல்லிப் புரியவையுங்கள். அடைக்கப்பட்ட வண்ண குளிர்பானங்களில் இருந்து அவர்களையும் வெயிலின் தாக்கத்தையும் மீட்டெடுங்கள்!