

கேரளாவில் ராகுல் போட்டியிடுவதாக அறிவித்தது, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுலின் முடிவை கேரள கம்யூனிஸ்ட்கள் கடுமையாக விமர்சித்துவரும் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினேன்.
காங்கிரஸ் தொடர்ந்து வென்ற தொகுதியில், காங்கிரஸ்காரரான ராகுல் போட்டியிடுகிறார். இதைச் சர்ச்சையாக்குவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தாதா?
பாஜக ஆட்சியை வீழ்த்துவதுதான் இந்தியா முழுக்க இருக்கிற அனைத்து எதிர்க்கட்சிகளின் மைய நோக்கம். காங்கிரஸ் கட்சிக்கும் அதுதான் மைய நோக்கமாக இருக்க வேண்டும். கேரளாவில் பாஜக கட்சியே இல்லை. போட்டியே காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தான் என்கிறபோது, அங்கு ராகுல் போட்டியிடுவது பாஜக மீதான எதிர்ப்பை முனை மழுங்கச் செய்துவிடும் என்பதால்தான், கம்யூனிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறது. இது பெரிய சர்ச்சையாகி, தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியைப் பாதிக்கும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. இங்கே விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், தொழில் நடத்துபவர்கள் எல்லோருமே மத்திய, மாநில அரசுகளால் பாதிக்கப்பட்டு நொடிந்துபோய் இருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கோபம் நாடு முழுக்கப் பரவலாக இருப்பதைப் பிரச்சாரப் பயணத்தின்போது உணர முடிகிறது. கண்டிப்பாக அது தேர்தலில் எதிரொலிக்கும்.
எல்லாம் சரி. “கம்யூனிஸ்ட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நிலைப்பாடு எடுக்கிறார்கள்” என்று பிரேமலதாகூடக் கேலிசெய்கிறாரே?
பிரேமலதாவின் கட்சி தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருக்கிறதென்றே தெரியவில்லை. ஆர்.கே.நகரில் நோட்டாவைவிடக் குறைவான வாக்குகள் வாங்கிய கட்சி அது. சரி, நாங்கள் 3 மாநிலங்களை ஆண்ட தேசியக் கட்சி, எனவே அந்தந்த மாநிலங்களுக்கேற்ப முடிவெடுக்கிறோம் என்றே வைத்துக்கொள்வோம். தேமுதிக தமிழ்நாட்டில் மட்டும்தானே இருக்கிறது? அவர்களது கொள்கை என்ன, அப்படி ஏதாவது அவர்களுக்கு இருக்கிறதா?
உங்கள் கூட்டணியைச் சேர்ந்த துரைமுருகனின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்களே?
ரிசர்வ் வங்கி, ராணுவம், சிபிஐ, நீதிமன்றம், வருமான வரித் துறை என்று தன்னிச்சையான அமைப்புகள் எல்லாவற்றையும் தங்கள் கட்சியின் ஓர் அங்கமாக மாற்றிவைத்திருக்கும் பாஜக அரசு நடத்தியிருக்கிற உள்நோக்கம் கொண்ட சோதனை இது. தற்போதைய அமைச்சர்கள் எத்தனை ஆயிரம் கோடியைக் குவித்துவைத்திருக்கிறார்கள் என்பது வருமான வரித் துறைக்குத் தெரியாதா? துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் பிரச்சாரத்துக்குப் போகிற இடங்களிலெல்லாம் குவிந்து நிற்கிறவர்களுக்குப் பட்டப்பகலில் தலா ரூ.500 கொடுக்கிறார்களே, அது தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா? துரைமுருகனின் வீட்டில் மட்டும் சோதனை நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது பாமர மக்களுக்குக்கூடத் தெரியும். எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக மத்திய அரசு எத்தனை உருட்டல், மிரட்ல்களை விடுத்தாலும், மக்களின் கோபத்தைத் திசை மாற்ற முடியாது.