என்ன நினைக்கிறது உலகம்: தடுப்பூசி - சவால்களைக் களைய வேண்டும்!

என்ன நினைக்கிறது உலகம்: தடுப்பூசி - சவால்களைக் களைய வேண்டும்!
Updated on
1 min read

பலுசிஸ்தான் மாகாணத்தில், தடுக்கக்கூடிய குழந்தைப் பருவ நோய்களை ஒழிப்பதில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மாகாண சுகாதாரத் துறையையும் தொண்டு நிறுவனங்களையும் அழைத்துப் பேசியிருக்கும் பலுசிஸ்தான் மாகாண ஆளுநரின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது. உலக நோய்த் தடுப்பாற்றல் வாரம், ஏப்ரல் 24 முதல் தொடங்கவிருப்பதையொட்டி, நோய்த் தடுப்பாற்றல் தொடர்பாக ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது.

குழந்தைப் பருவ நோய்கள் அதிகரித்துவரும் சூழலில், குறிப்பாக மனித வள மேம்பாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் பலுசிஸ்தான் மாகாணம் இருக்கும் நிலையில், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.

1978-ல் தொடங்கப்பட்ட விரிவான நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியமான தடுப்பூசிகள் இலவசமாகவும் மானிய விலைகளிலும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நோய்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்றாலும், அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது இளம்பிள்ளை வாதத்துக்குத்தான் (போலியோ).

போலியோவை ஒழித்துக்கட்டுவதில் இன்னமும் முழுமையான வெற்றிபெறாத நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடினமான நிலப்பரப்பு, தொலைதூரப் பகுதிகள் அதிகம் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தடுப்பூசிக் குழுக்களின் பணி மிகவும் சவாலானது. பலுசிஸ்தானில் மட்டுமல்ல பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மாகாணங்களிலும் நிலைமை மோசம்தான். போலியோ தடுப்பூசிகள் என்பவை மேற்கத்திய சதி என்று தவறான பிரச்சாரம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பது தடுப்பூசி மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கிறது.

போலியோ சுகாதாரப் பணியாளர்கள் பலர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதைப் பெற்றோர்களே எதிர்க்கிறார்கள். இப்படியான சூழலில், போலியோ மட்டுமல்லாமல் பல்வேறு குழந்தைப் பருவ நோய்களைத் தடுக்கும் வகையில், தடுப்பூசித் திட்டங்களை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் மேலும் அதிக கவனத்தையும் நேரத்தையும் செலுத்த வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்தான். ஆனால், அது ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் என்பது மிக மிக அவசியம்!

- டான், பாகிஸ்தான் நாளிதழ் | தமிழில்: சந்தனார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in