

நெருக்கடிநிலைக்குப் பிறகு 1977-ல் நடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் ராய்பரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி, ஜனதா கூட்டணி வேட்பாளர் ராஜ்நாராயணிடம் தோற்றார். ஜனதா ஆட்சியைக் கவிழ்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த இந்திரா, கர்நாடகத்தின் சிக்மகளூரில் 1978-ல் இடைத் தேர்தலில் போட்டியிட்டார். சிக்மகளூர் என்றால் சின்னப் பொண்ணு ஊரு என்று அர்த்தம். ‘உங்களின் இளைய மகள் வாக்குகேட்டு வந்திருக்கிறேன். ஆதரியுங்கள்’ என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் இந்திரா காந்தி. அவரை எதிர்த்து நின்ற ஜனதா வேட்பாளர் வீரேந்திர பாட்டிலைக் காட்டிலும் 70,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கையில் சிக்மகளூர் வெற்றி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு, ஜனதா கட்சி உடைந்தது. மக்களவை கலைக்கப்பட்டு 1980-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்.
இந்திரா காந்தியை அடுத்து அவரது மருமகள் சோனியா காந்தியும் மக்களவையில் இடம்பெற 1999-ல் கர்நாடகத்தின் பெல்லாரி மக்களவைத் தொகுதியிலிருந்தே போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுஷ்மா ஸ்வராஜை நிறுத்தியது பாஜக. ரெட்டி சகோதரர்கள் சுஷ்மாவுக்கு ஆதரவாக நின்றார்கள். ஆனால், சோனியா காந்திதான் தேர்தலில் வென்றார். இப்படி இருமுறை நேரு-இந்திரா குடும்பத்தின் மீது தங்களுக்கிருக்கும் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர் கர்நாடக மக்கள்.
அதனால்தான், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி பெங்களூரு தெற்கில் போட்டியிடுவார் என்ற பேச்சு அடிபட்டது. அந்தத் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரைத் தாமதமாக அறிவித்தது கர்நாடக காங்கிரஸ். ஆனால், ராகுல் காந்தியோ கர்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு இடம்பெயர்ந்து வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.