

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மரகதம் சந்திரசேகர் (1917-2001) சுதந்திரப் போராட்ட வீரர். மத்திய அரசிலும் காங்கிரஸ் கட்சியிலும் முக்கியப் பதவிகளை வகித்தவர். ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு மிகவும் நெருக்கமான சகா. தந்தை வித்வான் களத்தூர் முனிசுவாமி. இந்தியாவில் இளங்கலைப் பட்ட வகுப்பு வரை படித்த மரகதம், லண்டனில் மனை அறிவியல், சிறப்பு நிர்வாகவியல் பட்டயங்களைப் பெற்றார். சிறிது காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
ஐந்து முறை மக்களவை உறுப்பினராகவும் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் மரகதம் சந்திரசேகர். ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் தொடர்ந்து இடம்பெற்றார்.
1972-ல் அனைத்திந்திய காங்கிரஸ் பேரவையின் (ஏஐசிசி) பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் சிறிது காலம் பதவி வகித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான மரகதம் சந்திரசேகரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய 1991 மே 21-ல் வந்தபோதுதான், படுகொலைக்கு ஆளானார் ராஜீவ் காந்தி.