Published : 24 Apr 2019 12:06 PM
Last Updated : 24 Apr 2019 12:06 PM

இளம் வயதிலேயே மூட்டுவலி! - உஷார் ரிப்போர்ட்

ஜெமினி தனா

பனிரெண்டு வயது பிரவீனுக்கு சைக்கிள் ஓட்டுவது பிடிக்கும்.  ஆனால் சமீப நாட்களாக அவனுக்கு மூட்டுவலி. எலும்பு சிகிச்சை நிபுணரிடம் காண்பித்ததில் விழுந்தால் நொறுங்கிவிடும் அளவுக்கு மென்மையான எலும்புகளைக் கொண்டிருக்கும் பிரவீனுக்கு கால்சியம் குறைபாடு என்று கூறி சிகிச்சை தொடங்கியிருக்கிறார். 

  சந்தியாவுக்கு 47 வயது. சிம்ரனைப் போன்ற உடல்வாகு பெறவேண்டும் என்று பிடித்த உணவுகளையெல்லாம் தியாகம் செய்து, கொத்தவரங்காய் கணக்கில்  சிக்கென்று இருந்தவள் திருமணத்துக்குப் பிறகு அழகிய வெள்ளை பூசணிக்காயாய் மாறிப்போனாள். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு  சாதாரணமாக தொடங்கிய கால் வலி, படிப்படியாக  மூட்டுவலியை உண்டாக்கி படிகளில் ஏறமுடியாத அளவுக்கு  கொண்டு வந்துவிட்டிருந்தது. மருத்துவர்களது எச்சரிக்கைகளையும் மீறி வலி  மாத்திரைகளோடுதான் தொடங்குகிறாள், அனுதினமும்!  

  உடல் பருமனைக் குறைத்தாலே மூட்டுவலி  படிப்படியாக குறையத் தொடங்கும். இல்லையென்றால் கூடிய சீக்கிரம் சக்கர நாற்காலிதான்  என்று எச்சரித்திருக்கிறார் மருத்துவர். நடைபயிற்சி செல்லலாம் என்றாலும்  மனமும் உடலும் சோர்ந்துவிடுகிறது என்று சொல்பவர்  பக்கத்துத் தெரு கடைக்கு கூட டூவீலர் இல்லாமல் செல்வதில்லை.

  இப்படித்தான் கண்ணனும். அவருக்கு வயது  அரைசதம். பெரும்பாலான  பயணங்கள்  இரு சக்கர வாகனங்களில்தான்.  கழுத்தெலும்பு தேய்மானம், ஆர்த்ரைட்டீஸ்  என்று போராடிக்கொண்டிருக்கிறார். கைகளை சற்றே அசைத்தாலும், சம்மணமிட்டு அமர்ந்தாலும்  கால்மூட்டுகள் முடங்கும் அளவுக்கு வலியால் துடிக்கிறார்.  அதிக எடையில்லை.  ஆனால் மூட்டுகளில் வலுவில்லை. சிகிச்சையும் மன அழுத்தமும் சேர்ந்து அவரை விரக்திக்கு உள்ளாக்கியிருக்கின்றன.

  எதற்கு இத்தனை உதாரணங்கள்?

ஒற்றை வரியில் எல்லா வயதினரையும் மூட்டுவலி முடக்கி வைத்துள்ளது என்று சொல்லிவிடலாம்தான்.   ஆனால் பிரவீன்,  சந்தியா, கண்ணன் போல் வீட்டுக்குள் ஒருவர் இருப்பது  இன்றைய காலகட்டத்தில் சகஜமாகிவிட்டது. 90 வயதிலும் புளியஞ்சாதம் கட்டிக்கொண்டு பொடிநடையாக நடந்த முப்பாட்டனுக்கு இல்லாத மூட்டுவலி, இன்று  வயது பேதமின்றி அனைவரையுமே படுத்தி எடுக்கிறது..

கடுமையான விபத்துகளில் எலும்பு முறிவுகள் உண்டாகும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதிக கனமான எடைகளைத் தூக்கும் போது மூட்டுகளில் வலி இன்னும் அதிகரிக்கும். ஆனால்  தற்போது கால்களுக்கு ஓய்வு கொடுத்தபிறகும் மூட்டுவலி உண்டாவது சகஜமானது என்றே பார்க்கப்படுகிறது.

ஒரே இடத்தில் முடக்கிவிடும் மூட்டுவலி:

  உடலின் எடையைத் தாங்கக்கூடியதே  மூட்டுகள்தான். மூட்டுகள் என்பது தனி உறுப்பல்ல. அது  எலும்புகள், தசைநார்கள், குருத்தெலும்புகள், தசை நாண்கள் முதலானவற்றை உள்ளடக்கியது.  இவற்றை நம் உடலோடு சேர்த்து உறுதியாக  பிடித்துக்கொள்ள கொலாஜன் என்னும் புரதம் உண்டு.  இந்த கொலாஜன் உற்பத்தியில் குறையில்லாமல் இருக்கும் வரை மூட்டுவலி என்பதோ பிரச்சினை என்பதோ நமக்கு வரவே வராது.

எலும்புகள் இணையும் கைமூட்டு, கால் மூட்டு, தோள் பட்டை மூட்டு, கை மணிக்கட்டு, இடுப்பு மூட்டு, கால்பாத மூட்டு இவை ஆறும் முக்கியமான மூட்டுகள். தற்போது கழுத்து, இடுப்பு, முதுகுத் தண்டு வடத்திலும் தீவிரமான வலியை  அனுபவிக்கிறோம்.. நடக்கவும் படிகளில் ஏறவும் அச்சப்பட்டு ஒரேஇடத்தில் முடங்குபவர்களைப் பார்க்கிறோம்.

மூட்டுவலி அறிகுறிகள்:

 மூட்டுகளில் ஏற்படும் அசெளகரியமான  உணர்வு, அதிக வீக்கம், வலி, எப்போதும் ஒரு உஷ்ணம், நடக்கும்போதோ படிகளில் ஏறும்போதோ  எலும்பில் இருந்து ஒருவித  சத்தங்களைக் கேட்பது அல்லது உணர்வது,   கைகால்களை  நீட்டி மடக்கி உட்காரும்போது ஜிவ்வென்று ஏற்படும் வலி,  சம்மணமிட்டு அமருவதில் சிரமம், நடப்பதில் சிரமம்,  நீண்ட நேரம் நிற்கும் போது ஏற்படும் கால்வலி, மூட்டுகளில் இறுக்கம், கால்களை அசைக்க முடியாமை, வளைந்த கால்கள் இவையெல்லாம் மூட்டுவலிகளின் அடுத்தடுத்த கட்டம்!

கடுமையான மூட்டுவலிக்கு மூட்டு மாற்று சிகிச்சைகள்  உண்டு. அதேநேரம் மூட்டுவலிக்கான சிகிச்சை என்பது வலியை முற்றிலும் நீக்காமல் வலியின் தீவிரத்தைக் குறைக்க மட்டுமே செய்யும் என்பதால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்யாட்டால் தீவிரமான வலியை உண்டாக்கி  ஒரே இடத்தில் முடக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

மூட்டுவலி ஏன் உண்டாகிறது?

   உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் போதிய அளவில் இல்லாமல் இருக்கும்போது எலும்புகள் வலுவிழக்கின்றன. தற்போது குழந்தைகளையும் விட்டுவைக்காத எலும்பு சம்பந்தமான குறைபாடுகளுக்கு காரணம் அம்மாக்கள் தான்.  கர்ப்பகாலத்தில் கால்சியச் சத்துகொண்ட உணவுகள் குழந்தைகளின் எலும்பை வலுவாக்கும். இப்படியான சத்து குறைபாடு ஆகும் போது குழந்தைகளின் எலும்பு மென்மையாக  இருக்கிறது..  உடலை  தூண் போல் தாங்கும் ஆதாரமே எலும்புதான் என்பதால் வலுவிழந்த எலும்பைக் கொண்டு பிறக்கும் குழந்தைகள்  வருங்காலத்தில்  எலும்பு சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகும்போது மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.

   ஆரோக்கிய குறைபாட்டைச் சந்திக்கும்போதெல்லாம் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று சொல்வதை மருத்துவர்களும், உலகசுகாதார அமைப்பும் வலியுறுத்திக்கொண்டே இருப்பதை அறிந்திருக்கலாம்.

உடல் எடையைத் தாங்கும் எலும்புகள் பாதிக்கப்படுவதற்கு முதற்காரணம் உடல்பருமன். இந்த உடல் பருமனை உண்டாக்குவது ஜங்க் புட் வகை உணவுகள்தான். ஆனால் இன்று அனைத்துவயதினரும் இந்தமாதிரியான உணவில்தான்  மயங்கியிருக்கிறார்கள். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்வதால் மூட்டுவலியானது உடனே தன் வருகையை வெளிக்காட்டிவிடுகின்றன.

ஹார்மோன் குறைபாடுகள், கட்டுப்பாடில்லாமல் இருக்கும் நீரிழிவு நோய், மரபு, உடல் உழைப்பின்மை இவையெல்லாம் மூட்டுவலி ஏற்பட காரணங்களாகின்றன.

மருத்துவ ரீதியாக மூட்டுவலிக்கு முக்கிய காரணமாக ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ், கெள்ட் ஆர்த்ரைட்டீஸ் சொல்லலாம். 75% மூட்டுவலிக்கு காரணம் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ்தான். மூட்டுகளில் உள்ள கொலாஜன் எனும் புரதத்தின் அளவு, வயதாகும் போது இயற்கையாகவே குறையும் என்பதால்தான் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்டார்கள். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, நம் மூட்டுகளையும் பதம் பார்ப்பதால் இந்த ருமட்டாய்டு பாதிப்பு உண்டாகிறது.  காலையில் குறைந்தது ஒரு மணி நேரமாவது கை, கால்களை அசைக்கமுடியாது.. இது பரம்பரை நோயாகவும் சொல்லப்படுகிறது. ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது கெளட் ஆர்த்ரைட்டீஸ் உண்டாகும். எலும்பில் நோய்த்தொற்று இருந்தாலும் மூட்டுவலி உண்டாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

  பெண்கள் மாதவிடாய் காலங்களில் கால்சியம் சத்தை அதிகமாகவே இழக்கிறார்கள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.  பிரசவ காலங்களில் இதன் இழப்பு  மேலும் அதிகரிக்கிறது. அதனால்தான் ஆண்களை விட பெண்கள் ஆர்த்ட்ரைட்டீஸ் பிரச்னைகளை அதிகம் சந்திக்கிறார்கள் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

மூட்டுவலியைக் குறைக்க என்ன செய்யலாம்:

மூட்டுவலி லேசாக மினுக்கிடத் தொடங்கும்போதே  உணர்ந்துகொண்டால் ஆரம்ப சிகிச்சையோடு நம் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்து இந்தப் பாதிப்பிலிருந்து நிச்ச யம் மீளலாம்.

முதலில் உடல் எடையைச் சீரான அளவில் வைத்திருக்க வேண்டும்.

வைட்டமின் டி அதிகம் கிடைக்கக்கூடிய சூரிய ஒளியை உடலில் நேரடியாக படும்படி இருப்பது அவசியம்.

கிழங்குவகைகளைத் தவிர்த்து பச்சைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலானவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் அதிகமுள்ள பால் சார்ந்த உணவு வகைகள், முருங்கைக் கீரை வாரம் 4 நாட்களாவது எடுத்துக் கொள்ளுங்கள்.

இயன்றவரை நடைபயிற்சி, நாற்காலியில் அமராமல் கீழே பாய்விரித்து சம்மணமிட்டு அமர்வது நல்லது.

தீவிர மூட்டுவலி இல்லாத பட்சத்தில் வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து இந்திய கழிவறைகளைப் பயன்படுத்துவது நல்லது.

மூட்டுவலி தீவிரமாக இருக்கும்போது ஓய்வு  எடுத்துக்கொள்வதோடு அவை குறையும் நேரத்தில்  நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

கூடுமானவரை வலி நிவாரண மாத்திரைகள், களிம்புகள் எனப்  பயன்படுத்தாமல் மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

 மன அழுத்தத்தாலும் மூட்டுவலி தீவிரமாகும் என்பதால் மனதை அமைதிப் படுத்த எளிய யோகாசனங்கள் மேற்கொள்ளலாம்.

கால்மூட்டுகளில் வலி இருப்பவர்கள் உறங்கும்போது  ஒருக்களித்து படுத்து வலி இருக்கும் கால்களுக்கு தலையணை வைத்துக்கொள்ளலாம்.

பிரண்டையில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் மூட்டு வலியை அண்டவிடாமல் செய்துவிடும். பிரண்டைத் துவையல், பிரண்டைப் பொடி என்று உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.  வலி ஏற்படும்போது பிரண்டையுடன் கல்உப்பு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து, இரும்பு வாணலியில் லேசாக வதக்கி  சூடு தாங்கும் அளவில் வலி இருக்கும் இடத்தில் வைத்து கட்டுவார்கள்.

வாரந்தோறும் எண்ணெய்க் குளியலின் போது நல்லெண்ணெயை சூடுபடுத்தி  மூட்டுகளில் அதிகப்படியாக தேய்த்து மசாஜ் செய்வார்கள். சரும துவாரங்கள் வழியாக எலும்பு மூட்டுகளை இணைக்கும் கொலாஜன் புரதத்தை இது அதிகரிப்பதோடு மூட்டு வாத நோய்களை வரவிடாமல் செய்யும்.

   முடக்காமல் இருக்கச் செய்யும் முடக்கத்தான் கீரை  என்று சொன்ன முன்னோர்கள், இந்தக் கீரையை தோசையாக, குழம்பாக, பொடியாக, துவையலாக  வாரம் ஒருமுறையாவது சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

   இப்போது போல் யோகா, உடற்பயிற்சி எல்லாம் அப்போது கிடையாது. ஆனாலும் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்து உடல் உழைப்பில் குறையில்லாமல் இருந்தார்கள்.  குறிப்பாக எங்கு போனாலும் நடராஜா சர்வீஸ்தான். அதாவது நடந்தேதான் செல்வார்கள்.  

கொஞ்சம் நடப்போம். மூட்டுக்கு வலு சேர்க்கும் உணவுகளைச் சேர்ப்போம். வலியை வரவிடாமல் செய்வோம்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x