

ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர மரணமடைந்த வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் வாழ்ந்த பூமி சிவகங்கைச் சீமை. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், குன்றக்குடி முருகன் கோயில், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், காளையார்கோயில், காளீஸ்வரர் கோயில் எனக் கோயில்கள் நிறைந்த மாவட்டம். தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தற்போது சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், ஆலங்குடி ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.
பொருளாதாரத்தின் திசை: விவசாயமே பிரதான தொழில். சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலை, சிங்கம்புணரி பகுதியில் கயிறு திரித்தல், எண்ணெய் உற்பத்தி, இரும்பு உதிரிபாகங்கள் தயாரிப்பு போன்ற தொழில்கள் உள்ளன. மானாமதுரையில் மண்பாண்ட தொழில், செங்கல் சூளைகள் உள்ளன. மற்றப் பகுதிகளில் சொல்லும்படியான தொழில்கள் எதுவும் இல்லை.
3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. பல ஆயிரம் பேர் வெளிநாட்டில் தொழிலாளர்களாகப் பணிபுரிந்துவருகின்றனர்.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: ராமநாதபுரம் குடிநீர்த் திட்டம் மூலமாக சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. சிவகங்கைக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட காவிரி குடிநீர்த் திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. சிவகங்கையில் வாராந்திர ரயில்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. சிவகங்கை புறவழிச் சாலைத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
நீண்ட காலக் கோரிக்கைகள்: சிவகங்கை கிராபைட் திட்டத்தை விரிவாக்கம் செய்து உபதொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரப்பட்டுவருகிறது. சிவகங்கை ஸ்பைசஸ் பார்க் தொடங்கியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. சுப்பன் கால்வாய்த் திட்டம் 30 ஆண்டுகளாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை. நாட்டாறு கால்வாய்த் திட்டம், காவிரி-வைகை-குண்டாறு திட்டம் போன்றவை கோரிக்கை அளவிலேயே உள்ளது. மதுரையிலிருந்து திருப்பத்தூர், காரைக்குடி வழியாக தொண்டி புதிய ரயில்வே வழித்தடம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காரைக்குடியில் சட்டக் கல்லூரி; மானாமதுரை, காளையார்கோவிலில் கலைக் கல்லூரி; எஸ்.புதூர் பகுதியில் காய்கறி பதப்படுத்தல் கிடங்கு வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது.
ஒரு சுவாரஸ்யம்: கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். 3,354 வாக்குகளில் தோல்வியுற்ற ராஜகண்ணப்பன், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர்ந்தார். வழக்கு முடிவுக்கு வராத நிலையில் இந்தத் தேர்தலில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வழக்கு நிலுவையில் இருப்பதால் கடந்த தேர்தலில் பயன்படுத்திய வாக்குப் பதிவு இயந்திரங்களை இன்னும் பாதுகாத்து வருகின்றனர்.
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இந்தத் தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் அதிகமாக உள்ளனர். யாதவர், முத்தரையர், வல்லம்பர், உடையார், பட்டியலினச் சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர்.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 7 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. தமாகா, திமுக, அதிமுக தலா 2 முறை வென்றுள்ளன. இதில் ப.சிதம்பரம் மட்டும் 7 முறை வென்றுள்ளார். காங்கிரசில் ஆர்.வி.சுவாமிநாதன், அதிமுகவில் தியாகராஜன், செந்தில்நாதன் ஆகியோர் ஒருமுறை வென்றனர். திமுகவில் தா.கிருஷ்ணன் 2 முறை வென்றுள்ளனர்.
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 15,29,698
ஆண்கள் 7,56,734
பெண்கள் 7,72,905
மூன்றாம் பாலினத்தவர்கள் 59
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள்: 88.57%
முஸ்லிம்கள்: 5.55%
கிறிஸ்தவர்கள்: 5.64%
பிற சமயத்தவர் 0.24%
எழுத்தறிவு எப்படி?
மொத்தம் 79.85%
ஆண்கள் 87.92%
பெண்கள் 71.85%
புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.