எப்படியிருக்கிறது இந்தியா?- வடகிழக்கு

எப்படியிருக்கிறது இந்தியா?- வடகிழக்கு
Updated on
2 min read

வடகிழக்கு மாநிலங்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் சமீப ஆண்டுகளாகத்தான் டெல்லியின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகியவற்றை ‘எட்டு சகோதரிகள்’ என்று அழைக்கலாம். நாட்டின் 543 தொகுதிகளில் 25 தொகுதிகள் மட்டுமே இந்த எட்டு மாநிலங்களுக்கும் சேர்த்து இருக்கின்றன; வெறும் 6.4% பிரதிநிதித்துவம். வளங்கள் நிறைந்த வடகிழக்கு  வளர்ச்சியில் பின்தங்கி நிற்பதற்கு மிக முக்கியமான காரணம் இது. இந்த மாநிலங்களின் மொத்த பரப்பளவு 2,55,511 சதுர கி.மீ. அதாவது, நாட்டின் மொத்த பரப்பளவில் 7%. 2011 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4.49 கோடி. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 3.7%.

வடகிழக்கு ஒரு அறிமுகம்

வடகிழக்கு மாநிலங்களில் பெரியது அருணாசல பிரதேசம், சிறியது திரிபுரா. மக்கள்தொகையில் பெரியது அசாம், சிறியது மிசோரம். மக்கள் அடர்த்தி அதிகம் உள்ளது அசாம், குறைந்த அளவு உள்ளது அருணாசல பிரதேசம். எழுத்தறிவில் அதிகம் மிசோரம், குறைந்தது அருணாசல பிரதேசம். ஆண்-பெண் விகிதத்தில் அதிகம் மணிப்பூர், குறைந்தது அருணாசல பிரதேசம். உலகத்திலேயே மிகப் பெரிய ஆற்றுத் தீவு மஜுளி அசாமில் உள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் இது இருக்கிறது. இந்தியாவின் மீக நீண்ட பாலம் பூபேன் ஹசாரிகா பாலம் (தோலா சாடியா பாலம்) லோஹித் ஆற்றின் மீது கிழக்கு அசாமில் கட்டப்பட்டிருக்கிறது. அசாமையும் அருணாசலத்தையும் இணைக்கும் இப்பாலம் வணிகப் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, ராணுவப் பயன்பாட்டுக்கும் இன்றியமையாதது. வடகிழக்கின் மிகப் பெரிய பலம் இங்குள்ள நீர் வளம். பெரிய பலவீனம் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் சாலை வசதி மோசம். பெரிய சவால் பெரும்பாலான மாநிலங்களின் எல்லை அண்டை நாடுகளை ஒட்டி அமைந்துள்ளது.

வடகிழக்கு எதிர்கொள்ளும் சவால்கள்

வடகிழக்கு மாநிலங்களில் உலகத் தரம் வாய்ந்த தேசியப் பூங்காக்கள், காப்புக் காடுகள் உள்ளன. காஜிரங்கா, மனஸ், நமேரி, பால்பக்ராண் தேசியப் பூங்கா அவற்றில் சில. அஹோம், சுடியா, கோச் ராஜ வம்சங்கள் ஆண்ட பகுதி வடகிழக்கு. முகலாய மன்னர்களால் பிடிக்க முடியாத பகுதி வடகிழக்கு. இந்தியாவிலேயே நாகாலாந்து (90%), மிசோரம் (88%), மேகாலயம் (70%) ஆகிய மூன்று மாநிலங்களிலும் கிறிஸ்தவமே பெரும்பான்மை மதம் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும். பழங்குடி இனக் குழுக்கள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில் சாதிப் பிரச்சினை கிடையாது; ஆனால், இந்தப் பழங்குடி இனங்களுக்கு இடையிலான போட்டியும் பிரச்சினைகளும் பெரிய சச்சரவாகும். அதேபோல, பழங்குடியினர் – பழங்குடியல்லாதோர் பிளவும் பெரிய பிரச்சினை.

வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாகவும் வேகமாக வளர்ந்துவரும் நகரமாகவும் குவாஹாட்டி திகழ்கிறது. கடுமையான கோடை, காற்றில் ஈரப்பதம் அதிகம் கொண்ட வெப்பநிலை, கடுமையான பருவமழைக் காலங்கள், இதமான குளிர் கொண்டது வடகிழக்குப் பிராந்தியம். இன்னமும் எஞ்சியிருக்கும் மழைக் காடுகளில் கணிசமான பகுதி வடகிழக்கில்தான் உள்ளது. இந்தியாவில் கிடைக்கக்கூடிய பெட்ரோலிய எண்ணெய், இயற்கை நிலவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு வடகிழக்கில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், பெரிய தொழில் வளம் கிடையாது. இங்குள்ள பெரும் பகுதியினருக்கு ‘இந்தியா’ என்கிற தேசிய உணர்வும் கிடையாது; அந்தந்த மாநில உணர்வும் கிடையாது – அந்தந்த இனவுணர்வே அவர்களை வழிநடத்துவதால், சொந்த நாடு கேட்டு போராடும் அமைப்புகள் அதிகம். சாலைகளில் எங்கும் துணை ராணுவப் படையினரைக் காண முடியும்.

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் இருக்கின்றன. இருநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அரிசி, மீன் முக்கிய உணவுப் பொருள்கள். வடகிழக்கில் பெரிய தொழில் வளம் கிடையாது. விளைவாக, வேலைவாய்ப்புகளும் குறைவு. தமிழ்நாட்டில் இன்று இவ்வளவு வடகிழக்கு இளைஞர்களைக் காண முடிகிறது என்றால், அங்கு நிலவும் வேலைவாய்ப்பின்மைதான் முக்கியக் காரணம். விவசாயத்தை விட்டால் பெரிய வழியில்லை. அரசு வேலைவாய்ப்புக்கு இங்கு மதிப்பு அதிகம். ஆகையால், கோடி ரூபாய் கொடுத்தேனும் அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இங்குள்ள மக்களிடம் உண்டு.

அரசியல் நிலைமை என்ன?

டெல்லியில் அதிகாரத்தை நடத்தும் கட்சிகளே வடகிழக்கு மாநிலங்களில் செல்வாக்கு செலுத்த முடியும். ஏனென்றால், சொந்த வருமானம் இந்த மாநிலங்களில் குறைவு. மத்திய அரசு தரும் நிதிதான் பெரிய வருமானம். ஆகையால், காங்கிரஸ் இங்கு பெரும் செல்வாக்கு செலுத்தியது. இப்போது பாஜக தலையெடுத்திருக்கிறது. ஒரே விதிவிலக்கு திரிபுரா. பல ஆண்டு காலம் அங்கு இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தனர்.

வடகிழக்கு மாநிலங்களில் விசேஷ கவனம் செலுத்தவும் வளர்ச்சியை நோக்கித் திருப்பவும் மன்மோகன் சிங் அரசு பெரிய முயற்சி எடுத்தது. மோடி அரசும் அதே கொள்கையைப் பின்பற்ற முயன்றாலும், பெரிய மாற்றங்கள் உண்டாகவில்லை. எனவே, ஒவ்வொருநாளும் இந்த மாநிலங்களில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. உள்ளூர்க்காரர் – வெளியூர்க்காரர் அரசியலுக்கு இங்கே பெரிய மதிப்புண்டு. பாஜக நம்பியிருக்கும் பெரிய ஆயுதம் இத்தேர்தலில் அதுதான். வங்கதேசத்திலிருந்து குடியேறிவர்கள் பிரச்சினை பெரிய அளவில் புகைந்துகொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மையை காங்கிரஸ் பெரிய பிரச்சினையாகப் பேசிவருகிறது. இரண்டுமே அந்தந்த மாநிலச் சூழல்களுக்கேற்ப பிராந்தியக் கட்சிகளுடன் கை கோத்திருக்கின்றனர். பொதுவில் காங்கிரஸ் கை ஓங்கியிருக்கும் பிராந்தியம் இது. பாஜகவுக்கு இயல்பான பகுதி இல்லை இது என்பதால், கிடைத்தவரை லாபம் எனும் வியூகத்துடன் பாதி இடங்களை நோக்கி காய்களை நகர்த்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in