

சுதந்திரத்துக்குப் பிறகு தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தது 2004 மக்களவைத் தேர்தலில்தான். கூட்டணிக் கட்சிகளின் மூலமே அது சாத்தியமானது. ஏப்ரல் 20 முதல் மே 10 வரை நான்கு கட்டங்களாக நடந்த இந்தத் தேர்தலில், காங்கிரஸுக்கு 145 இடங்கள் கிடைத்தன. பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கிய பாஜகவுக்கு 138 இடங்களே கிடைத்தன. அது தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தமாகக் கிடைத்த இடங்கள் 181. ஆட்சியமைக்கும் வாய்ப்பு அக்கூட்டணியிடமிருந்து கைநழுவியது. இத்தனைக்கும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை, மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என்றே கூறிவந்தன.
அந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் 59, சமாஜ்வாதி 36, பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களில் வென்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட திமுக 16, பாமக 5, மதிமுக 4 தொகுதிகளில் வென்றன. 10 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. மார்க்சிஸ்ட் கட்சி இரண்டு இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களிலும் வென்றன. இந்த முறை பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டது.
தேர்தலுக்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணிக்கு 218 இடங்கள் கிடைத்திருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. மொத்தம் 335 உறுப்பினர்களுடன் ஆட்சியமைத்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொருளாதார மேதையான மன்மோகன் சிங்கைப் பிரதமராக்கியது காங்கிரஸ் தலைமை. சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானது இதுவே முதல் முறை. தலைமைப் பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்ட மன்மோகன் சிங், பிரதமராகப் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 9%-ஐத் தொட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதை எதிர்த்து அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 2008-ல் இடதுசாரிக் கட்சிகள் திரும்பப் பெற்றாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி தப்பியது. 2009 தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்காது என்றே கருத்துக் கணிப்புகள் கூறின. அந்த ஆரூடம் பலிக்கவில்லை!