

தொன்மை வாய்ந்த அதிரம்பாக்கம், குடியம் குகை, நெய்வேலி, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டது திருவள்ளூர். சோழர்கள், பல்லவர்கள், முகலாயர்கள், விஜய நகரப் பேரரசர்கள் ஆண்ட தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக இது இருந்தது. இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியான பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம், வீரராகவப் பெருமாள் கோயில், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள்ஆகியவற்றைக் கொண்ட தொகுதி இது. ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, படை உடைத் தொழிற்சாலை உள்ளிட்டவை இங்கு உண்டு. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.
பொருளாதாரத்தின் திசை: எட்டுக்கும் மேற்பட்ட அரசு, தனியார் தொழிற்பேட்டைகள் இத்தொகுதியில் உண்டு. மோட்டார் வாகன உதிரி பாகங்கள், மின் சாதனங்கள், மின்னணு சாதனங்கள், இரும்புப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என்று பல்வேறு பொருட்களை உற்பத்திசெய்யும் 700-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய், சமையல் எரிவாயு நிறுவனங்கள், எண்ணூர் காமராஜர் துறைமுகம், அனல்மின் நிலையங்கள், தனியார்த் துறைமுகம், கப்பல் கட்டும் தளம், சிமென்ட் ஆலைகள் உள்ளன. நெல், கரும்பு, காய்கறி, பூக்கள் விளைச்சலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: கொசஸ்தலை, ஆரணி ஆகிய ஆறுகளின் குறுக்கே போதிய தடுப்பணைகள் இல்லை. தொகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட ஏரிகளும் பெரும்பாலான வரத்துக் கால்வாய்களும் தூர்வாரப்படாதது உள்ளிட்ட காரணங்களால் மழைக் காலங்களில் நீரைச் சேமித்துவைக்க முடியவில்லை. சென்னையின் குடிநீர்த் தேவைக்காக விவசாய நிலங்களில் அரசே நிலத்தடிநீரை உறிஞ்சுகிறது. ஆறுகள், ஏரிகளில் அரசு அனுமதியோடும் அனுமதியின்றியும் மணல், சவுடு மண் அதிகளவில் எடுக்கப்படுகிறது. கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள பல அரசு, தனியார் நிறுவனங்களின் விதிமீறல்கள் காரணமாகச் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் கொசஸ்தலை, நகரி ஆறுகளின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டுவந்த பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருக்கும்போது, பட்டரைபெரும்புதூர் சுங்கச் சாவடியில் சுங்க வரி வசூலிக்கப்படுவது மக்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது.
நீண்ட காலக் கோரிக்கைகள்: திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி, கலைக் கல்லூரி, மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். அனைத்து விரைவு ரயில்களும் திருவள்ளூரில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். திருவள்ளூரில் புறவழிச்சாலை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. கடம்பத்தூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூர் ரயில்வே மேம்பாலப் பணிகள், சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் கடல் அரிப்பைத் தவிர்க்க நிரந்தர முகத்துவாரம் அமைத்தல், மாம்பழக் கூழ், வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், காய்கறிகளைப் பதப்படுத்தும் மையம் போன்றவை கோரிக்கைப் பட்டியலில் அடக்கம்.
ஒரு சுவாரஸ்யம்: 1952-ல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு தமிழகப் பெண் உறுப்பினர்களில் ஒருவர், திருவள்ளூர் தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகர். ஐந்து முறை மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த மரகதம் சந்திரசேகர், விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். 1984, 1989, 1991 தேர்தல்களில், தற்போதைய திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் பெரும்பகுதிகள் அடங்கிய, அப்போதைய ஸ்ரீபெரும்புதூர்(தனி) தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் வென்றவர்.
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இத்தொகுதியில் பட்டியலினச் சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களுக்கு அடுத்த அளவில் வன்னியர் சமூகத்தினர் வசிக்கின்றனர். முதலியார், நாயுடு சமூகத்தினர், சிறுபான்மையினருக்கும் குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு வங்கி உண்டு. திமுகவும் அதிமுகவும் சம பலத்துடன் இருக்கின்றன. விசிக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளும் கணிசமான வாக்குகளை வைத்துள்ளன.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளது. தற்போதைய திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் பெரும்பகுதிகள் அடங்கிய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், 1967 முதல் ஆறு தேர்தல்களில் திமுகவும், 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸும் வென்றன. நான்கு முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளது.
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 19,20,372
ஆண்கள் 9,49,684
பெண்கள் 9,70,347
மூன்றாம் பாலினத்தவர்கள் 341
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள் 89.21%
கிறிஸ்தவர்கள் 6.27%
முஸ்லிம்கள் 3.84%
இதர சமூகத்தினர் 0.68
எழுத்தறிவு எப்படி?
மொத்தம் 84.03%
ஆண்கள் 89.69%
பெண்கள் 78.32%
கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன.