

பேச்சு, பேட்டி, பத்திரிகை கட்டுரைகள் என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். அவரைச் சந்திக்க வரும் தோழர்களுடன் தொடர்ந்து விவாதிக்கிறார். தென் சென்னை தொகுதியில் பிரச்சாரத்துக்கும் தயாராகிவிட்ட அவரைப் பேட்டிக்காக இல்லத்தில் சந்தித்து, தற்போதைய அரசியல் நிலை குறித்து உரையாடியதிலிருந்து...
மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தெளிவாகச் சொல்லிவிட்டது. திமுக முன்மொழிந்தும்கூட, பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்பதில் இடதுசாரிகளுக்கு என்ன தயக்கம்?
இன்றைய சூழலில் எங்கள் அணியில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும்கூடத் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றாலும், மற்ற கட்சிகளைவிட சற்று கூடுதலான இடங்களைப் பெறுவதன் மூலம் அந்த வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்குத்தான் கிடைக்கும். எனவே, காங்கிரஸ் கட்சி யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறதோ அவர்களைத்தான் நாங்கள் பிரதமராகத் தேர்ந்தெடுக்க முடியும். எனவே, வீண் விவாதம் செய்யாமல், இப்போதே ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது அறிவுக்குப் பொருத்தமானது. அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்காதது கம்யூனிஸ்ட்டுகள் செய்த பெருந்தவறு.
பாஜகவினரால் பப்பு என்று கேலிசெய்யப்படுகிறார் ராகுல். உங்கள் நண்பர் ராஜீவ் காந்தியின் மகன் என்ற முறையில் ராகுலின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
என் மடியில் அமர்ந்து விளையாடிய பையன்தான் ராகுல். பிரியங்காதான் அரசியலுக்கு வருவார். ராகுல் வர மாட்டார் என்று நினைத்தேன். ஆனால், அதைப் பொய்யாக்கி ராகுல் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆரம்பத்தில் அவரது செயல்பாடுகளை விமர்சித்து ‘ஜனசக்தி’யில் நானே கட்டுரை எழுதியிருக்கிறேன். இப்போது நல்ல பயிற்சி பெற்ற அரசியல்வாதியாகவும் மாறிவிட்டார். இன்னும் முதிர்ச்சி பெற வேண்டும் என்பது எனது அபிப்ராயம். எப்படியும் கூட்டு மந்திரிசபைதான் அமையும். எனவே, அவரை வழிநடத்திச் செல்ல முடியும். அவரும் யோசனைகளைக் கேட்கிற மனிதராகத்தான் தெரிகிறார்.
காங்கிரஸ் கட்சி ஒரு ஊழல் மலிந்த கட்சி என்ற பாஜகவின் பிரச்சாரத்தை காங்கிரஸாராலேயே மறுக்க முடியவில்லையே?
முதலாளித்துவம் உள்ள வரையில் ஊழலும் கட்டாயம் நீடிக்கும். முதலாளித்துவ உற்பத்தி முறை, பங்கீட்டு முறை அகற்றப்பட்டு, சமத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி வருகிறபோதுதான் ஊழல் என்பது கட்டுப்படுத்தப்படும். அப்போதும்கூட ஊழல் ஒழிக்கப்படும் என்று சொல்ல மாட்டேன். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகும்கூட ஊழலைக் கட்டுப்படுத்தத்தான் போராடுகிறார்களே தவிர, ஒழிக்க முடியவில்லையே? ஆனால், காங்கிரஸாரை ஊழல் கட்சி என்று சொல்லும் தகுதி இனியும் பாஜகவுக்கு இல்லை. ஊழலைச் சட்டபூர்வமாகவே ஆக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்க முடியும்?
அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர்கூட உபியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடுகிற தொகுதிகளில் நாங்கள் போட்டிக்கு ஆட்களை நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், கேரள கம்யூனிஸ்ட்டுகள் ஏன் ராகுலுக்கு எதிராக இவ்வளவு மூர்க்கமாக முண்டா தட்டுகிறார்கள்?
வகுப்புவாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் கடமையை மறந்து, எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி என்ற அளவிலேதான் எங்கள் இடதுசாரி கட்சித் தலைவர்கள் சிந்திக்கிறார்கள். அது மிக மிகத் தவறு. குடியாத்தத்தில் காமராஜர் போட்டியிட்டபோது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை அண்ணா. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் வீம்புக்கு வேட்பாளரை நிறுத்தித் தோற்றுப்போனார்கள். அப்துல் கலாமைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாஜ்பாய் அறிமுகப்படுத்தியபோது, காங்கிரஸ் உடனடியாக அதை ஏற்றது. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் வெற்றிவாய்ப்பே இல்லையென்று தெரிந்தும் கேப்டன் லட்சுமியை வேட்பாளராக நிறுத்தித் தோற்கவைத்தார்கள். குறைந்தபட்சம் அப்துல் கலாம் யார், அவர் அரசியல் சார்புள்ளவரா என்று என்னைப் போன்ற மாநிலச் செயலாளர்களிடமாவது கருத்து கேட்டிருக்கலாம். அதைக் கண்டித்து அன்றைக்கே பகிரங்கமாகப் பேட்டி கொடுத்தேன். வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதை இவ்வளவு தீவிரமாக எதிர்க்க வேண்டியதில்லை.
‘பொதுவுடைமையரின் எதிர்காலம்’ என்ற நூலை எழுதியவர் நீங்கள். இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மறுமலர்ச்சி வரும் என்று எதிர்பார்க்கலாமா?
ஒருமுறை மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பே இடதுசாரிகளுக்கு வந்தது. அந்த வாய்ப்பைக் காலால் உதைத்துத் தள்ளிவிட்டார்கள் இடதுசாரிகள். இனி ஒருமுறை அத்தகைய தவறைச் செய்யக் கூடாது. கடந்த காலத் தவறுகளிலிருந்து நாம் பாடம் படிக்க வேண்டும். ஆனால், ஒன்று சொல்கிறேன்; இந்தியாவில் பொதுவுடைமைத் தத்துவம் சரிவைச் சந்திக்கத் தலைவர்கள்தான் காரணமே தவிர தத்துவம் கிடையாது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் நிதி உதவி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தத் தேர்தல் அறிக்கையின் கதாநாயகன் 72 ஆயிரம் நிதி உதவித் திட்டம்தான். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் அது ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
- கே.கே.மகேஷ்,
தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in