

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லியும் நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளருமான காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல், நெட்பிளிக்ஸில் கதைத் தொடர் ஆவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மார்க்வெஸ் தன் வாழ்நாளில் சினிமாவுக்குத் திரைக்கதைகளை எழுதியதோடு, தனது பிற நாவல்களைத் திரைப்படமாக்குவதற்கும் அனுமதித்தவர். ஆனால், ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலைத் திரைப்படமாக்குவதற்கு தனது மரணம் வரை சம்மதிக்காமலேயே இருந்தார். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தனது நாவலும், அந்த நாவலின் கற்பனை ஊரான மகோந்தாவும் சினிமாவாக ஆகும்போது சிதைந்துவிடக் கூடாது என்று அவர் நினைத்தார்.
ஆனால், கிராபிக் வடிவமைப்பாளரும், சினிமா இயக்குனருமான மார்க்வெஸின் மகன்கள்தான் நெட்பிளிக்ஸ் கதைத் தொடருக்கு தயாரிப்பாளர்கள். ஆஸ்கர் விருது வாங்கிய ‘ரோமா’ திரைப்படத்துக்குப் பிறகு லத்தீன் அமெரிக்கக் கதைகளுக்கு உலகப் பார்வையாளர்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டுள்ளது.
மேன் புக்கர் பரிந்துரையில் பெண்கள் ஆதிக்கம்
ஐந்து நாடுகள், மூன்று கண்டங்கள், ஐந்து மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆறு எழுத்தாளர்கள் இந்த ஆண்டு மேன் புக்கர் பரிசுக்கான இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளனர். அவர்களில் ஐந்து எழுத்தாளர்கள் பெண்கள். ஓமனைச் சேர்ந்த ஜோகா அல்ஹர்தி, பிரெஞ்சு எழுத்தாளர், ஆனி எர்னாக்ஸ், ஜெர்மானிய எழுத்தாளர் மரியன் போஸ்மன், போலிஷ் எழுத்தாளர் ஓல்கா டோகர்சக், சிலியைச் சேர்ந்த ட்ரபக்கோ ஜெரன் ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ளனர்.