ஜி.வி.மவ்லாங்கர்: மக்களவையின் தந்தை

ஜி.வி.மவ்லாங்கர்: மக்களவையின் தந்தை
Updated on
1 min read

மக்களவையின் முதல் சபாநாயகராகப் பொறுப்பு வகித்த கணேஷ் வாசுதேவ் மவ்லாங்கர் (1888-1956), பம்பாய் மாகாணத்தின் ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞராகப் பணிபுரிந்த அவர் காந்தி, வல்லபபாய் படேல், ஆகியோரின் அறிமுகத்துக்குப் பிறகு ஒத்துழையாமை இயக்கத்திலும் உப்பு சத்தியாக்கிரகத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

1937-ல் பம்பாய் மாகாண சட்டமன்றத்துக்கும், பிறகு தேசிய சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 14 நள்ளிரவின்போது, அவர்தான் தேசிய சட்டப்பேரவையின் தலைவராக இருந்தார். அந்த நள்ளிரவோடு அந்த அவையின் பதவிக்காலம் முடிந்து அதன் பணியை  அரசமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது.  நாடாளுமன்றத்தின் இடைக்கால சபாநாயகராக 1949-ல் பதவியேற்ற மவ்லாங்கர்,  1952-ல் உருவான முதல் மக்களவைக்கும் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜி.வி.மவ்லாங்கரை ‘மக்களவையின் தந்தை’ என்று வர்ணித்தார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அவையை நடத்துவதும் மசோதாக்களை நிறைவேற்றுவதும் மட்டும் அவருடைய பணியாக

இருக்கவில்லை.  அவையின் எல்லாத் தரப்பு உறுப்பினர்களுக் கும் பேச வாய்ப்பு தந்ததுடன் விவாதங்களைச் செறிவுடனும் சிறப்புடனும் நடத்த உதவினார்.

அவையின் கண்ணியம் காக்கப் படுவதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவை நடவடிக்கை யில் அதிகப் பழக்கம் இல்லாத முதல் தலைமுறை உறுப்பினர்கள் ஏராளமாக இருந்ததால், நாடாளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட குழுக்களை அமைத்தல், உறுப்பினர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுதல், அவர்களுடைய தங்குமிடம் மற்றும் அலுவலகப் பணிக்கான உதவிகளை அளித்தல் என்று எல்லாவற்றுக்கும் அவருடைய கவனிப்பும் வழிகாட்டல்களும் அவசியப்பட்டன.

ஏற்கெனவே வெவ்வேறு மேற்கத்திய நாடாளுமன்றங்களில் கையாளப்பட்ட நடைமுறைகள், விதிகள், வழிமுறைகளை அப்படியே பின்பற்றாமல் புதியதாக இந்திய நாடாளுமன்றத்துக்கு ஏற்ப வரையறுக்க வேண்டிய பொறுப்பும் மவ்லாங்கருக்கு ஏற்பட்டது. அவரே, அவையில் கேள்வி நேரம் நிரந்தரமாக இடம்பெறச் செய்தவர். குறுகிய காலக் கேள்விகளுக்கும், அரை மணி நேர விவாதங்களுக்கும் முன்னுதாரணம் ஏற்படுத்தினார். குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதம், நன்றி தெரிவிக்கும் தீர்மானமாக நடைபெறவும் வழிசெய்தார்.

அவையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர் அளித்த தீர்ப்புகள் இன்றைக்கும் பின்பற்றத்தக்க முன்மாதிரிகளாகத் திகழ்கின்றன. ‘மக்களவை செயலகம்’ என்ற அமைப்பு முழுமையடைய அவர் செய்த பங்களிப்பு மகத்தானது. அவருடைய மகன் புருஷோத்தம் மவ்லாங்கரும் குஜராத்திலிருந்து மக்களவைக்கு இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in