Published : 04 Apr 2019 09:38 AM
Last Updated : 04 Apr 2019 09:38 AM

எழுபது லட்சம் உச்ச வரம்பை எந்த அடிப்படையில் தீர்மானித்தார்கள்?

வேட்புமனு தாக்கல் நிறைவுபெறும் நாளிலிருந்து தேர்தல் நடக்கும் நாள் வரையில் கணக்கிட்டால், கிட்டத்தட்ட இருபது நாட்கள்தான் இருக்கும். ஆனால், அந்த இருபது நாட்களுக்கும் ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் செய்ய வேண்டிய செலவு மட்டும் ரூ.12 கோடியைத் தாண்டும் என்கிறார் முப்பதாண்டு காலமாகத் தேர்தல் பணியில் இருக்கும் பிரதானக் கட்சியின் தலைவர் ஒருவர்.

என்னென்ன செலவுகள்?

தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஒரு மக்களவைத் தொகுதிக்குள் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும். இந்தத் தொகுதிகளுக்குள் மட்டும் 1,900-லிருந்து 2,000 வரை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு கட்சி சார்பிலும், வாக்குச் சாவடியில் வேலை பார்க்கிறவர்களுக்காக, தேர்தல் நாளில் மட்டும் ரூ.10,000 செலவழித்தே ஆக வேண்டும். அதாவது, குறைந்தபட்ச செலவு அது. இது மட்டுமே, தொகுதி முழுக்க இருக்கும் வாக்குச் சாவடிகளைக் கணக்கிட்டால், ரூ.2 கோடி.

வாக்குச் சாவடி விவரச் சீட்டு எழுதும் பணி, வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணி, வாக்காளர் பட்டியல்படி விவரச் சீட்டுகளை வீடுதோறும் அளிக்கும் பணி எனத் தேர்தல் நடக்கும் நேரத்தில் மட்டும், இந்தப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஒவ்வொரு முறையுமாக மூன்று தடவைகளாக ரூ. 5,000 கொடுக்க வேண்டும். தொகுதி முழுக்க, இந்தத் தொகையைக் கணக்கிட்டால், அதுவே வருகிறது ரூ.3 கோடி.

தினமும் இருபது இடங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கெல்லாம் கொடிகளும் தோரணங்களும் கட்டுவது, 2,000 பேருக்கு மேல் ஆட்களைக் கொண்டுவந்து சேர்ப்பது, மைக் செட், விளக்கு போன்ற செலவுகளுக்காக ரூ.1 கோடி செலவாகிறது. தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் தடையால் இந்தத் தடவை கொடிகள், தோரணங்களுக்கான செலவுகள் மட்டும் குறைய வாய்ப்பிருக்கிறது.

பிரசாரத்துக்காக அணிவகுத்துப்போவதில் குறைந்தபட்சம் ஐம்பது வாகனங்களாவது, தொகுதி முழுவதும் சுற்றிவர வேண்டும். அப்படி வாகனங்கள் சுற்றிவரும்போது பெட்ரோல், ஓட்டுநர் கூலி, மேலும் மூவருக்கான செலவுகள், அவர்களுக்கான உணவு என்று தலா ஒரு வாகனத்துக்கான செலவு மட்டும் ரூ.10,000. கிட்டதட்ட அது மட்டுமே ரூ.1 கோடியைத் தொடுகிறது.

பணம் இல்லாமல் பிரச்சாரம் இல்லை

நட்சத்திரப் பேச்சாளர்கள் வந்துபோக வாகனம், அதற்கான செலவு, தங்குமிடம், சாப்பாடு, போன்றவற்றுக்காக ஒரு நாளைக்கு ரூ.50,000 என வைத்துக்கொண்டால், இருபது நாட்களுக்கும் சேர்த்து ரூ.10 லட்சம். தொகுதிக்குள் கட்சியின் தலைவர் வருகிறார் என்றால், பிரம்மாண்டமான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வது, விளக்கு, அலங்காரம் உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை செலவாகும்.

அடுத்து, வேட்பாளருக்கான ஒரு நாள் செலவு - அவரோடு திறந்த ஜீப், இரண்டு கார்கள், மூன்று ஆட்டோக்கள் எனப் பிரசாரத்துக்காகச் செல்லும் போது, குறைந்தபட்சம் கொடி பிடித்த நிலையில், இருபது கட்சிக்காரர்களாவது பின்தொடர வேண்டும். இவர்களின் உணவு, பெட்ரோல், டீசல் என ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ரூ.50,000 செலவு என எடுத்துக்கொண்டால், இருபது நாட்களுக்கு ரூ.10 லட்சம் வருகிறது. நோட்டீஸ், பேனர், விளம்பரச் செலவுகளுக்காக மட்டும் ரூ.50 லட்சம்.

இந்தச் செலவுகள் எதையுமே எந்த வேட்பாளரும் தவிர்க்க முடியாது. வாக்காளர்களைக் கவருவதற்காக, ஒருவர் ஐந்து பைசாவைச் செலவு செய்யவில்லை என்றாலும்கூட, நடைமுறையில் மேற்சொன்னவற்றையெல்லாம் ஒவ்வொருவரும் செய்துதான் ஆக வேண்டும். அதற்கான செலவு மட்டுமே ரூ.12 கோடி வருகிறது.

இந்தச் செலவுகளெல்லாம் மிகவும் வெளிப்படையாகத்தான் நடக்கின்றன. இது தேர்தல் ஆணையத்துக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். இருந்தபோதும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் மட்டுமே செலவழிக்க வேண்டும் என்று வரம்பு நிர்ணயித்துள்ளது. ஆனால், ஒரு சிலர் மீது மட்டுமே கூடுதலாகச் செலவழித்தார் என்று வழக்குகள் போடப்படுகின்றன. தேர்தல் வழக்கில் யாரையும் கைதுசெய்வதில்லை.

நடைமுறை யதார்த்தம்

விருப்ப மனு போட்டு, நேர்காணலுக்கு வரும் கட்சிக்காரர்கள், ‘உங்களால் தேர்தலுக்காக எவ்வளவு செலவிட முடியும்?’ என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, பணக்காரர்களே வேட்பாளர்களாகவும் நிறுத்தப்படுகிறார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போது தொகுதிப் பங்கீடுகளைக் காட்டிலும் தேர்தல் செலவுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. நடைமுறை யதார்த்தம் இதுதான்.

வேட்பாளர்கள் குறிப்பிட்ட வரம்புக்குள்தான் செலவழிக்க வேண்டும் என்பது விதிமுறையாக மட்டுமே இருக்கக் கூடாது. வேட்பாளர்கள் அதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் தேர்தல் ஆணையம் உண்டாக்க வேண்டும். தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் செலவை அரசாங்கமே ஏற்கும் நிலையை நோக்கி நாம் நகர வேண்டும். அதுதான் ஜனநாயகம் செழிக்க வழி!

- புதுமடம் பி.ஜாபர் அலி,

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x